PUBLISHED ON : மார் 25, 2011

ஒரு சமயம் ஓர் ஏழை வியாபாரி தன் கடுமையான வேலைகளுக்குப் பிறகு வீடு திரும்பிக் கொண்டிருந்தான். வழியில் நிழல் தரும் மரம் ஒன்றைக் கண்டான். அதன் அடியில் தங்கிவிட்டுச் சிறிது நேரம் இளைப்பாறிச் செல்ல நினைத்தான். அவன் சில பேரிச்சம் பழங்களைத் தன்னிடம் வைத்திருந்தான். அவற்றை உண்டு விட்டு விதைகளைத் தூக்கி எறிந்தான்.
திடீரென ஒரு பெரிய கெட்டதேவதை அவனுக்கு முன்னால் வந்து, ''நீ என் மீது கற்களை வீசிவிட்டாய். அதனால், நீ இறக்க வேண்டும்!'' என்றது.
அந்த வியாபாரி அதற்கு எடுத்துச் சொன்னான். ''அவை வெறும் பேரிச்சம்பழக் கொட்டைகளே. அவை கற்களுமல்ல; நான் உன் மீது எறியவும் இல்லை; நான் உன்னை துன்புறுத்தவில்லை. இருப்பினும் நான் உன்னிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்!'' என்றான்.
அந்த கெட்டதேவதை வியாபாரியின் எதிர்ப்புகளை எல்லாம் கருத்தில் கொள்ளவில்லை.
''அப்படியும் நான் இறக்க வேண்டும் என்று நீ விரும்பினால், எனக்கு ஒரு வரம் கொடு. நான் என்னுடைய கடன்களையெல்லாம் திருப்பித் தரவேண்டும். எனக்கு மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். அவர்களுக்கு நான் இவற்றையெல்லாம் தெரியப்படுத்த வேண்டும். எனக்கு ஒருநாள் அவகாசம் கொடு. நாளை நான் திரும்பி வருகிறேன்!'' என்று வியாபாரி கேட்டுக் கொண்டான்.
''நீ எனக்குச் சத்தியம் செய்து தருவாயா?'' என்றது.
''நான் சத்தியமாகத் திரும்பி வருவேன்!'' என உறுதியளித்தான் வியாபாரி.
மறுநாள் அந்த நேர்மையான வியாபாரி, தான் வாக்குறுதியளித்தபடி திரும்பி வந்தான். இரண்டு வழிப்போக்கர்களும் அந்த வழியாக வந்துக் கொண்டிருந்தனர். ''இது கெட்ட தேவதைகள் வசிக்குமிடம். ஆதலால், நீ இங்கிருந்து சீக்கிரம் செல்வது நல்லது!'' என்றனர்.
அந்த வியாபாரி முழுக்கதையையும் சொன்னான். முடிவில் தான் இறப்பதற்குத் தயாராக அங்கே காத்துக் கொண்டிருப்பதையும் கூறினான். அவர்கள் அந்த வியாபாரிக்காக வருந்தினர். அவர்கள் பேசிக் கொண்டிருந்த போது தூசியுடன் கூடிய பெரிய புகைப்படலம் எழுந்தது. அதுதான் அந்தக் கெட்டதேவதை.
''நீ வாக்களித்தபடி வந்தது நல்லது. ஆனால், இந்த இருவரும் யார்?'' என வினவியது.
''இவர்கள் தற்செயலாக என்னைக் கடந்து சென்றனர். அது தவிர வேறு எதுவுமில்லை!'' என்றான்.
''கெட்டதேவதையே! அந்த ஏழை வியாபாரி தன் உயிரை விடும் அளவிற்கு என்ன தவறு செய்தான்? என்னிடம் கூறு!'' என்றார்.
முதல் வழிப்போக்கன், ''ஓர் எதிர்பாராத நிகழ்ச்சிக்காக, நீ உன் சக்திகளைப் பயன்படுத்தி அவனுக்கு கெடுதல் செய்வது, உண்மையில் மிகவும் மோசமான செயல்!'' என்றான்.
இரண்டாவது வழிப்போக்கன், ''வியாபாரியைக் கொல்வதால் நீ என்ன நன்மை அடையப் போகிறாய் கெட்டதேவதையே... மேலும் மேலும் ஏன் பாவத்தை கட்டிக் கொள்கிறாய்?'' என்றான்.
அந்தக் கெட்டதேவதை நீண்ட நேரம் யோசித்துப் பிறகு கூறியது.
''நீங்கள் கூறுவதெல்லாம் சரி. இது ஒரு விபத்துதான். நான் அந்த வியாபாரியை மன்னித்து விடுகிறேன். நீங்கள் சரியான சமயத்தில் நற்புத்திக் கூறி என் கண்களைத் திறந்தீர்கள்!'' என்றது. அந்த வியாபாரி மிகவும் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பித் தன் மனைவி குழந்தைகளுடன் வசித்தான்.
நீதி: கொடுத்த வாக்கை உயிரைக் கொடுத்தாவது காப்பாற்றியதால் அவனுக்கு கிடைத்த நன்மையை பார்த்தீர்களா?
***
