தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அதிமேதாவி அங்குராசு - உலகை இணைக்கும் சூயஸ் கால்வாய்!

அதிமேதாவி அங்குராசு - உலகை இணைக்கும் சூயஸ் கால்வாய்!

அதிமேதாவி அங்குராசு - உலகை இணைக்கும் சூயஸ் கால்வாய்!


PUBLISHED ON : நவ 18, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 18, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சூயஸ் கால்வாய், செயற்கையாக உருவாக்கப்பட்ட நீர் வழிப்பாதை. சர்வதேச அளவில் வர்த்தகத்தில் துணை நிற்கிறது. வடக்கு ஆப்ரிக்க நாடான எகிப்து சினாய் மலைக் குன்றுகளின் நடுவில் அமைந்து உள்ளது. மத்தியதரை கடல் - செங்கடலை இணைக்கிறது. இந்த கால்வாய், 193 கி.மீ., துாரமும், 300 மீட்டர் அகலமும், 72 அடி ஆழமும் உடையது. நவம்பர் 17, 1869ல் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது.

பண்டை காலத்தில், எகிப்து பகுதியை ஆட்சி செய்த பாரோ மன்னர்கள், இந்த பகுதியில், நீர்த்தேக்கங்களை இணைத்து கால்வாய் வெட்டியிருந்தனர். பின், அது கவனிப்பாரற்று கிடந்தது. ஐரோப்பிய நாடான பிரான்ஸ் அதிபர் நெப்போலியன், எகிப்து மீது படையெடுத்த போது, இந்த கால்வாய் திட்டம் பற்றி சிந்தித்தார். செலவு அதிகம் என கைவிட்டார்.

பின், பிரான்ஸ் பொறியியல் நிபுணர் பெர்டினாண்ட் டி லெஸ்சிப்ஸ், சர்வதேசக் கப்பல் போக்குவரத்துக்காக, இங்கு கால்வாய் அமைக்கும் முயற்சியில், கடந்த, 1854 காலப்பகுதியில் ஈடுபட்டார். அப்போது, எகிப்தை ஆட்சி செய்த முகமது சையத் பாஷாவுடன் ஒரு ஒப்பந்தம் செய்தார்.

இதன் விளைவாக, சூயஸ் கால்வாய் அமைக்க சர்வதேச ஆணையம் அமைக்கப்பட்டது. இதில், ஏழு நாடுகளைச் சேர்ந்த, 13 நிபுணர்கள் அங்கம் வகித்தனர். கால்வாய் பணி, ஏப்ரல் 25, 1859ல் துவங்கி, 10 ஆண்டுகள் நீடித்தது.

சூயஸ் கால்வாய் விரிவாக்க பணியை, 2015ல் மேற்கொண்டது, எகிப்து. முக்கிய வழியை ஒட்டி, 35 கி.மீ., துாரத்துக்கு மற்றுமொரு பாதை அமைத்தது. இதனால், இரு வழியில் கப்பல் போக்குவரத்துக்கு வசதி ஏற்பட்டது. பெரிய சரக்கு கப்பல்கள் செல்ல ஏதுவாய் அமைந்தது.

ஒரு நாளைக்கு, 97 கப்பல்கள் வரை செல்லும் வகையில் விரிவு படுத்திய பாதை, ஆகஸ்ட் 6, 2015ல் திறக்கப்பட்டது. இதற்கு முன், நாளொன்றுக்கு, 49 கப்பல்களே சென்று வந்தன. இப்போது, ஆண்டுக்கு, 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட கப்பல்கள் சூயஸ் கால்வாய் வழியை பயன்படுத்துகின்றன.

சூயஸ் கால்வாய்...

* சைய்தின் துறைமுகம் முதல் சூயஸ் நகர போர்ட் டுவெபிக் வரை உள்ளது

* சர்வதேச அளவிலான வர்த்தகத்தில் முக்கிய இடம் பெறுகிறது

* கச்சா எண்ணெய் கப்பல்கள் கடந்து செல்கின்றன

* கடல் நீர், கால்வாய் வழியே பாயும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது

* எகிப்து நாட்டுக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது

* ஆசியா - ஐரோப்பா கண்டங்களுக்கு இடையே நீர்வழி போக்குவரத்தை எளிதாக்குகிறது. பயண துாரம், இரு கண்டங்களுக்கு இடையே, 7,000 கி.மீ., வரை குறைந்தது. இந்த கால்வாய் வெட்டும் முன், தென் ஆப்பிரிக்கா நன்னம்பிக்கை முனையை சுற்றியே பயணித்தன கப்பல்கள். இதனால், நேரமும், பொருட் செலவும் அதிகமாக இருந்தது.

சூயஸ் கால்வாய், மத்தியதரை கடல் - செங்கடல் இடையே இணைப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியதரை கடலை விட, நான்கு அடி உயரமுள்ளது செங்கடல். உவர்ப்பு தன்மையிலும் வேறுபாடு இருந்தது.

சூயஸ் கால்வாய் நீரோட்டத்தால் தற்போது உவர்ப்பு தன்மையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால், மத்தியதரை கடலின் கிழக்குப் பகுதிக்கு உயிரினங்கள் செல்ல ஆரம்பித்துள்ளதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.

எகிப்து அரசுக்கு சொந்தமான, சூயஸ் கெனால் அத்தாரிட்டி என்ற நிறுவனம் இந்த கால்வாயை பராமரித்து வருகிறது. இந்த வழித்தடத்தில், 2018ல் மட்டும், 18 ஆயிரத்து, 860 கப்பல்கள் பயணித்துள்ளதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

- என்றென்றும் அன்புடன், அங்குராசு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us