PUBLISHED ON : டிச 28, 2019

சத்ரபுரி மன்னர் சத்ரேஸ்வரன், வீரத்துக்கும், நேர்மைக்கும் பெயர் பெற்றவர். நாட்டு மக்களின் நலனை முக்கியமாக நினைப்பவர். மக்களும், மன்னரை கடவுளாகப் பாவித்தனர். மன்னரின் ஒரே மகன் மாணிக்கம், கல்வி, போர்ப் பயிற்சியில் சிறப்பு பெற்றவன்.
மகனை அழைத்து, 'நீ கல்வியிலும், வில் வித்தை, வாள் வீச்சு போன்ற, போர்க் கலைகளிலும் தேறி விட்டாய். எனக்கு வயதாவதால், உனக்கு திருமணம் முடித்து, இந்நாட்டு மன்னராக்க முடிவு செய்துள்ளேன்; ராஜகுருவும், மந்திரிகளும் என் விருப்பத்தை ஆமோதிக்கின்றனர். உன் கருத்தை சொல்...' என்று கேட்டார்.
'தந்தையே... தங்கள் சொல்லை மதிக்கிறேன்; எனக்கு முடி சூட்டும் முன், அண்டை தேசங்களில் நடக்கும் ஆட்சி முறைகளையும், மக்கள் எண்ணங்களையும் அறிய விரும்புகிறேன். நான் விரும்பும் வகையில் ராஜகுமாரியைத் தேர்வு செய்ய அனுமதிக்க வேண்டுகிறேன்...'
'நீ விரும்பியபடி செய்... உன்னுடன், 10 போர் வீரர்களை பாதுகாப்புக்காக அனுப்புகிறேன்...'
'தந்தையே... தனித்துச் சென்று, வெற்றியோடு திரும்புவது தான், வீரனுக்கு அழகு; என் வீரத்தில், தங்களுக்கு நம்பிக்கை இல்லையா... எனக்கு வேண்டிய அத்தியாவசியப் பொருட்களோடு, ஒரு நல்ல குதிரையில், செல்லவே விரும்புகிறேன்... என் வேண்டுகோளை மறுக்காதீர்...'
'சரி... உன் விருப்பப்படியே ஆகட்டும்... உன் வீரத்தில் எனக்கு முழு நம்பிக்கை உண்டு; விழிப்போடு, ஜாக்கிரதையாகச் சென்று வா...' என்று, வழியனுப்பினார் மன்னர். ராஜகுரு மற்றும் அமைச்சர்களிடம் விடை பெற்ற மாணிக்கம், இரவு, பகல் பாராமல் வெகுதுாரம் சென்று விட்டான்.
ஒரு நாள் -
காட்டைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது; பசி, காதை அடைத்தது.அருகில், ஊர் ஒன்றும் தென்படவில்லை; குதிரையும் களைத்துப் போனது.
சிறிது துாரத்தில், விளக்கு வெளிச்சம் தெரிந்தது; அதைநோக்கி குதிரையைச் செலுத்தினான். குடிசையில், ஒரு மூதாட்டி உணவு தயார் செய்து கொண்டிருந்தாள். குதிரையில் வந்த இளைஞனைக் கண்டு ஆச்சரியமடைந்து, 'யாரப்பா நீ... பார்த்தால், ராஜ குடும்பத்தவன் போல் தெரிகிறதே; தனியாக இக்காட்டுக்குள் எப்படி வந்தாய்...
'இந்த இடத்துக்கு சொந்தமான மந்திரவாதி, உன்னை கண்டால், கல்லாக்கி விடுவானே. உனக்கு என்ன வேண்டும்...' என்று எச்சரித்து உபசரித்தாள்.
'பாட்டி... உன் இனிய சொற்களால், மகிழ்ந்து போனேன்; நான், சத்ரபுரி இளவரசன்...' என்று, வந்த நோக்கத்தைக் கூறி, பசியைப் போக்க வேண்டினான் மாணிக்கம்.
மகிழ்ந்த மூதாட்டி, அறுசுவை உணவை கொடுத்து பசியைப் போக்கினாள். அருகில் உள்ள ஓடையில், குதிரைக்கு தண்ணீர் காண்பித்து உதவினாள்.
புல்லும், கொள்ளும் கொடுத்தவள், 'குழந்தாய்... இங்குள்ள மந்திரவாதி, இந்த வழியில் வருபவர்களைப் பிடித்து, கற்சிலையாக்கி விடுகிறான்...
'விந்திய நாட்டு இளவரசியைப் பிடித்து வந்து, திருமணம் செய்ய வற்புறுத்தி வருகிறான்; அவளை மீட்க வந்த மன்னரையும், வீரர்களையும் கற்சிலைகளாக்கி விட்டான். தந்திரமாக தான், அவனை வெல்ல வேண்டும்; இது, உன்னால் முடியாது; அவன் கண்ணில் படாமல், தப்பி போய் விடு...' என்றாள்.
'தப்பி ஓடுவது ராஜ வம்சத்துக்கு அழகல்ல; நான் மந்திரவாதியை சந்திக்க தயார். அவனிடம் அகப்பட்டவர்களையும் விடுவிக்க விரும்புகிறேன்; அதற்கு, உதவ வேண்டும்...' என்றான்.
அந்த மூதாட்டி, 'உன் வீரத்தை மெச்சினேன்; நானும் மந்திரவாதியின் அடிமை தான்; தப்பி எங்கும் செல்ல முடியாது; ஓட முயன்றால் கொன்று விடுவான். தினமும், அவனுக்கு உணவு தயார் செய்து கொடுப்பது தான் என் வேலை...
'அதில் விஷம் கூட கலக்க முடியாது; அவன் வைத்துள்ள மாயக் கண்ணாடி காட்டி விடும்; அவன் வசிக்கும் குகையை, ஐந்து தலைநாகம் காவல் காக்கிறது. அங்கு நுழைவதும் மிகவும் கடினம்...
'எனக்கு ஒரு மாய மோதிரம் அளித்துள்ளான்; அதை அணிந்தால், அந்த நாகம், பெட்டி பாம்பாக அடங்கி விடும். அந்த மோதிரத்தை, நீ அணிந்து கொள். மந்திரவாதி, தினமும் அதிகாலை வெளியே சென்று, மாலையில் தான் குகைக்கு திரும்புவான். மிகவும், ஜாக்கிரதையாக செயல்படு; உன் குதிரை, மறைவில் இருக்கட்டும்; வெற்றியோடு திரும்பு...' என்றாள்.
- தொடரும்...
