PUBLISHED ON : மார் 18, 2011
எகிப்து நாடு பார்வோன்களின் நாடாகும். பார்வோன்கள் இறக்கும்போது 'பிரமிடுகள்' என்றழைக்கப்படும் கல்லறையில் பலவித சுகந்தவர்க்கங்களோடு அடக்கம் செய்யப்பட்டு, இன்றளவும் உடல் கெட்டுவிடாமல் இருக்கிறது. உடம்பு சிதையா வண்ணம் இருக்கும் கலையில் எகிப்தியர்கள் தலைசிறந்தவர்களாயிருந்தனர்.
எனினும் ஆராய்ச்சியாளர்கள் பிரமிடுகளையும், 'மம்மி' களையும் தோண்டி ஆராய்ச்சி செய்கின்றனர். அப்படிப் பார்வோன்களின் கல்லறைகளைத் தோண்டி ஆராய்ச்சி செய்தவர்களில், பிரிட்டிஷ் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் லார்ட் கார்னார்வோன் என்பவரும், அவர் நண்பர் ஹோவர்ட் கார்டர் என்பவரும், ஒரு எகிப்திய கல்லறையைத் திறந்து ஆராய்ச்சி செய்தனர்.
இது நடந்தது 1922ல். அவர்களோடு அவர்களது துணைக்குச் சென்றவர்களும், அந்தக் கல்லறைக்குள் நுழைந்தவர்கள் அனைவரும் சில மாதங்களில் இறந்துவிட்டனர். அந்த பார்வோனின் பெயர் டூடன் காமன். மக்கள், இந்த ஆராய்ச்சிக் குழுவினர் இறந்ததற்குக் காரணம், பார்வோனின் சாபமே என நம்பினர்.
'எனது கல்லறைக்குள் நுழைகிறவர்கள் சபிக்கப்பட்டவர்கள்' என்று அந்த பார்வோன் மந்திரம் போட்டதாகச் சொன்னார்கள். ஆனால், தற்சமயம் அவர்கள் எல்லாரும் 'ஹஸ்டோபிளாஸ் மோஸில்' என்ற வியாதியால் தாக்கப்பட்டனர் என நம்பப்படுகிறது.
இந்த வியாதி மக்களைத் தாக்கினால் மரணம் ஏற்படும். இந்த வியாதி காளான் வகையினால் ஏற்படுவதாகும். சில வவ்வால்கள் கல்லறைகளின் மேல் இருப்பதால், இத்தகைய காளான்களிலுள்ள அணுக்கள் மூலம், இந்த வியாதியைப் பரப்புகின்றன. இந்த வியாதியே அந்த ஆராய்ச்சிக்காரர்களைக் கொன்றது என இப்போது நம்புகின்றனர். உண்மை ஒருபக்கம் வதந்தி ஒருபக்கம்.
