தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/தூக்கம்!

தூக்கம்!

தூக்கம்!


PUBLISHED ON : மே 23, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 23, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சந்தோஷ் என்பவன் ஆனந்தமாக உறங்கிக் கொண்டு இருந்தான். அவனுடைய வயதையொத்த அனைவரும் வேலைக்குச் சென்று தன் குடும்பத்தைக் காப்பாற்றிக் கொண்டிருந்தனர். வயதான தந்தையருக்கு ஓய்வு கொடுத்து, அவர்களைக் கண்கலங்காமல் காப்பாற்றிக் கொண்டிருந்தனர்.

சந்தோஷ் தந்தையாருக்கோ தள்ளாத வயது. அந்நிலையிலும் அவர் வேலைக்குச் சென்று குடும்பத்தைக் காப்பாற்றிக் கொண்டிருந்தார். சோம்பேறியாக உறங்கிக் கொண்டி ருந்தால் வாழ்க்கையில் உயரவே முடியாது என்று அவர் சந்தோஷுக்கு பலமுறை எடுத்துக் கூறியும் அவன் கேட்கவில்லை.

காலைச் சிற்றுண்டி உண்டு விட்டு உறங்குவான். பிறகு மதிய உணவுக்குத்தான் எழுந்திருப்பான். பிறகு மதியம் உண்டு விட்டு, உறங்கிவிடுவான். சந்தோஷ் தாயார்தான் சமையல் முதல் துணி துவைக்கும் அனைத்து வேலைகளையும் செய்து வந்தாள். துணி துவைப்பதற்கு கிணற்றிலிருந்து ஒரு வாளி தண்ணீர் கூட சந்தோஷ் இறைத்து வைக்க மாட்டான். இவ்வளவு ஏன்? தான் சாப்பிட்ட தட்டைக் கூட அவன் எடுப்பதில்லை.

சந்தோஷ் தாயார் தன் கணவரிடம், ''சந்தோஷுக்கு திருமணம் செய்து வைத்தால், அவனுக்குப் பொறுப்பு வந்துவிடும். அவன் சுறுசுறுப்பாக உழைப்பான்,'' என்று கூறினாள்.

''இந்தச் சோம்பேறியைத் திருமணம் செய்துகொண்டால், நமக்கு வருகிற மருமகளும் துன்பப்படுவாள். அதனால் இவனுக்கு இப்போது திருமணம் செய்து வைக்க வேண்டாம்!'' என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.

ஒருநாள் அந்த ஊருக்கு ஒரு சாது வந்தார். அவர் ஒவ்வொரு ஊராகச் சென்று மக்களுக்கு நல்ல கருத்துக்களைப் போதித்து வந்தார். அவருடைய உபதேசத்தால், பலபேர் திருந்தி நல்லவர்களாக மாறினர்.

அந்தச் சாதுவைப் பார்க்க சந்தோஷ் தந்தையார் அவனை அழைத்துச் சென்றார்.

ஊர் மக்களே அவரைப் பார்க்கவும், அவர் என்ன பேசப்போகிறார் என்பதைக் கேட்கவும் அங்கு திரண்டிருந்தனர். அவர் பின்வருமாறு பேசினார்.

''அன்பர்களே! இன்றைக்கு இங்கு நான் அவ்வையார் இயற்றிய ஆத்திசூடியில் உள்ள 'அனந்தல் ஆடேல்' என்ற பாடலின் விளக்கத்தைக் கூறப் போகிறேன். கவனமாக கேளுங்கள்.

''அனந்தல்' என்றால் தூக்கம். அனந்தல் ஆடேல் என்றால், 'நீண்ட நேரம் உறங்காதே!' என்று பொருள். மனிதனுக்குத் தூக்கம் மிக முக்கியம். அதே வேளையில் அதிக நேரம் உறங்கினால், ஒரு மனிதன் சோம்பேறியாகி விடுவான். இதனால் அவன் எதிர்காலமே பாதிக்கப்படும்.

''ஒருமனிதன் ஒரு நாளைக்கு ஐந்திலிருந்து ஆறுமணி நேரம் தூங்கினால் போதுமானது. விழித்திருந்து உழைத்தால் நாம் நம்வாழ்வில் வெகுவிரைவிலேயே முன்னேறலாம். நான் சொல்வதை நீங்கள் நம்பவில்லையானால் நீங்கள் நடைமுறை வாழ்க்கையில் நான் சொன்னதைக் கடைப்பிடித்துப் பாருங்கள். அதனுடைய அற்புதம் உங்களுக்குத் தெரியும்,'' என்றார்.

சாதுவின் பேச்சு முடிந்தபின் அனைவரும் வீட்டிற்குச் சென்றனர். சாதுவின் பேச்சு, சந்தோஷ் மனதில் ஓர் எழுச்சியை உண்டு பண்ணி விட்டது.

மறுநாள் முதல் அவன் சுறுசுறுப்பாக உழைக்கத் தொடங்கிவிட்டான். இப்போ தெல்லாம் அவன் நீண்ட நேரம் உறங்குவதே இல்லை. குடும்பப் பொறுப்பை ஆர்வமுடன் தானே சுமந்தான். கைநிறைய சம்பாதித்தான். அவனுடைய மாற்றத்தைக் கண்டு அவனுடைய பெற்றோர் பெருமகிழ்ச்சி அடைந்தனர். அவனுக்கு நல்ல இடத்தில் பெண் பார்த்துத் திருமணம் செய்து வைத்தனர். சந்தோஷ் சந்தோஷமாக வாழ்ந்தான்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us