
அன்புள்ள அம்மா...
என் வயது, 15; தனியார் பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கும் மாணவி. அன்று வகுப்பில், என் தமிழாசிரியர் பரண் அமைப்பு உள்ள பழங்காலத்து வீடுகளை பற்றி பாராட்டி பேசினார்.
என் வீட்டில் பரண் இல்லை. உங்கள் உறவு முறை வீட்டில், பரண் பார்த்திருக்கிறீரா... பரண் என்ற அமைப்பு ஒரு வீட்டுக்கு தேவையா... பரண் பற்றி சுவாரசியமான தகவல்கள் இருந்தால் கூறுங்கள். கூடுதலாக விபரங்களை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
இப்படிக்கு,
ஆர்.மித்திகா ஜெகன்.
அன்பு மகளே...
உன் ஆர்வம் வியப்பு தருகிறது. இது போன்ற விபரங்களை அறிந்து கொள்வது மாற்றங்களுக்கு மிகவும் உதவும். சரி... உனக்கான விடையை தேடுவோம்... வீட்டின் அறைகளில், எட்டடி உயரத்தில், கூரையின் அடிப்பகுதியில் தனியாக அமைத்திருக்கும் தடுப்பு அமைப்பே, பரண் எனப்படுகிறது.
பொதுவாக, பரண் இருட்டாகவே இருக்கும். வீட்டில் புழங்காத பழைய பொருட்கள் போட்டு வைத்து ஒதுக்குமிடமாக உள்ளது. அதற்குள், ஒருவர் சற்றே தலைகுனிந்தபடி நடமாடலாம்.
இப்போது அமைக்கும் வீடுகளில், பரணுக்கு பதில், ஒவ்வொரு அறையிலும், சிமென்ட் ஸ்லாப் நீட்டி, மூன்றடி உயர, 15 அடி நீளமுள்ள, 'பெர்த்' அமைக்கின்றனர். மனிதரை தவிர, அனைத்து சாமான்களும் அங்கு போடப்படுகிறது.
பரணை பழங்காலத்தில் அட்டாளி, அட்டாலை, மேல்தட்டு, மச்சு, இதணம், சது என்றும் அழைப்பர். கிழக்கு திசையில், பரண் அமைக்கக் கூடாது என்ற வழக்கம் இருந்தது. சமையல் அறையில் பரண் தேவை எனில், வடக்கு மற்றும் தெற்கு திசையில் அமைக்கலாம் என்ற நடைமுறை இருந்தது. படுக்கை அறையில், பரண் அமைத்தால் ஆபத்தாக முடியும். எனவே, அங்கு பெரும்பாலும் அமைத்தது இல்லை.
பரண் மேல் ஆடு வளர்த்தல் லாபகரமாக அமையும். ஆடு வளர்ப்பதில் இருவகை பரண்கள் உண்டு. ஒன்று, நகரும் பரண். மற்றது நகராத நிலை பரண். ஆடு வளர்க்கும் பரணில், 'டிரைசெல்மேட்'டால் ஆன, பிளாஸ்டிக் தரை அமைக்கப்படுகிறது. ஆடுகளை மேய்ச்சலுக்கு விடாமல் நேரடியாக பேணி பாதுகாத்து வளர்க்க இது உதவுகிறது.
வேட்டையாடுவோர், மரத்தில் பரண் அமைத்து, காட்டில் உலாவும் மிருகங்களை வேவு பார்ப்பர். பாதுகாப்பான இடத்தில், நாற்புறமும், காவல் பரண் அமைத்து, நாட்டை பாதுகாக்கும் துப்பாக்கி வீரர்கள் கண் துஞ்சாது பணிபுரிவர்.
சுற்றுலா சென்றால் மலைப்பகுதியில், 'ரிசார்ட்' என்ற நவீன தங்கும் இடங்களை காணலாம். அங்கு மரங்களில், பரண் அமைத்து, சுற்றுலா பயணியர் பயன்படுத்தும் விதமாக வாடகைக்கு விடுவர். ஒரு கணவன், மனைவியிடம் கோபித்து மரத்தில் அமைத்திருந்த பரண் மீது பல மாதங்கள் குடியிருந்ததாக ஒரு செய்தி படித்திருக்கிறேன்.
என் அம்மா வழி பாட்டி, மதுரையில் இருந்தார். அவர் வீட்டில் பரண் உண்டு. அதில் ஏற, ஒரு மூங்கில் ஏணி சாத்தி வைத்திருப்பார் பாட்டி. அவருக்கு தெரியாமல், பரணில் ஏறுவோம். அங்கிருக்கும் மின்சார குண்டு பல்பை, 'ஆன்' செய்வோம். காற்றோட்டம் அதிகம் இன்மையால் பரண் மீது ஒரு வகை வாசனை வீசும். மூன்று வரிசையில் ஒரே நேரத்தில், 18 இட்லிகள் அவித்தெடுக்கும் பெரிய பித்தளை குண்டான் அங்கு இருக்கும்.
மிகப்பெரிய கம்பியில் கோர்த்து வைக்கப்பட்டிருக்கும், இன்லேன்ட் கடிதங்களும், போஸ்ட் கார்டுகளும் போட்டு வைக்கப்பட்டிருக்கும். மரபாச்சி பொம்மைகள், கிணற்றுக்குள் பொருட்கள் எடுக்கும் பாதாளக் கரண்டி, கல்கி, சாண்டில்யன், தமிழ்வாணன் எழுதி இதழ்களில் வெளி வந்த கதை பைண்டிங்குகளை அங்கு பார்த்திருக்கிறேன்.
ஒருமுறை, அந்த பொருட்களுக்கு இடையே ஒரு ஜோடி புனுகுப் பூனைகள் இருந்ததை கண்டேன். எங்களை பரணில் பார்த்த பாட்டி, பெருங்கூச்சல் இட விழுந்தடித்து இறங்கி ஓடி விட்டோம். அது ஒரு நிலாக்காலம்! இப்போது பரணுள்ள வீடு யாரும் கட்டுவதாக தெரியவில்லை.
- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.