PUBLISHED ON : ஜன 01, 2022

நிறைய பணத்துடன் ரயில் வண்டியில் பயணித்து கொண்டிருந்தார் வியாபாரி.
பத்திரமாக வீடு திரும்ப வேண்டுமே என்ற கவலை அவரை வாட்டியது.
எதிர் இருக்கையில், கூர்மையாக அவரை கவனித்து கொண்டிருந்தான் ஒருவன்; திருடன் போல தோன்றியதால், பணத்தை பாதுகாப்புடன் வைத்திருக்க முடிவு செய்தார்.
பணமிருந்த பையை மடியில் கட்டி கொண்டார். எதிரில் இருந்தவன், அதை அபகரிக்கும் வழிகளை தேடியபடி இருந்தான்.
நள்ளிரவில் நன்றாக துாங்கி விட்டார் வியாபாரி. இதை உறுதி செய்தபின், அவரது மடியை சோதனை செய்தான். பணத்தை காணவில்லை.
பரபரப்புடன் அவரது உடைமைகளையெல்லாம் சோதித்தான். எங்கு தேடியும் பணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை; மிகவும் சோர்ந்து, உறங்கி விட்டான்.
மறுநாள் காலை, முகம் கழுவி இருக்கையில் அமர்ந்திருந்தவனுக்கு ஆச்சரியம்!
பணத்தை எண்ணி சரி பார்த்துக் கொண்டிருந்தார் வியாபாரி.
கட்டுபடுத்த இயலாமல் மிகுந்த ஆர்வத்தில், 'ஆமாம்... இரவில் அந்த பணத்தை எங்கு வைத்திருந்தீர்கள்...' என்றான் திருடன்.
சிரித்தபடி, 'உன், தலையணையின் அடியில் தான் வைத்திருந்தேன்; நீ அதை கவனிக்கவில்லை. உன் உடைமைகளையும் சோதிக்கவில்லை; அதனால் என் பணம் தப்பியது...' என்றார்.
அசடு வழிந்தான் திருட்டு புத்தியுள்ளவன்.
செல்லங்களே... புத்திசாலித்தனமாக செயல் பட பழகுங்கள்.
பிரேமா சாந்தாராம்
