தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வழி திறக்கும்!

வழி திறக்கும்!

வழி திறக்கும்!


PUBLISHED ON : ஜன 04, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 04, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்று திங்கள் கிழமை. பள்ளி சென்று திரும்பிய அமுதா, அம்மாவிடம் வந்தாள்.

'தீபாவளி வரப்போகுது... புதுத்துணி எடுத்துக் கொடுக்க அப்பா கிட்ட சொல்லும்மா...' என்று அடம்பிடித்தாள்.

'இரும்மா... இன்னும் ஒரு மாசம் இருக்குதுல்ல... அதுகுள்ள அடம் பிடிக்கிறியே... அண்ணன பாரு, சமத்தா இருக்குறதை; ஏதாச்சும் கேட்கிறானா... அப்பாவே வேண்டியதை வாங்கி தருவார்... படிக்கிற வேலையப் பாரு...' என்றாள், அம்மா வசந்தி.

முகத்தை சுருக்கிய அமுதா, வாய்க்குள் ஏதேதோ முணு முணுத்தபடி கோபமாக சென்றாள்.

அமுதாவின் அப்பா மூர்த்தி, சிறுவிவசாயி. நிலத்தில் கடுமையாக உழைப்பார். சில நேரம், விளைச்சல் அதிகம் கிடைக்கும்; பல சமயம் பயிர் கருகிவிடும். வரவு இன்மையால் குடும்பம் தள்ளாடும். மேடும், பள்ளமும் நிறைந்த வாழ்க்கை. வருமானத்துக்கு ஏற்றாற் போல் குடும்பத்தை நடத்துவாள் வசந்தி.

தீபாவளி பண்டிகை நெருங்கி விட்டாலே, மூர்த்தி மனதில் அச்சம் வந்து விடும். 'எப்படி சமாளிக்கப் போகிறோம்... யாரிடம் கடன் கேட்பது' என்று யோசிக்க ஆரம்பித்து விடுவார்.

'ஆடிப்பட்டம் தேடி விதை' என்பதற்கு ஏற்ப, ஆடி மாதம் விதை போடுவார்; அடுத்து சில மாதங்களில் அறுவடை துவங்கும் முன், தீபாவளி வந்து விடும். அதனால், 'பயிரை விற்று கடனை திருப்பி கொடுத்து விடுகிறேன்...' என்று கூறி, கடன் வாங்குவார்.

காளிபாளையத்தில், பெரும் பணக்காரன் ஒருவன் இருந்தான். அவனிடம், கடன் கேட்டு வாங்குவதற்கு என்றே ஒரு கூட்டம் இருந்தது. பண்டிகை வந்து விட்டால், அவனைத் தேடி விவசாயிகள் வருவர். கந்து வட்டிக்கு கடன் கொடுப்பான்.

அவனைத் தேடி புறப்பட்டார் மூர்த்தி. கடனாக, 5,000 ரூபாய் வாங்கியவர், 'அமுதா குட்டி... நாளைக்கு, டவுனுக்கு போறோம்; உனக்கு என்ன, 'டிரஸ்' வேணுமோ எடுத்துக்கோ...' என்று மகிழ்வுடன் கூறினார்.

மறுநாள் -

பக்கத்து நகரத்துக்கு, குடும்பத்துடன் சென்றார்; வேண்டிய பொருட்களையும், துணிமணிகளையும் வாங்கி, வீடு திரும்பினர்.

மறுநாளே, மூர்த்தியை கவலைப் பிடித்துக் கொண்டது.

'கடனாக வாங்கிய பணம் முழுவதும் செலவாகி விட்டதே... தீபாவளியன்று செலவிற்கு என்ன செய்வது' என்று யோசித்தார்.

அவர் கவலையை உணர்ந்த வசந்தி, 'என் அம்மா ஆயிரம் ரூபாய் தரேன்னு சொன்னாங்க. அதை வைத்து பண்டிகை செலவை சமாளித்துக் கொள்ளலாம்...' என்று ஆறுதல் சொன்னாள். அவ்வாறே, பணம் கிடைக்க, தீபாவளி மகிழ்ச்சியுடன் கடந்தது.

மார்கழி மாதம் வந்தது. கடனாக வாங்கிய பணத்தை கேட்க துவங்கிய பணக்காரன், 'என்னப்பா பணம் வாங்கி பல நாட்கள் ஆச்சு... திருப்பி தரலயே... எப்ப கொடுக்கப்போற...' என்றான்.

'தை பிறக்கட்டும், பயிர் அறுவடையானதும் உங்க கடனை அடைச்சுடுறேன்...' என்றார்.

வாக்கு கொடுத்திருந்தபடி, தை பிறந்தது. நெற்பயிர் விளைந்து, வரப்பே தெரியாத அளவிற்கு கவிந்திருந்தது. கதிரை எல்லாம் அறுத்து, அரிசியாக மாற்றி சந்தையில் விற்ற மூர்த்திக்கு நல்ல லாபம் கிடைத்தது.

வாங்கிய கடன்களை எல்லாம் திருப்பி செலுத்தியதும் மனம் லேசாகியது. மகிழ்ச்சியுடன் வயலுக்குச் சென்றார். வரப்பில் நிதானமாக நடந்து, அடுத்த போகத்துக்கு திட்டமிட்டார்.

விவசாயிகள் வரப்பில் மீது நடந்து தான் வயலை நிர்வகிப்பது வழக்கம். மார்கழி மாதத்ததில், நெல்கதிர்கள் கவிந்து வரப்பு மூடியிருக்கும். அதனால் நடக்க முடியாது. நெற்கதிரை அறுத்த பின், வரப்பு தெளிவாகும். அதில் நடக்க வழி கிடைக்கும்.

இதைத்தான், 'தை பிறந்தால் வழி திறக்கும்' என்று விவசாயிகள் குறிப்பிடுவர். நாளடைவில் இந்த சொற்றொடர், 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என வழக்கமாக மாறியது.

அன்பு குழந்தைகளே... விவசாயிகள் கடுமையாக உழைப்பதால் தான், தானியங்கள் விளைந்து, நமக்கு உணவு கிடைக்கிறது. இதை உணர்ந்து, துளி உணவையும் வீணாக்காமல் பயன்படுத்துங்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us