PUBLISHED ON : நவ 21, 2014

அரியலூர் என்னும் கிராமத்தில் கபிலன் என்பவன் வாழ்ந்து வந்தான். அவன் தோட்டத்தில் பல வகையான காய்கறிளையும், பழங்களையும் பயிரிட்டு அவற்றைக் கடைத் தெருவில் விற்று, வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தான்.
அவனுக்கு மூன்று பிள்ளைகள். அவர் களை வேளா வேளை உணவு கொடுத்துப் பள்ளிக்கு அனுப்பிப் படிக்க வைத்து அவர் கள் விரும்பியதை வாங்கிக் கொடுத்து, ஒரு குறையுமில்லாமல் அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பதற்காக, அவன் கடுமையாக உழைத்தான்.
அவன் மனைவி மிகவும் நல்லவள். எப்போதும் கணவனுக்கு ஆதரவாக இருந்தாள். அவனுடைய வேலைகளி லெல்லாம் உதவியாக இருந்தாள். அது இல்லையே? இது இல்லையே? தனக்கொரு நகை இல்லையே, பட்டாடை இல்லையே? என்றெல்லாம் வருத்தப்பட்டுக் கொண்ட தில்லை.
கபிலன் ஏழையாக இருந்தாலும் ஒரு வகையில் கொடுத்து வைத்தவன்தான். அவனுடைய தோட்டத்தின் கடைசிப் பகுதியில் ஆப்பிள் மரங்கள் வரிசையாக வளர்ந்திருந்தன. அவன் அவற்றைக் கண்ணின் மணியெனப் போற்றினான். அவை பழுத்துக் குலுங்கு கையில், அவற்றைப் பறித்து விற்று உபரி வருவாய் தேடிக் கொண்டான்.
ஒரு விஷயம் சற்று அவனை உறுத்தியது. ஆப்பிள் மரங்கள் நீண்ட வரிசையிலிருந்தன. ஆனால், ஓரிடத்தில் மாத்திரம் ஒரு மரத் திற்கும் இன்னொறு மரத்திற்குமிடையி லிருந்த இடைவெளி அதிகமாக இருந்தது. இந்த இடத்தில் வேறொரு ஆப்பிள் மரம் வைத்து வளர்க்கலாமென்று அவனுக்குத் தோன்றியது.
ஆனால், ஆப்பிள் கன்று விலை அவனால் வாங்க முடியாத அளவுக்கு, மிக அதிகமாக இருந்தது. ஆப்பிள் மர வரிசையிலிருந்த இடைவெளியைப் பார்க்கும் போதெல்லாம் அவன் பெருமூச்சு விட்டான்.
அடுத்த நிமிடமே மனதைத் திடப்படுத்திக் கொண்டு, ''அதனாலென்ன? குடி முழுகி விடவில்லை. அந்த இடைவெளி இருந்த இடத்தில் இன்னொரு கன்றை நட்டு வைத்தால், அதற்கு தண்ணீர் ஊற்றிப் பராமரிக்க வேண்டும். இப்போது அந்தத் தொல்லை இல்லை!'' என்று சிரித்துக் கொண்டான்.
இந்த நிலையில் அவனுடைய பிறந்த நாளும் நெருங்கிக் கொண்டிருந்தது. தன்னுடைய பிறந்த நாளைப் பற்றி அவனுக்கு நினைவேயில்லை.
ஆனால், அவனுடைய பிள்ளைகள் கூடி ஆலோசித்தனர். அவர்கள் பொருட்டாகக் கடுமையாக உழைக்கும் அவனுக்கு நல்லதொரு பிறந்த நாள் பரிசளிக்க வேண்டுமேன்று தீர்மானித்தனர். அது அவனுடைய உள்ளத்தில் மகிழ்ச்சியை உண்டாக்கி முகத்தில் மலர்ச்சியை உ<ண்டாக்கும்.
அது என்ன பரிசாக இருக்க வேண்டு மென்றும் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. அது ஓர் ஆப்பிள் கன்று தானென்பதில் சந்தேகமென்ன?
அப்பாவுக்காக ஆப்பிள் மரக் கன்றை வாங்க வேண்டுமென்றால், அதற்குப் பணம் வேண்டும். பணத்தை எப்படி அடைவது? வேலை செய்தால் பணம் கிடைக்கும். அவர் கள் என்ன வேலை செய்வது? அவர்களால் என்ன வேலை செய்ய முடியும்?
மூத்தவன் ஒரு விறகு வெட்டியிடம் இரண்டு நாட்கள் வேலை செய்தான். விறகு பிளந்தான். பிளந்த விறகுகளை ஓரிடத்தில் குவியலாக அடுக்கி வைத்தான். வேலை செய்து பழக்கப்பட்டிராததால், கை, கால்க ளெல்லாம் வலித்தன. தந்தையை நினைத்து, பொறுத்துக் கொண்டான். கிடைத்த ஊதியம் உற்சாக மூட்டுவதாக இருந்தது.
இரண்டாவது மகனுக்கு, என்ன வேலை செய்வதென்றே தெரியவில்லை. யாரும் அவனுக்கு வேலை கொடுப்பதாகவுமில்லை. தந்தையின் தோட்ட வேலைகளில் உதவிய அனுபவமிருந்தது. அவனுக்கு தந்தை தோட்டத்தில் அவனுக்கென்று ஒரு சிறிய பகுதியை ஒதுக்கிக் கொடுத்திருந்தார். அதில், அவன் பூஞ்செடிகளை நட்டிருந்தான். செடிகளில் பூக்கள் பூத்தபோது அவனுக்குப் பெருமையாக இருந்தது. அந்தப் பூக்களை யாரையும் தொட விட மாட்டான்.
பூக்களையெல்லாம் பறித்தான். ஒரு மாலையாகக் கட்டினான். அந்த மாலை அழகாக இருந்தது. இனிய மணம் வீசியது. அதை அவன் கடைத் தெருவிற்குக் கொண்டு போய்க் கொண்டிருந்தபோது அதை வாங்கு வதற்கு, 'எனக்கு, உனக்கு' என்று போட்டி போட்டனர்.
யார் அதிகமான விலைக்குக் கேட்டாரோ, அவருக்கு அதைக் கொடுத்தான். அவன் மனதில் நிம்மதி பிறந்தது.
இளையவன் வேலை தேடிச் சென்று கொண்டிருந்தபோது ஒரு கடைக்காரன் அவனை அழைத்தான்.
''தம்பி! நீ கபிலன் மகன்தானே!'' என்று கேட்டான்.
''ஆம்!'' என்றான் இளையவன்.
''நான் உன்னிடம் ஒரு பை தருகிறேன். அதைக் கொண்டு போய் அடுத்த தெருவி லிருக்கும் வைத்தியரிடம் கொடுத்து விட்டு வா. அவருக்கு வேண்டிய முக்கியமான மருந்துகள் இந்தப் பையிலிருக்கின்றன. இந்தச் சிறிய தொகையை நீ செய்யும் வேலைக்கு அன்பளிப் பாக வைத்துக் கொள்,'' என்றான் கடைக்காரன்.
'சரி' யென்று பையையும் பணத்தையும் இளையவன் பெற்றுக் கொண்டான்.
''எங்கேயும் பராக்குப் பார்த்துக் கொண்டு நிற்காதே, போனோமா, வந்தோமா, என்று வேலையைச் சட்டென்று முடி!'' என்றான் கடைக்காரன்.
வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல, 'எதையும் விரைவாகச் செய்வேன்!' என்று ஓடினான் இளையவன்.
இப்படியாக மூன்று பேரும் சேர்த்து கொண்டு வந்த பணம் ஒரு கணிசமான தொகையாக இருந்தது. அதைக் கொண்டு, ஓர் ஆப்பிள் மரக்கன்று வாங்கினர். தந்தையின் பிறந்த நாளன்று அவர் படுக்கையிலிருந்து எழுந்திருப்பதற்கு முன்னரே மூவரும் தோட்டத்திற்குப் போய், இடைவெளியாக இருந்த இடத்தைத் தோண்டினர்.
'க்ளிங்க்' என்று சத்தம் கேட்டது. நிலத்திற்கு அடியில் கடப்பாரை எதிலோ மோதியது.
''இன்னும் கொஞ்சம் தோண்டு!'' என்றான். இளையவன்.
மூத்தவனின் கையிலிருந்த கடப்பாரை இன்னும் வேகமாகப் பாய்ந்தது.
இளையவன் குழியிலிருந்த மண்ணை அள்ளி வெளியே கொட்டினான். ஒரு தகரப் பெட்டி தெரிந்தது. மூவரும் சேர்ந்து பெட்டியை அசைத்து, ஆளுக்கொரு பக்கமாகப் பிடித்துக் கொண்டு, வெளியே தூக்கினர்.
பெட்டி மூடப்பட்டிருந்தது.
''இதற்குள் என்ன இருக்கும்?'' என்று இளையவன் கேட்டான்.
''மண்ணாங்கட்டி!'' என்றான் மூத்தவன்.
பெட்டி புதைக்கப்பட்டு வெகு காலமாகியிருக்கும் போலத் தோன்றியது.
மூத்தவன் கையிலிருந்த கடப்பாரை பெட்டியின் பூட்டைத் தெறித்து விழும்படி செய்தது. இளையவன் பரபரப்போடு பெட்டியைத் திறந்தான்.
உள்ளே தங்க நாணயங்கள் பளபளத்தன. மூவருடைய கண்களும் நிலை குத்தி நின்றன. திறந்த அவர்களுடைய வாய் மூடவில்லை. காண்பது கனவு போலிருந்தது.
''தங்கம்...! தங்கம்...! தங்கம்...!'' என்று கூவினான் மூத்தவன்.
''ஆம்... ஆம்... ஆம்...!'' என்று குதித்தான் இளையவன்.
''அம்மா...! அம்மா...! வாங்க! சீக்கிரமா ஓடியாங்க! இங்கே வந்து பாருங்க!'' என்று கத்தினான் மூத்தவன்.
அவர்களுடைய பெற்றோர் விரைந்து வந்தனர். தங்க நாணயப் பெட்டியைப் பார்த்துப் பேச்சு மூச்சில்லாமல் பிரமித்து நின்றனர்.
''இதை எப்படிக் கண்டு பிடித்தீர்கள்?'' என்று கபிலன் கேட்டான்.
பிள்ளைகள் நடந்ததையெல்லாம் சொன்னார்கள்.
''எனக்குப் பிறந்த நாள் பரிசா?'' என்ற கபிலன் குரல் தழுதழுத்தது.
பிள்ளைகள் தாங்கள் வாங்கி வந்திருந்த ஆப்பிள் மரக் கன்றை அவனிடம் காட்டினர்.
''தந்தையே! இதுதான்... இந்தக் கன்றுதான் இந்தப் புதையல் நமக்குக் கிடைக்கும்படி உதவியிருக்கிறது!'' என்றான் மூத்தவன்.
கபிலன் அந்த ஆப்பிள் மரக் கன்றை அன்போடு தழுவிக் கொண்டான்.
''என்னைப் பொறுத்தவரை புதையல் அவ்வளவு முக்கியமல்ல. இந்த ஆப்பிள் கன்றுதான் என் செல்வம்! என் புதையல்! என் பிள்ளைகள் என் மேல் கொண்டிருக்கும் பாசத்தின் நினைவுச் சின்னம்!'' என்றான்.
அதன்பிறகு அந்தப் புதையலைக்கொண்டு செழிப்பாக வாழ்ந்தனர்.
***
