PUBLISHED ON : நவ 09, 2019

கோவை மாவட்டம், வெள்ளமடை அரசு உயர்நிலைப்பள்ளியில், 1967ல், 6ம் வகுப்பு சேர்ந்தேன்.
மதிய உணவை, பள்ளி அருகே தோட்டத்தில் அமர்ந்து சாப்பிடுவோம். பின், குடிநீருக்காக கிராமத்திற்குள் செல்வோம். வீடுகளில், 'அம்மா... கொஞ்சம் தண்ணீர் கொடுங்க...' என்று கேட்டு வாங்கி குடிப்போம்.
கடும் குடிநீர் பஞ்சம் நிலவிய காலம் அது. சைக்கிளில் குடங்களைக் கட்டி, வெகுதுாரத்திலிருந்து நீர் எடுத்து வருவர்.
எங்கள் தமிழாசிரியர் சீனிவாசன், சைக்கிளில் பணிக்கு வந்து போவார். குடிநீருக்காக நாங்கள் அலைவதை பார்த்து விட்டார்.
மறுநாள், தலைமை ஆசிரியரை சந்தித்து, 'குடிநீருக்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. என் சம்பளத்தில் பிடித்தம் செய்து கொள்ளுங்கள்... மாணவர்களுக்கு தட்டுபாடு இன்றி கிடைக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.
உடனே, வழி பிறந்து விட்டது. அலைச்சல் இன்றி தாகம் தணிந்தது.
தற்போது என் வயது, 63; குடிநீருக்கு வழிவகை செய்த அந்த ஆசிரியரை நினைத்து பார்க்கிறேன். நெஞ்சம் நெகிழ்கிறது!
- எஸ்.எ.மாரப்பன், கோவை.
தொடர்புக்கு: 97913 82908
