PUBLISHED ON : மார் 03, 2017

குட்டீஸ்... பல ஆண்டுகளாக, மார்ச் 8ம் தேதியை, 'மகளிர் தினம்' ஆக கொண்டாடி வருகிறோம். அது என்ன, 'மகளிர் தினம்!' எப்படி தோன்றியது என்று தெரிஞ்சிப்போமா...
கடந்த, 18ம் நூற்றாண்டில், தொழிற்சாலை மற்றும் அலுவலகங்களில் ஆண்கள் மட்டுமே வேலை செய்தனர். பெண்களை வீட்டு வேலைகளுக்கென்றே முடக்கி வைத்திருந்தனர்.
அச்சமயம், அதாவது, 1857ல் மிக பெரிய போர் நடந்தது. அப்போரில், ஏராளமான ஆண்கள் இறந்தனர்; பலர் நடக்க முடியாத நிலைக்கும் தள்ளப்பட்டனர். இதனால், பல நாடுகளில் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது.
அதை நிறைவேற்றுவதற்கு வேறு வழியே இல்லாமல், பெண்களுக்கு வேலை கொடுத்தனர். இந்த சந்தர்ப்பம் தான், பெண்கள் தங்கள் திறமையை, வெளியுலகத்திற்கு கொண்டு வர ஒரு வரமாய் அமைந்தது.
அதிலும், ஆண்களுக்கு நிகராக பணி வாய்ப்பு கிடைத்ததே தவிர, ஊதியத்தில் அநீதி இழைக்கப்பட்டது. மனம் குமுறிய பெண்கள், ஆண்களுக்கு இணையான ஊதியம் மற்றும் உரிமைகளை வழங்க கோரி, குரல் எழுப்பினர். ஆனால், அப்போதைய அமெரிக்க அரசோ செவி சாய்க்கவில்லை.
இதனால், அமெரிக்கா முழுவதுமுள்ள பெண் தொழிலாளர்கள், மார்ச் 8, 1857ல் மாபெரும் போராட்டத்தை ஆரம்பித்தனர். இதை கண்ட உரிமையாளர்கள், அதிர்ச்சி அடைந்து, அரசின் உதவியை நாடினர். பின், அரசாங்கத்தின் ஆதரவோடு அப்போராட்டத்தை அடக்கினர்.
'அடக்கி வைத்தால் அடங்கி போவது அடிமை தனம்' என்று எண்ணிய பெண்கள், மீண்டும், 1907ல் போராட்டத்தை ஆரம்பித்தனர். இதை தொடர்ந்து, டென்மார்க் நாட்டில் உள்ள கோபன்ஹேகன் நகரில், 1910ல், பெண்கள் உரிமை மாநாடு ஒன்று நடைபெற்றது. இதில், உலகின் பல நாடுகளை சேர்ந்த பெண்கள், தங்களது ஒற்றுமையை காட்டினர்.
அதில் முக்கியமாக, ஜெர்மனி நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கிளாரே செர்கினே, தீர்மானத்தின் முக்கிய சாராம்சமாக, 'மார்ச் 8ம் தேதியை மகளிர் தினமாக கொண்டாட வேண்டும்' என்ற கோரிக்கை வைத்தார். பல்வேறு தடங்கல்களால், இந்த தீர்மானம் நிறைவேற முடியாமல் போனது.
இதற்கிடையே, பெண் தொழிலாளர் சங்க அமைப்பினர் ஆங்காங்கே உரிமை குரல் எழுப்பினர். மீண்டும், சோவியத் ரஷ்யாவில், செயின்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த பெண்களின் போராட்டத்தில், ரஷ்யாவை சேர்ந்த அலெக்ஸ் சாண்ட்ரா கெலன்ரா கலந்து கொண்டார்.
அவர் தான், 'உலக மகளிர் தினத்தை, ஆண்டு தோறும் மார்ச் 8ம் தேதி நடத்த வேண்டும்' என்று பிரகடனம் செய்தார். இதையடுத்து, ௧௯௭௫ மார்ச் 8 முதல் உலக மகளிர் தினத்தை கொண்டாட துவங்கினர்.
அன்று முதல் இன்று வரை ஒவ்வொரு ஆண்டும், மார்ச் 8ல் மகளிர் தினம் கொண்டாடி வருகிறோம். ஒரு சில ஆண்டு களுக்கு முன்பிருந்து தான், இந்தியாவில் மகளிர் தின கொண்டாட்டங்கள், 'களை' கட்டியுள்ளன.
இப்போ தெரிஞ்சுகிட்டீங்களா குட்டீஸ்...
மகளிர் தினம் அன்று உங்க மம்மீஸ், அக்காஸ் எல்லாரும் குஷியாக என்ஜாய் செய்வதற்கு பின் இப்படி ஒரு போராட்டக்கதை இருக்கிறது என்று!
ஹேட்ஸ் ஆப் மகளிர்!
-ஜெ. பானு.
