PUBLISHED ON : ஜூலை 05, 2019

விழுப்புரம் மாவட்டம், கீழ்பெரும்பாக்கம், அரசு உயர்நிலைப் பள்ளியில், 1987ல், 10ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம் இது!
எங்கள் வகுப்பாசிரியர் குருமூர்த்தி; கணக்கு ஆசிரியரும் அவரே. மாணவர்கள் தவறு செய்தால் தண்டிக்க மாட்டார்; அறிவுரைக் கூறி, திருத்த முயல்வார்.
அவருக்கு நேர் எதிர் குணம் உள்ளவர், தலைமை ஆசிரியர் அரிதாச பாவலர். தவறு கண்டால், பிரம்பால் விளாசி தள்ளுவார்.
கூடா நட்பின் காரணமாக, எனக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் ஏற்பட்டது. ஒருமுறை, பள்ளி முடிந்து வரும் வழியில், புகைத்ததை வகுப்பாசிரியர் பார்த்து விட்டார்.
'பெரிய தப்புடா; இன்றே இப்பழக்கத்தை விட்டுடு...' என, அறிவுரை கூறினார். நான் சமாளித்தேனே தவிர, கைவிடவில்லை.
அரையாண்டுத் தேர்வு நடந்து கொண்டிருந்தது. தேர்வு மையத்தில் திடீரென நுழைந்து, சோதனை செய்தார் தலைமையாசிரியர். என் கால்சட்டை பையில், கையை நுழைத்தார். அங்கிருந்த தீப்பெட்டியை எடுத்தவர் திடுக்கிட்டார்.
'ஏன்டா... எத்தனை நாளா இந்த பழக்கம்...' என, கேட்டார்; செய்வதறியாது விழித்தேன். மேற்பார்வையாளராக இருந்த, வகுப்பாசிரியர் குருமூர்த்தி, 'சொல்லேன்டா... பரீட்சை நல்லா எழுதணும்ன்னு சாமிக்கு சூடம் ஏற்றி வழிபட்டேன்னு...' என்றார்.
நானும், 'ஆமாம் சார்...' என, அசடு வழிந்து, தலைமையாசிரியர் பிடியில் இருந்து தப்பினேன்.
அன்றே புகைப்பதை அடியோடு விட்டேன். என்னை நல்வழிப்படுத்திய, அந்த ஆசிரியரை நன்றியுடன் நினைக்கிறேன்.
- பி.சரவணன், சென்னை.
தொடர்புக்கு: 98406 52701
