தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/தஞ்சை பெரிய கோவில்!

தஞ்சை பெரிய கோவில்!

தஞ்சை பெரிய கோவில்!


PUBLISHED ON : ஜூன் 10, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 10, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழக வரலாற்றில் மன்னர் ராஜராஜசோழன் சிறப்பிடம் பெற்று விளங்குகிறார். அவரது ஆட்சி காலத்தில் பல கோவில்கள் கட்டப்பட்டன. அவற்றில், தஞ்சைப் பெரிய கோவில் தலைசிறந்தது. கட்டட கலை, சிற்பக்கலை, செப்பு திருமேனிகள் வார்ப்புக்கலை, ஓவியக்கலை மற்றும் கல்வெட்டுகளை உள்ளடக்கிய ஒப்பற்ற கலைக் களஞ்சியமாக, 1,000 ஆண்டுகளை கடந்தும் கம்பீரமாக காட்சி தருகிறது.

இந்த கோவில் அடித்தளம் முதல், சிகரம் வரை கற்களால் கட்டப்பட்டு உள்ளதால், 'கற்றளி' எனப்படுகிறது. நுழைவு வாயில் உள்ள கிழக்குப் பக்கத்தில் முதல் கோபுரம், கேரளாந்தகன் திருவாயில் எனப்படுகிறது.

இரண்டாவது கோபுரம், ராஜராஜன் திருவாயில் எனப்படுகிறது. இதன் அடித்தளத்தில் சண்டீசர் கதை, கண்ணப்ப நாயனார் வரலாறு, காமதகனம், வள்ளி திருமணம் போன்ற கதைகள் தொடர் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன.

மேற்கு பகுதியில் பெரிய துவாரபாலகர் சிற்பங்கள் கவர்கின்றன. கோவில் உள்ளே நேராக ஒரே கல்லில் வடிக்கப்பட்ட நந்தி உள்ளது. இதன் உயரம், 14 மீட்டர்; நீளம் ஏழு மீட்டர்; அகலம் மூன்று மீட்டர் ஆகும்.

கம்பீரமாக அமைந்துள்ள கருவறையின் மேல் விமானம், 13 தளங்களுடன், 216 அடி உயரம் உடையது. இது, தட்சிணமேரு என சிறப்பிக்கப்படுகிறது. கருவறை இரண்டு தளம் உடையது. மேற்தளத்தில், சிவபெருமானே ஆடல் வல்லனாக நடனமாடும் சிற்பங்கள் காணப்படுகின்றன.

நடனத்தில் வெளிப்படும், 108 கரணங்களில், 81 மட்டுமே முழுமையாக உள்ளன. விமானத்தின் உட்கூடு, வெற்றிடமாக, 'கதலிகா கர்ணம்' என்ற கட்டடக்கலை அமைப்பில் அமைந்துள்ளது. விமானத்தில் கலச பகுதி, 8,000 கிலோ கற்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

வண்ண ஓவியங்கள் நிறைந்த காட்சி கூடமாக பெரிய கோவில் திகழ்கிறது. சுவரில் பூசிய சுண்ணாம்பு கலவை காய்வதற்கு முன், இயற்கை முறையில் தயாரித்த வண்ணங்களால் வரைந்த, 'பிரஸ்கோ' வகை ஓவியங்கள் இங்கு உள்ளன. நந்தி மண்டபத்தில், தைல ஓவியங்கள் காணப்படுகின்றன.

அம்மன் சன்னிதி மண்டபம், திருசுற்று மாளிகை பகுதிகளில் மராட்டிய மன்னர் ஆட்சி கால நீர் வண்ண ஓவியங்களை காணலாம். சாந்தாரம் மண்டபத்தில் சோழர், நாயக்கர் ஆட்சி கால ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

இங்கு, சோழர் கால சிற்பங்கள் பல உள்ளன. நாயக்கர், மராட்டியர் ஆட்சி காலத்தில் தான், கோபுரங்கள் மற்றும் விமானங்களில் சுதைகள் உருவாக்கப்பட்டன. துாண்களில் நாயக்கர் ஆட்சி கால சிற்பங்களை காண முடியும்.

விமானத்தில், கீர்த்தி முகம் என்ற அலங்காரத்தில், நடுவே தொப்பி அணிந்த ஐரோப்பியர் உருவம் வடிக்கப்பட்டுள்ளது. இது, நாயக்க மன்னர் ரகுநாதருக்கு நெருக்கமாக இருந்த, ரோலண்ட் கிராப் என்பவரின் உருவம். சுண்ணாம்பு கலவையால் உருவாக்கப்பட்டது.

பழங்காலத்தில், தினமும் கோவிலில் அபிஷேகம், விளக்கு ஏற்றும் பணிக்காக, தளிச்சேரிப் பெண்கள், 400 பேர் நியமிக்கப்பட்டிருந்தனர். திருக்கோவில் பணியாளர் மற்றும் திருவிழாக்கள் பற்றிய விபரங்கள் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.

மழை நீரைச் சேமிக்க, 'சாளவம்' என்ற அமைப்புகள் உள்ளன. இவை, கருங்கற்களால் அமைக்கப்பட்டுள்ளன. தண்ணீரை தடுத்து அனுப்பும் தொழில்நுட்பம் இவற்றில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

முதல் சாளவத்தை திறந்தால், முதலில் பெய்யும் மழை நீர், நந்தவனத்துக்குச் செல்லும். இதில் அழுக்கு நிறைந்திருக்கும் என்பதால் அவ்வாறு திட்டமிடப்பட்டுள்ளது. பின், சுத்த நீர், சிவகங்கை குளத்துக்கு செல்லும் வகையில் இரண்டாம் சாளவம் உருவாக்கப்பட்டுள்ளது.

கோவிலை காண வருவோருக்கு சன்னிதி அருகே தமிழ், ஆங்கிலத்தில் வழிகாட்டும் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

- என்.சுந்தரராஜன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us