PUBLISHED ON : ஜூன் 10, 2023

சென்னை, அய்யப்பன்தாங்கல், அரசு மேல்நிலைப் பள்ளியில், 1998ல், 8ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்...
என் வகுப்பு தோழி புனிதா. ஒரே தெருவில் வசித்தோம். சேர்ந்துதான் பள்ளி சென்று வருவோம். அவள் சுமாராகத்தான் படிப்பாள்; வீட்டுப்பாடங்களை ஒழுங்காக செய்ய மாட்டாள். அறிவுரைகளை காதில் வாங்க மாட்டாள்; எதற்கும், பயப்படவும் மாட்டாள்.
அப்போது, காலாண்டுத் தேர்வு துவங்கியிருந்தது. சிறு பிணக்கு ஏற்பட்டதால் பேசாமல் இருந்தோம். அவளை புறக்கணித்து மற்றொரு தோழி அம்சாவுடன் மிதிவண்டியில் தேர்வு எழுத சென்றேன். இதை கண்டதும், வேறொரு தோழியுடன் சேர்ந்து கெண்டாள்.
அன்று தேர்வு முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தோம். எங்களை முந்தி செல்லும் எண்ணத்தில் வேகமாக சைக்கிளை மிதித்தாள் தோழி. விடாமல் பின் தொடர்ந்தேன்.
சாலையை கவனிக்காமல், திரும்பி திரும்பி என்னை பார்த்தபடி ஓட்டியதால் பள்ளத்தில் இறங்கியது அவள் சென்ற சைக்கிள். இருவரும் குப்புற விழுந்தனர்.
அடிபட்டு வேதனையில் துடித்ததை கண்டதும் பெரும் துயரம் ஏற்பட்டது. பதறியபடி சென்று துாக்கி முதல் உதவி செய்தோம். எங்களுக்குள் எப்போது பிணக்கு வந்தாலும், நானே வலிய சென்று சமாதானம் செய்வேன். அன்றும் அதுபோல் நிகழ்ந்தது. தவறை உணர்ந்தவள் நெகிழ்ந்து கண்ணீர் விட்டாள். நட்பை புதுப்பித்துக்கொண்டோம்.
என் வயது, 33; பள்ளி நாட்களில் நடந்த அந்த நிகழ்வு மனதில் இன்றும் பசுமையுடன் மகிழ்ச்சி தருகிறது.
- கி.சுமதி கிருஷ்ணமூர்த்தி, சென்னை.
