
நேரம் பொன்னானது; திட்டமிட்டு பயன்படுத்தினால் வெற்றி இலக்கை எளிதாக அடையலாம். கடந்து போன வினாடி மீண்டும் வராது. இதை மனதில் கொண்டு நேரத்தை நிர்வாகம் செய்யும் பயற்சி பற்றி பார்ப்போம்...
* வேலையை திட்டமிடுங்கள்; எப்படி, எந்த நேரத்தில் செய்யலாம் என, முடிவு செய்யுங்கள். திட்டமில்லாத வேலை சிறப்படையாது
* படிக்கும் மேஜையில் குப்பை குவிந்திருந்தால் கவனம் பிசகும்; மேஜையை விருப்பத்திற்கு ஏற்ப அழகுப்படுத்துங்கள். புத்தகங்களில் தேவையானவற்றை மட்டும் பார்வையில் படும்படி வைத்துக் கொள்ளவும்
* காலையில் உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை கடைபிடியுங்கள். அது ஆரோக்கியத்தை காக்கும்; மன வலிமையை தரும்; சுறுசுறுப்பை துாண்டும். மனதை தளர்த்தி வேலையை திறம்பட முடிக்க உதவும்
* பணியின்போது, கவனச்சிதறல் கூடாது. வந்தால் திறனில் பாதிப்பை ஏற்படுத்தும். காலவிரயமும் ஏற்படும். திட்டமிட்டபடி வேலையை, உரிய நேரத்தில் செய்தால் பலன் நிச்சயம்
* மேஜையில் நாள்குறிப்பு புத்தகம் வைத்துக் கொள்ளவும். அதில், அன்றாட வேலை திட்டத்தை குறிக்கவும். குறித்த நேரத்தில் முடிக்க முயற்சி செய்யவும்
* சுருக்கமாக பேசுங்கள். அது, கேட்பவருக்கு புரியும் வண்ணம் எளிய சொற்களில் அமையட்டும். அதிகம் பேசினால், எதிர்பார்க்கும் பலன் கிடைக்காது. நேரம் விரயமாகும்
* யாருடன் பணி செய்கிறோம் என்பதை அறிந்து திட்டமிடவும். அவருடன் மிகச்சரியாக பேசப்பழகவும். அன்பு, நட்பு கனிய பேசுங்கள். அது, காலவிரயத்தைக் குறைக்கும். வெற்றியை தரும்
* முதலில் செய்ய வேண்டிய முன்னுரிமை பணியை தீர்மானியுங்கள். சிலவற்றை காலம் தாழ்த்தி செய்தாலும் கூட கெடுதல் வராது. இப்படி முறைப்படுத்தி பழகினால் ஆற்றலை சேமிக்கலாம். எண்ணிய லட்சியத்தை அடையலாம்.

