PUBLISHED ON : மே 23, 2014

ஒரு ஊரில் ரவி என்ற இளைஞன் வசித்து வந்தான். அவனுக்கு இயற்கையிலேயே புல்லாங்குழல் வாசிக்கிற திறமையிருந்தது. அவன் தன்னுடைய புல்லாங்குழலை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு ஊராக புல்லாங்குழலை வாசிக்கச் சென்று விடுவான். ஊரில் அவனது புல்லாங்குழல் இசையைப் பாராட்டி, ஊர் மக்கள் ஏராளமான அன்பளிப்புகளை அவனுக்கு வழங்குவர். அதில் கிடைக்கும் பணத்தைச் செலவு செய்தபடி ஒவ்வொரு ஊராக சுற்றித் திரிந்து கொண்டிருந்தான்.
ஒருநாள் அவன் பண்ணைபுரம் என்ற ஊருக்கு வந்தான். அந்த ஊரில் ராமைய்யா என்ற பண்ணையார் வசித்து வந்தார்.
ரவி அவர் வீட்டுத் திண்ணையில் அமர்ந்தவாறு புல்லாங்குழலை வாசித்து வந்தான். அவன் புல்லாங்குழல் இசையைக் கேட்டதும் தெருவில் வருவோர், போவோரெல்லாம் அவன் இருந்த வீட்டுத் திண்ணையின் முன்னே பெரும் கூட்டமாக கூடிவிட்டனர்.
ரவியின் புல்லாங்குழல் இசையில் மயங்கிய அவர்கள் தாராளமாக தங்கள் கையில் இருந்த பணங்களை அவனுக்கு அன்பளிப்பாக வழங்கினர். அந்த நேரத்தில் பண்ணையார் தன் குடும்பத்தோடு வெளியூர் சென்றுவிட்டு அப்போதுதான் வீட்டிற்குத் திரும்பி வந்தார்.
தன் வீட்டுத் திண்ணையின் முன்னே மக்கள் பெருங்கூட்டமாக கூடியிருப்பதைக் கண்டு வியப்புற்றார். பின்னர் ரவியின் புல்லாங்குழல் இசையைக் கேட்டதும் மனம் மகிழ்ந்தார். ஆனால், ரவிக்கு அன்பளிப்பாகப் பணம் கிடைப்பதைப் பார்த்ததும் பொறாமை அடைந்தார்.
மகா கஞ்சத்தனம் பிடித்த அவர் அனை வரையும் கூச்சலிட்டு விரட்டத் தொடங்கினார். ஆனால், யாருமே அந்த இடத்தை விட்டுச் செல்லவில்லை. எல்லாரும் ரவியின் புல்லாங்குழல் இசையைக் கேட்டப்படி தங்களையே மறந்து நின்று கொண்டிருந்தனர்.
உடனே பண்ணையார் ரவியின் அருகே சென்றார்.
''இதோ பாரப்பா, நீ எப்படி என் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து புல்லாங்குழல் வாசிக்கலாம்?'' என்று கோபத்துடன் கேட்டார்.
''ஐயா, எல்லா இடத்திலும் நல்ல வெயிலாக இருந்தது. இந்த இடத்தில் தான் நிழலாக இருக்கிறது. அதனால்தான் தங்கள் வீட்டுத் திண்ணை நிழலில் அமர்ந்து நான் புல்லாங்குழல் வாசித்தேன்,'' என்று கூறினான்.
''அப்படியானால் என் வீட்டுத் திண்ணை நிழலில் நீ அமர்ந்ததற்கான வாடகைப்பணம் ஆயிரம் ரூபாய் கொடு,'' என்றார் பண்ணையார்.
ரவி சிறிது நேரம் யோசனை செய்தான். பின்னர் பண்ணையாரைப் பார்த்தான்.
'ஐயா, நான் ஆயிரம் ரூபாய் தருகிறேன். நீங்கள் உங்கள் வீட்டு நிழலை எனக்கு விற்பனை செய்து விடுங்கள்,'' என்று கூறினான். அதனைக் கேட்ட பண்ணையாரோ மனதுக்குள் மகிழ்ச்சியடைந்தார்.
'முட்டாள், நிழலை யாராவது விலைக்கு வாங்குவார்களா? இவன் நிழலை நம்மிடம் விற்பனை செய்யுமாறு கூறுகிறானே, சரி, சரி, வந்த வரைக்கும் லாபம்தான். நாம் இவனிடம் இருந்து ஆயிரம் ரூபாயை வாங்கிக் கொண்டு நிழலை அவனுக்கே விற்பனை செய்து விட்டதாகக் கூறி விடுவோம்' என்று மனதுக்குள்ளே எண்ணியபடி ரவியைப் பார்த்தார் பண்ணையார்.
''இதோ பாரப்பா, நீ எனக்கு ஆயிரம் ரூபாயைக் கொடுத்து விடு, நான் என் வீட்டில் உள்ள மொத்த நிழலையும் உனக்கே விற்பனை செய்து விடுகிறேன்,'' என்று கூறினார் பண்ணையார்.
ரவியும் மகிழ்ச்சியுடன் தன்னிடம் இருந்த பணத்தையெல்லாம் எண்ணி யெடுத்து ஆயிரம் ரூபாயை பண்ணை யாரிடம் கொடுத்தான்.
''இங்கு கூடியிருந்த மக்களே, என் இசையின்பால் ஈர்க்கப்பட்ட அன்பு ரசிகர்களே, நான் இந்த வீட்டுக்காரரின் வீட்டில் இருக்கிற மொத்த நிழலையும் ஆயிரம் ரூபாய்க்கு விலைக்கு வாங்கி வந்து விட்டேன். அதற்கு நீங்கள்தான் சாட்சி,'' என்றான்.
அங்கு கூடியிருந்தவர்களும் சரியென தலையை ஆட்டிக் கொண்டனர்.
ரவியை ஏமாற்றி ஆயிரம் ரூபாயினை வாங்கிவிட்ட மகிழ்ச்சியில் தன் குடும்பத்தை அழைத்துக்கொண்டு வீட்டினுள் சென்றார் பண்ணையார்.
அன்று மதிய நேரம் தன் குடும்பத் தோடு அமர்ந்து வீட்டினுள்ளே அறுசுவை உணவை உண்டு கொண்டிருந்தார் பண்ணையார். அந்த நேரத்தில் கூரை ஓடுகள் எல்லாம் சுக்கல் சுக்கலாக உடைந்து அவர் தலையில் கொட்டின.
திடுக்கிட்டப்படி எழுந்துகொண்ட பண்ணையார் தன் குடும்பத்தாரை எல்லாம் பாதுகாப்பாக வீட்டின் வெளியே கொண்டு வந்து நிறுத்தினார். பின்னர் கூரையைப் பார்த்தார்.
ஓட்டுக் கூரையின் மேலே படர்ந்த நிழலில் ரவி அமர்ந்து புல்லாங்குழல் வாசிக்கத் தொடங்கினான்.
பண்ணையாரோ கோபத்துடன் ரவியை பார்த்து கத்தினார். ஓட்டுக் கூரையை விட்டுக் கீழே இறங்கும் படியாக எச்சரிக்கை செய்தார்.
ரவியோ பண்ணையாரின் பேச்சைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் வேகமாக புல்லாங்குழல் வாசிக்கத் தொடங்கினான். அவன் புல்லாங்குழல் இசையைக் கேட்டதும், ஊர்மக்கள் எல்லாரும் ரவியின் இசையை கேட்கக் கூடி விட்டனர்.
ரவியும் புல்லாங்குழல் வாசித்தபடியே கூரை ஓடுகள் எல்லாம் நொறுங்கி கீழே விழும்படியாக பண்ணையாரின் வீட்டுக் கூரையில் நிழல் எங்கெல்லாம் படர்ந்திருக் கிறதோ அங்கெல்லாம் போய் அமர்ந்தான்.
இன்னும் சிறிது நேரத்தில் ரவி தன் வீட்டு ஓடுகளை எல்லாம் உடைத்து நொறுக்கி விடுவான் என்பதை உணர்ந்த பண்ணையார் ரவியைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டார்.
''இதோ பாரப்பா, உன்னை நான் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். நீ எப்படியாவது ஓட்டுக் கூரையை விட்டுக் கீழே இறங்கி விடு,'' என்றார் பண்ணையார்.
''ஐயா, நான்தான் உங்கள் வீட்டு நிழலை எல்லாம் ஆயிரம் ரூபாய்க்கு விலைக்கு வாங்கியுள்ளேன். நானெப்படி கீழே இறங்க முடியும்? நிழல் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் நானும் இருப்பேன்,'' என்றான் ரவி.
''ஐயோ, என்னை மன்னித்து விடு. நான் தெரியாத்தனமாக உன்னை முட்டாள் என்று நினைத்து நிழலை உனக்கு விற்பனை செய்தேன். இப்போது உன்னிடமிருந்து வாங்கிய ஆயிரம் ரூபாயை கொடுத்து விடுகிறேன். ஆனால், கூரை ஓடுகளை மட்டும் சேதப்படுத்தாதே,'' என்றார் பண்ணையார்.
''ஐயா, நான் எப்போதுமே வியாபாரத்தில் பின்வாங்க மாட்டேன். நீங்கள் என்னிடம் வற்புறுத்திக் கூறுவதால் பின்வாங்கலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டேன். நீங்கள் எனக்கு இன்னும் அதிகமாக ஆயிரம் ரூபாய் கொடுங் கள். உங்களிடம் இருந்து இரண்டாயிரம் ரூபாய் வாங்கிய பின்னர்தான் நான் ஓட்டுக் கூரையை விட்டுக் கீழே இறங்குவேன். ஏணியை வைத்து ஏறி வந்து எனக்கு இரண்டாயிரம் ரூபாயினைக் கொடுங்கள்,'' என்றான்.
அதனைக் கேட்ட பண்ணையாரோ திடுக்கிட்டார்.
சுற்றி நின்றபடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஊர் மக்கள் எல்லாரும், ''பண்ணையாருக்கு சரியான அடி கிடைத்து விட்டது. அவரின் கஞ்சத்தனத்திற்கு சரியான தண்டனை கிடைத்துவிட்டது. இந்த இசைக் கலைஞன் அறிவாளியாக இருக்கிறான். அதனால், தன்னை ஏமாற்ற நினைத்த பண்ணையாரை அவனே ஏமாற்றி விட்டான்,'' என்று ரவியை புகழ்ந்து பாராட்டினர்.
அதனைக் கேட்ட ரவியும், மகிழ்ச்சியுடன் பண்ணையாரை நோக்கினான். உடனே பண்ணையாரும் ரவி கேட்டபடியே இரண்டாயிரம் ரூபாயினைக் கொடுத்தார்.
ரவி அந்த பணத்தை வாங்கிய பின்னரே ஓட்டுக் கூரையை விட்டுக் கீழே இறங்கினான்.
***
