PUBLISHED ON : பிப் 03, 2012

பெரிய மனிதனைப் போலத் தோற்றம் அளிக்கும் வீரமணிக்கு, புத்தி தான் சின்னப்புத்தி. ஓட்டலில் சாப்பிட்டு விட்டுப் பணம் கொடுக்காமல் வந்து விடுவான். அவனுடைய கம்பீரமான தோற்றத்தை பார்த்து, யாரும் சந்தேகப்பட மாட்டார்கள். இப்படி மோசம் செய்தே நிறைய பணம் சம்பாதித்து விட்டான்.
ஒரு தடவை பலமான காற்று வீசியது. தெருவில் புழுதி பறந்தது. அந்தக் காற்றில் வீரமணி வீட்டிற்குள் ஒரு பத்து ரூபாய் நோட்டு பறந்து வந்து விழுந்தது.
நகை வாங்குவதற்காகப் புறப்பட்டுக் கொண்டிருந்த வீரமணி, அந்தப் பத்து ரூபாய் நோட்டை எடுத்துக் கண்களில் ஒற்றிக் கொண்டான்.
''எனக்கு அதிர்ஷ்டக் காற்று வீசுகிறது. அதனால் தான் இந்த நோட்டு பறந்து வந்து என் வீட்டிற்குள் விழுகிறது!'' என்று கூறிக் கொண்டே வீட்டை விட்டுப் புறப்பட்டான்.
தெருவில் போய்க் கொண்டு இருந்த பொழுது வீரமணி அருகே ஒரு கார் வந்து நின்றது.
''எங்கே சார் போகிறீர்கள்? காரில் ஏறிக் கொள்ளுங்கள். நீங்கள் போக வேண்டிய இடத்தில் உங்களைக் கொண்டு போய் இறக்கி விடுகிறேன்,'' என்று காரோட்டி கூறினான்.
ஓசிச் சவாரி! வீரமணி மகிழ்ச்சியுடன் காரில் ஏறி <உட்கார்ந்தான். கார் புறப்பட்டது. வீரமணிக்கு கார் சவாரியை சீக்கிரம் முடித்துக் கொள்ள விருப்பம் இல்லை. அதனால் இறங்க வேண்டிய இடத்தைக் கூறாமல் மவுனமாக இருந்தான். நகரைக் கடந்து காட்டு சாலையில் போய் கொண்டிருந்த கார், திடீரென்று நின்றது.
காரோட்டி துப்பாக்கியுடன் கீழே இறங்கி வீரமணியை குறி வைத்து, ''மோதிரம், கடிகாரத்தை எல்லாம் மரியாதையாகக் கழற்று; பையில் இருக்கும் பணத்தை எடு,'' என்று அதட்டினான்.
வீரமணி வெலவெலத்துப் போனான். காரோட்டி மளமளவென்று காரியத்தில் இறங்கினான்
அவனே வீரமணி பையிலிருந்து பத்தாயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டான். இதுவரை மோசம் செய்து சேர்த்த பத்தாயிர ரூபாய்க்கு ஏதாவது நகை வாங்கலாம் என்று நினைத்து எடுத்துக் கொண்டு வந்த பணம், இப்போது கொள்ளை போய்விட்டது. கூடவே, அவன் கஷ்டப்பட்டு சம்பாதித்து வாங்கிய மோதிரமும், கைக்கடிகாரமும் பறி போய் விட்டன. எல்லாவற்றையும் பறித்துக் கொண்ட பிறகு காரோட்டி வீரமணியை இறக்கி விட்டு விட்டு, காரைக் கிளப்பிக் கொண்டு பறந்தான்.
வீரமணி கார் நம்பரைக் கவனித்தான். அதில் நம்பரே இல்லை. அது திருட்டு கார் என்பதையும், அந்தக் காரில் வந்தவன் திருடன் என்பதையும் புரிந்துக் கொண்ட வீரமணி, நடந்தே வீடு வந்து சேர்ந்தான்.
'ஊரை ஏமாற்றுபவன் ஒரு நாள் ஏமாறுவான்' என்பதைப் புரிந்தக் கொண்ட வீரமணி, திருந்த முடிவு எடுத்தான். வீட்டிலிருந்த ஒரேயொரு திருட்டுப் பொருளான வெற்றிலைப் பெட்டியை வெளியே வீசி எறிந்தான். அவனுடைய செயலை புரிந்து கொள்ள முடியாமல் திகைத்தாள் அவன் மனைவி.
***
