தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/குயில் டாக்டர்!

குயில் டாக்டர்!

குயில் டாக்டர்!


PUBLISHED ON : ஜூன் 13, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 13, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒரு கிராமத்தில் சின்னா என்ற சிறுவன் ஆடு மேய்த்துக் கொண்டு இருந்தான். அவனிடம் ஓர் உண்டியல் இருந்தது. ஆற்றங்கரை ஓரமுள்ள ஈரக் களிமண்னை உருண்டையாக உருட்டி, அதை உண்டி வில்லில் வைத்துக் குறி பார்த்து மாங்காய், கொய்யா போன்ற பழங்களை அடித்து வீழ்த்துவான்.

அப்படி ஒரு சமயம் உண்டி வில்லால் அடிக்கும் போது, அது மாமரத்திலிருந்த ஆந்தை உடலைத் தாக்கி விட்டது. ஆந்தைக்கு வலி தாங்க முடியவில்லை. அதனுடைய தோழனான காகத்திடம் ஓடிற்று.

''ஆட்டுக்கார பையன் உண்டி வில்லால் அடித்து விட்டான். வலிபொறுக்க முடியவில்லை!'' என்று கண்ணீர் விட்டது.

''கவலைப்படாதே! குயில் அண்ணன் கைதேர்ந்த வைத்தியர். அவரிடம் போய்க் காட்டலாம், வா!'' என்று குயில் வைத்தியரிடம் அழைத்துப் போயிற்று காகம்.

குயில், ஆந்தையின் உடலை நன்கு சோதித்தது. களிமண் உருண்டை அதன் விலாப்புறத்தில் ஒட்டிக் கொண்டிருப்பதைக் கண்டது. வலியின் காரணம் அதனால்தான் என்பதையும் புரிந்து கொண்டது. அதே சமயம் ஆந்தையாரின் குணமும் அதன் நினைவுக்கு வந்ததது. ஆந்தை ஒழுங்காகப் பணம் கொடுக்காது.

''ஆந்தையாரே, உமது உபாதையைக் குணப்படுத்த முடியும். நீர் ஒழுங்காக அதற்கான ஊதியத்தைத் தந்து விட வேண்டும்,'' என்றது குயில்.

''தராமல் இருப்பேனா? சீக்கிரம் கவனியும் வைத்தியரே!'' என்று அவஸ்தைப் பட்டது ஆந்தை.

''இப்போதே கொடுத்தால்தான் வைத்தியம் செய்வேன்,'' என்றது குயில் உறுதியாக. ஆந்தையின் வார்த்தையை நம்பத் தயாராக இல்லை அது.

''குயிலாரே, நீங்கள் வைத்தியம் பாருங்கள். ஆந்தையாரின் பணத்துக்கு நான் பொறுப்பாளி,'' என்றது காக்கை. அதாவது அது தராவிட்டால் நான் தருகிறேன் என்று ஜாமீன் கொடுத்தது.

''அப்படியானால் சரி,'' என்று காக்கையின் உறுதி மொழியை ஏற்றுக் கொண்ட குயில், ''ஆந்தையாரே, ஏதாவது ஒரு நீர் நிலைக்குப் போய்க் கழுத்தளவு தண்ணீரில் இரண்டு நாழிகை உட்கார்ந்திரும். உமது வலி பறந்துவிடும்,'' என்று வைத்தியம் சொல்லி அனுப்பியது.

ஆந்தையும், காகமும் அருகிலுள்ள ஒரு குட்டைக்குப் பறந்து போயின. ஆந்தை கழுத்தளவு நீருக்குள் வெகு நேரம் முங்கியபடி இருந்தது. களி மண் உருண்டை நீரில் இளகிக் கரைந்து போயிற்று. அதன் வலியும் அத்துடன் பறந்து போயிற்று.

மறுநாள் ஆந்தையிடம் பணம் வசூல் பண்ணக் குயில் போயிற்று. ஆந்தையா கொடுக்கும்?

''நீ என்ன பிரமாத வைத்தியம் செய்தாய்? ஒரு மருந்தும் கொடுக்கவில்லை. தண்ணீர்ச் சிகிச்சைக்குப் பணமா? போ, போ!'' என்று விரட்டியது.

குயில் இதை எதிர்பார்த்ததுதான். பொறுப்பேற்றுக் கொண்ட காகத்திடம் போய்க் கேட்டது குயில்.

காகமோ, ''என்னிடம் கால் காசு கூடக் கிடையாது,'' என்று இறக்கையை விரித்து விட்டது.

குயிலுக்குக் கோபமான கோபம். காக்கையை நேராக நீதிபதி நரியாரிடம் அழைத்துப் போயிற்று. வழக்கை விசாரித்த நரி, நியாயம் வழங்கியது.

''ஆந்தை குயிலுக்கு வைத்தியத்துக்கான பணத்தைத் தராவிட்டால், அதற்கு ஜாமீன் கொடுத்த காக்கைதான் அதைக் கொடுக்க வேண்டும்,'' என்றது.

நரியின் தீர்ப்பை ஏற்பதைத் தவிர காக்கைக்கு வேறு வழியில்லை. ஆனால், அதனிடமோ கால் காசு இல்லை.

நரியிடம் காக்கை, ''தன்னிடம் பணம் இல்லை!'' என்பதை தெரிவித்தது.

''உன்னிடம் பணம் இல்லாத காரணத்தால் இனி நீ குயிலின் முட்டைகளைக் காப்பாற்றித் தரும் வேலையைக் மேற்கொள்ள வேண்டும்!'' என்று உத்தரவு போட்டது நரி.

'ஜாமீன் கொடுத்ததினால் தனக்கு இந்தச் சங்கடம் ஏற்பட்டதே' என்று காகத்துக்கு, ஆந்தை மீது ஒரே கோபம். அதை தேடிப் புறப்பட்டு சென்றது காகம்.

ஆனால், ஆந்தையோ, காகத்திடமிருந்து தப்ப, மரப் பொந்துக்குள் போய்ப் புகுந்துக் கொண்டது. இரவில் மட்டும் வெளியில் வரும்.

அன்று முதல் இன்று வரை இதே நிலைதான். குயிலின் முட்டையைக் காகம் அடைகாக்கிறது. காகத்துக்குப் பயந்து கொண்டு பகல் எல்லாம் மரப் பொந்துக்குள் ஒளிந்திருக்கிறது ஆந்தை.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us