sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இரண்டு பொற்காசுகள்!

இரண்டு பொற்காசுகள்!

இரண்டு பொற்காசுகள்!


PUBLISHED ON : டிச 18, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 18, 2015


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரசவைக்குக் கழைக் கூத்தாடி ஒருவன் வந்தான். கயிற்றின் மேல் நின்றபடி பல வித்தைகளைச் செய்து காட்டினான். அவையில் இருந்தவர்கள் அவன் திறமைகளை எல்லாம் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர். கழைக் கூத்து முடிந்தது. இரண்டு பொற்காசுகளை அவனுக்குப் பரிசாகத் தந்தார் அரசர். மாட்டு வண்டியை ஓட்டியவாறு மகிழ்ச்சியுடன் ஊர் திரும்பினான் கழைக் கூத்தாடி.

வழியில் இருந்த காட்டு வழியே சென்றான். தண்ணீர் வேட்கை கொண்ட அவன் கண்களுக்கு கிணறு ஒன்று தெரிந்தது. வண்டியை விட்டு இறங்கி கிணற்றருகே சென்றான். ஒரு பாத்திரத்தில் கயிற்றைக் கட்டி அதைக் கிணற்றுக்குள் விட்டு தண்ணீர் எடுக்கத் தொடங்கினான்.

''யார் கிணற்றுக்குள் இருந்து தண்ணீர் எடுப்பது?'' என்று பயங்கரமான குரல் கேட்டது.

அஞ்சி நடுங்கிய கழைக்கூத்தாடி கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தான். உள்ளே யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. நடுங்கும் குரலில் அவன், ''ஐயா! நான் கழைக்கூத்தாடி. தண்ணீர் குடிப்பதற்காக இங்கு வந்தேன். நீங்கள் யார்?'' என்று கேட்டான்.

''விரும்பியதை எல்லாம் கொடுக்கும் மந்திரக் கிணறு இது. இதைப் பாதுகாக்கும் பூதம் நான். யார் கண்ணுக்கும் நான் தெரிய மாட்டேன்!'' என்றது அந்தக் குரல்.

''மந்திரக்கிணறா! விரும்பியதை எல்லாம் தருமா?'' என்று வியப்புடன் கேட்டான் அவன்.

''உன்னிடம் பொற்காசுகள் உள்ளதா? ஒரு பொற்காசை இந்தச் கிணற்றுக்குள் போடு. உன் விருப்பம் எதுவானாலும் கேள். உடனே அது நிறைவேறும். நன்றாக நினைவு வைத்துக் கொள். இரண்டு முறைதான் இந்தக் கிணறு உன் எண்ணத்தை நிறைவேற்றும்,'' என்றது அந்தக் குரல்.

'என்னதான் நடக்கிறது பார்ப்போம்' என்ற எண்ணத்தில், ஒரு பொற்காசை கிணற்றுக்குள் போட்டான்.

''விலை உயர்ந்த நகைகளாலும், பொற்காசுகளாலும் என் வண்டி நிரம்ப வேண்டும்!'' என்றான்.

ஒரு நொடிக்குள் அவன் வண்டி பொற்காசுகளாலும், நகைகளாலும் நிரம்பி இருந்தது. இதைப் பார்த்து வியப்படைந்தான் கழைக்கூத்தாடி.

'ஆ! ஏராளமான செல்வம் கிடைத்து விட்டது. இந்த நாட்டிலேயே பெருஞ் செல்வன் நான்தான்' என்று மகிழ்ச்சியுடன் சொல்லியபடி வண்டியில் அமர்ந்தான்.

'ஐயோ! காட்டு வழியாகச் செல்ல வேண்டுமே! வழியில் திருடர்கள் இருப்பார்களே! அவர்கள் இந்த நகைகளையும், பொற் காசுகளையும் கைப்பற்றிக் கொள்வார்களே! என்ன செய்வது' என்று சிந்தித்தான் அவன்.

நல்ல வழி ஒன்று அவனுக்குத் தோன்றியது. கிணற்றருகே வந்து, தன்னிடம் இருந்த இரண்டாவது பொற்காசையும் கிணற்றுக்குள் போட்டான்.

''உனக்கு என்ன வேண்டும்!'' என்று உள்ளிருந்து குரல் கேட்டது.

''வண்டியில் இருக்கும் நகைகளும், பொற்காசுகளும் என் கண்களுக்கு மட்டும் தெரிய வேண்டும். பிறர் கண்களுக்குத் தெரியக் கூடாது?'' என்று கேட்டான் அவன்.

''அப்படியே ஆகட்டும்!'' என்று குரல் வந்தது.

வண்டியை ஓட்டிக் கொண்டு புறப்பட்டான் அவன். எதிரில் திருடர்கள் சிலர் வந்தனர். அவர்கள் கண்களுக்கு வண்டியில் இருந்த நகைகளும், பொற்காசுகளும் தெரியவில்லை. தன் அறிவுக் கூர்மையை மெச்சிக் கொண்டு, மகிழ்ச்சியுடன் தன் வீட்டை அடைந்தான்.

வண்டியில் இருந்தபடியே தன் மனைவிக்குக் குரல் கொடுத்தான் கழைக் கூத்தாடி. மனைவியும் வெளியே வந்தாள்.

''இனி நாமோ, நம் பரம்பரையோ வறுமையில் வாட வேண்டாம். அரசனைப் போல செல்வச் செழிப்புடன் வாழலாம். வண்டியில் விலை உயர்ந்த பொருள்கள் என்னென்ன கொண்டு வந்துள்ளேன் பார்!'' என்று மகிழ்ச்சியுடன் சொன்னான்.

வண்டி காலியாக இருப்பதைப் பார்த்து அவன் மனைவி திகைத்தாள்.

''என்னங்க! வண்டியில் விலை உயர்ந்த பொருள்கள் இருப்பதாகச் சொன்னீர்கள். எந்தப் பொருளும் இல்லையே!'' என்றாள்.

அவன் கண்களுக்கு வண்டியில் ஏராளமான பொற்காசுகளும், நகைகளும் இருபது தெரிந்தது. மனைவியைப் பார்த்து, ''வண்டியை நன்றாகப் பார்!'' என்றான்.

''நன்றாகப் பார்த்து விட்டுத்தான் சொல்கிறேன். வண்டியில் ஒன்றும் இல்லை,'' என்றாள்.

அப்போதுதான் அவனுக்குத் தான் கேட்ட இரண்டாம் வரத்தின் நினைவு வந்தது.

நடந்ததை எல்லாம் மனைவியிடம் சொன்னான் அவன்.

''உங்களுக்கு மட்டும் பொற்காசுகள் தெரிகின்றன. ஆனால், பிறருக்குத் தெரிவது இல்லை. அப்படிப்பட்ட பொற்காசுகளை நீங்கள் எப்படிப் பிறரிடம் தர முடியும். அதற்கு மாற்றாக எப்படிப் பொருள்களை வாங்க முடியும்!'' என்று கேட்டாள்.

அப்போதுதான் அவனுக்குத் தான் கேட்ட இரண்டாம் வரம் எவ்வளவு தவறானது என்று புரிந்தது. கிடைத்த விலை மதிப்பற்ற பொருள்களைப் பயன்படுத்த முடியாத நிலையையும் உணர்ந்தான். வருத்தம் அடைந்து வண்டியை ஓட்டியவாறு மீண்டும் காட்டிற்குச் சென்றான். வண்டியில் இருந்த பொற்காசுகளையும், நகைகளையும் மந்திரக் கிணற்றுக்குள் எறிந்தான்.

''மந்திரக் கிணறே! நீ கொடுத்த பொருள்கள் எதுவும் எனக்கு வேண்டாம். நான் போட்ட பொற்காசுகளைத் திரும்பத் தந்து விடு,'' என்று கெஞ்சினான் அவன்.

''என்னால் இரண்டு வரங்களைத் தான் தர முடியும். நீ முன்னரே அவற்றைப் பெற்று விட்டாய். இனி உனக்கு என்னால் எந்த உதவியும் செய்ய முடியாது!'' என்று கிணற்றுக்குள் இருந்து குரல் வந்தது.

ஏமாற்றம் அடைந்த கழைக்கூத்தாடி வருத்தத்துடன் வீடு திரும்பினான்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us