PUBLISHED ON : ஜூன் 05, 2015

இருள் படர்ந்த அந்த வீட்டில் மெழுகுவர்த்தி எரிந்து வெளிச்சத்தை கொடுத்துக் கொண்டிருந்தது.
அந்நேரம் வீட்டின் அறையின் உள்ளே காற்று வேகமாக வீசியது. எரிந்து கொண்டிருக்கும் மெழுகுவர்த்தியை அணைத்திடும் முயற்சியில் இறங்கியது காற்று.
அந்நேரத்தில் மெழுகுவர்த்தியானது காற்றை நோக்கி, ''காற்றே! எதற்காக இந்த அறையின் உள்ளே வேகமாக வீசிக் கொண்டிருக்கிறாய்? நீ இப்படி வேகமாக வீசிக்கொண்டிருந்தால் நான் அணைந்து விடுவேன் என்று உனக்குத் தெரியாதா? நான் அணைந்து விட்டால் இந்த அறை முழுக்க இருளாகி விடுமே!'' என்றது.
''அறை இருளாகயிருந்தால் உனக்கென்ன?'' என்று கேட்டது காற்று.
''காற்றே என்ன இப்படிக் கேட்டு விட்டாய். இந்த அறையை இருள் அடைய விடலாமா? இந்த அறையை இருள் அடையவிட்டால் இந்த அறையின் உள்ளே ஏராளமான பூச்சிகள் புகுந்து விடும். எலிகள் நடமாடிடும். அதன் பின்னர் இந்த அறையில் வசிக்கின்ற மனிதர்கள் மிகவும் துன்பப்படுவர். எனவே, நாம் எந்த நிலையிலும் மற்றவர்களுக்கு துன்பத்தைக் கொடுத்திடக் கூடாது. எல்லாருக்கும் மகிழ்ச்சியைக் கொடுப்பதுதான் நம் கடமையாகும். எனவே நாம் எக்காரணம் கொண்டும் மகிழ்ச்சியை மறந்திடவேண்டாம்,'' என்றது மெழுகுவர்த்தி.
''மெழுகுவர்த்தியே நீ உன்னையே உருக்கிக் கொண்டாலும் அறையில் வெளிச்சத்தைக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறாய். உன் உயர்ந்த பண்பைப் பாராட்டுகிறேன். இனி நான் புயலாக மாறாமல் தென்றலாக வீச முயற்சிக்கிறேன்,'' என்றது காற்று.
***
