PUBLISHED ON : ஜன 07, 2011

முன்னொரு காலத்தில் குடகு மலையை வீரநிலவன் என்ற அரசன் ஆண்டு வந்தான். ஒருமுறை அவன் வேட்டையாடக் காட்டிற்குத் தனியே சென்றான். நிறைய விலங்குகளை வேட்டையாடினான். களைப்பு அடைந்த அவனுக்குத் தாகம் எடுத்தது.
எங்கே தண்ணீர் கிடைக்கும் என்று நாலா பக்கமும் பார்த்தான். தொலைவில் இருந்த குடிசை ஒன்று கண்ணில் பட்டது. அங்கே சென்றான் அவன். அந்தக் குடிசைக்கு வெளியே வேடுவப் பெண் ஒருத்தி அமர்ந்து இருந்தாள். சிறுவர்களாக இருந்த தன் மகன்களுக்கு அவள் உணவு ஊட்டிக் கொண்டிருந்தாள்.
அவளைப் பார்த்து அவன், ''அம்மா! தாகமாக உள்ளது. தண்ணீர் தாருங்கள்!'' என்று கேட்டான்.
வந்தவர் அரசர் என்பதை அறிந்து கொண்டாள் அவள். தண்ணீர் கொண்டு வருவதற்காகக் குடிசைக்குள் சென்றாள். அந்தச் சிறுவர்களைப் பார்த்தான் அவன். நல்ல உடல்நலத்துடன் கொழு கொழுவென்று இருந்தனர். என்ன சாப்பிடுகின்றனர் என்று கவனித்தான். கேழ்வரகுக் கூழ் என்பது தெரிந்தது. 'இந்தச் சிறுவர்கள் கூழை உண்டு இவ்வளவு வலிமையுடன் விளங்குகிறார்களே. நம் மகனும் இவர்களைப் போன்ற சிறுவன்தான். வேளை தவறாமல் சத்துள்ள உணவைச் சாப்பிடுகிறான். அவனைக் கவனித்துக் கொள்ள அரண்மனை மருத்துவர்கள் உள்ளனர். இருந்தும் அவன் நோஞ்சானாக உள்ளான். ஏதேனும் நோயினால் அடிக்கடி துன்பப்படுகிறான். இவர்கள் நல்ல உடல்நலத்துடன் விளங்க என்ன காரணமாக இருக்கும்,' என்று சிந்தித்தான் அரசன். அப்போது அவள் தண்ணீர்ப் பாத்திரத்துடன் வெளியே வந்தாள். ''அரசே! தண்ணீர் குடியுங்கள்,'' என்று பாத்திரத்தை நீட்டினாள். அவனும் தண்ணீர் குடித்தான்.
தனது சந்தேகத்தைப் போக்கிக் கொள்ள நினைத்த அவன், ''அம்மா! உம் மகன்கள் கூழைக் குடித்தே நல்ல உடல்நலத்துடன் காட்சி தருகின்றனர். இளவரசனுக்கும் இவர்கள் வயதுதான். ஆனால், அவன் இவர்களைப் போல உடல் நலத்துடன் விளங்கவில்லை. அடிக்கடி ஏதேனும் நோயினால் துன்பப்படுகிறான். உடல்நலத்துடன் இவர்கள் விளங்க என்ன காரணம்?'' என்று கேட்டான். ''அரசே! என் மகன்கள் உடல் நலத்தோடு விளக்க மூன்று வழிமுறைகளைப் பின்பற்றுகிறேன். முதலாவது அவர்கள் பசி எடுத்த பின்னரே உண்ண வேண்டும். இரண்டாவது உணவு நேரம் தவிர மற்ற நேரங்களில் எதையும் சாப்பிடக் கூடாது. மூன்றாவது தேவையான அளவே உண்ண வேண்டும். அதிகமாக உண்ணக் கூடாது. இந்த மூன்று வழிமுறைகளையும் யார் பின்பற்றினால் நல்ல உடல்நலத்துடன் விளங்குவர்!'' என்றாள் அவள்.
அவளுக்கு நன்றி சொல்லிவிட்டு அரண்மனை திரும்பினான் அரசன். முரசு அடிப்பவனை அழைத்தான். வேடுவப் பெண் சொன்ன மூன்று வழிமுறைகளையும் அவனிடம் சொன்னான்.
''நம் நாட்டு மக்கள் உண்ணும் போது இவற்றைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். இதை நாடெங்கும் தெரிவி!'' என்றான். முரசு அடிப்பவனும் இந்தச் செய்தியை நாடெங்கும் தெரிவித்தான். அந்நாட்டு மக்கள் அந்த மூன்று வழிமுறைகளையும் பின்பற்றினர். அவர்கள் எல்லாரும் நல்ல உடல்நலத்தோடு வாழ்ந்தனர். இளவரசனும் உடல் நலம் தேறினான் என்பதை சொல்லவும் வேண்டுமா குட்டீஸ்! ***
