தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/கஞ்சனை மாற்றிய காயம்!

கஞ்சனை மாற்றிய காயம்!

கஞ்சனை மாற்றிய காயம்!


PUBLISHED ON : டிச 28, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 28, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிங்காரப்பேட்டையில், ஜெகதீஷ் என்ற வணிகன் வசித்து வந்தான். சிறுவயதிலே பெற்றோரை இழந்தவன். தாய்மாமாவிடம் தொழில் நுணுக்கங்களை கற்று சொந்தமாக, வியாபாரம் நடத்தி வந்தான். நல்ல லாபம் கிடைத்தது. வீடு, தோட்டம், வயல் என்று, சொத்துக்கள் வாங்கி குவித்தான்.

பணம் சேர சேர, கஞ்சனாக மாறி விட்டான். செலவு செய்யாமல் வாழ்வது எப்படி என்றே எப்போதும் யோசித்தான். வீட்டு தேவைக்கான அன்றாட பொருட்களைக் கூட வாங்கி கொடுக்க மறுத்தான்.

உண்ணவும், உடுத்தவும் கணக்கு பார்த்தான். இதனால் மனம் நொந்தாள் அவன் மனைவி. வண்ணக் கனவுகளுடன் ஜெகதீஷை, திருமணம் செய்திருந்தாள். பணம் குவிந்திருந்தும், அன்றாட தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியவில்லை.

கர்ப்பமாக இருந்த அவள், 'நான் விரும்பும் பொருளை கேட்க, மிகவும் சங்கடமாக உள்ளது; அதை எப்படி கேட்பது என்று தெரியவில்லை...' என்று தயங்கியபடியே கணவனிடம் கூறினாள்.

கர்ப்ப காலத்தில் கேட்கும் பொருளை வாங்கி தராவிட்டால், குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும் என, நம்பிய ஜெகதீஷ், 'நீ விரும்புவது என்ன என்று சொல்... வாங்கித்தர முடியுமா என்று யோசிக்கிறேன்...' என்றான்.

சுவையான பலாப்பழம் சாப்பிட ஆசைப்படுவதாக கூறினாள். சற்று அதிர்ச்சி அடைந்தாலும், வாங்கி தருவதாக உறுதி கூறினான்.

கடைவீதியில் பலாப்பழங்களின் விலையை விசாரித்தான் ஜெகதீஷ். கடைக்காரன், 'சிறியதாக போதுமா... அல்லது பெரிய பழம் வேண்டுமா...' என்று கேட்டான்.

'சிறிய பழம் போதும்... விலை மிகவும் மலிவாக இருக்க வேண்டும்...'

ஒரு பலாப்பழத்தை காட்டி, 'விலை, 50 ரூபாய்...' என்றான் கடைக்காரன்.

அதிர்ச்சி அடைந்த ஜெகதீஷ், 'அதற்கும் குறைவான விலையில், பலாப்பழம் எங்கு கிடைக்கும்...' என்று விசாரித்தான்.

'ஐயா... சற்று தொலைவில், பலாப்பழ மொத்த வியாபார சந்தை உள்ளது; அங்கு சென்றால், குறைந்த விலைக்கு பெரிய பலாப்பழம் கிடைக்கும்...' என்றான்.

அங்கு சென்று விலையை விசாரித்தான்.

'எத்தனை பழம் வேண்டும்...'

'ஒரு பழம் போதும்...''

'ஒன்று என்றால், 50 ரூபாய்; மொத்தமாக, 25 பழங்களை வாங்கினால் விலையை குறைக்கிறேன்...'

'மலிவு விலையில், ஒரே ஒரு பழம் கிடைக்குமா...'

இப்படி கேட்ட ஜெகதீஷை, வினோதமாக பார்த்த வியாபாரி, சற்று துாரத்தில், பலா மரங்கள் நிறைந்த தோட்டத்துக்கு அனுப்பி வைத்தான்.

அங்கு சென்ற ஜெகதீஷ், மலிவாக பலாப்பழம் கேட்டான்.

'மரத்தின் உச்சியில் தான் பழங்கள் உள்ளன; ஏறி பறிக்க, பணியாள் இல்லை. அவசரமாக தேவைப்பட்டால் பறித்துக் கொள்; ஒரு பழத்துக்கு, 10 ரூபாய் மட்டும் தந்தால் போதும்...' என்றான் தோட்டக்காரன்.

மனைவி ஆசைப்பட்ட பலாப்பழம், 10 ரூபாய்க்கு கிடைக்க போவதை எண்ணிய ஜெகதீஷ், களைப்பையும் மறந்து, மரத்தில் ஏற ஆரம்பித்தான். ஒரு கிளையில், அழகிய பழம் தொங்கிக் கொண்டிருந்தது. அங்கு தாவ முயன்ற போது, கிளை முறிந்தது. செய்வதறியாது திணறி விழுந்தான்.

கடும் காயம் பட்டது. எழுந்து நிற்க முடியாமல் தவித்தான். வலியால் படுத்து உருண்டான். சற்று நேரத்திற்கு பின், தட்டு தடுமாறி எழுந்தான். பலவீனமாக நடக்க ஆரம்பித்தான். மலிவு விலையில் பழத்துக்கு ஆசைப்பட்டு, வெறுங்கையுடன் வீடு வந்து சேர்ந்தான். காயத்தை சரி செய்ய வைத்தியத்துக்கு, 1000 ரூபாய் செலவானது.

ஜெகதீஷின் மனைவி, அவன் நிலை கண்டு, 'இனி ஒரு போதும், எதையும் விரும்பிக் கேட்க மாட்டேன்...' என்று கண்ணீர் விட்டாள்.

மனைவியின் ஆசையை பூர்த்தி செய்ய முடியாததால் மனம் வருந்தி புலம்பினான். மிகுந்த துயரத்துடன், 'இனிமேல் இப்படி கஞ்சனாக இருக்க மாட்டேன்' என, உறுதி கூறினான்.

சிறிது நாட்களுக்கு பின், சந்தையில் தரமான பலாப்பழம் ஒன்றை, நல்ல விலைக்கு வாங்கி, மனையின் ஆசையை பூர்த்தி செய்தான்.

செல்லங்களே... கஞ்சத்தனம் வாழ்வை கசப்பாக்கும். தேவைகளை பூர்த்தி செய்ய, செலவு செய்ய தயங்க கூடாது. நன்றாக யோசித்து, அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து, மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு பழக வேண்டும்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us