PUBLISHED ON : செப் 26, 2020

என் வயது, 68; தினமும் காலை, 5:00 மணிக்கு நடைப் பயிற்சிக்கு செல்வேன். சனிக்கிழமைகளில் மட்டும் அதிகாலை, 4:30 மணிக்கே எழுவேன். நடைப்பயிற்சியை முடித்து, தினமலர் நாளிதழை கையோடு வாங்கி வந்து விடுவேன்.
முதலில், சிறுவர்மலர் இதழில், புதிர் பகுதிகளை பென்சிலால் வரைந்து நிரப்பி விடுவேன். என் பேரன், பேத்தியர் எழுந்ததும் பேனாவுடன் வந்து, 'நான் தான் முதலில் வரைவேன்...' என்று அடம்பிடித்து, சிறுவர்மலர் புத்தகத்தைப் புரட்டுவர்.
பென்சிலால் நிரப்பியிருப்பதைக் கண்டு, என்னுடன் சண்டைக்கு வருவர். சமாதானப்படுத்தி, ரப்பரால் அழித்து கொடுப்பேன். சமாதானமாகி புதிர்களை விடுவிப்பர். படத்தை வரைந்து மகிழ்வர்.
சனிக்கிழமைகளில் காலை, 6:00 மணிக்கே எழுந்து, 'சிறுவர்மலர் வந்து விட்டதா தாத்தா...' என கேட்கும் பேரக்குழந்தைகளின் குரல் மிகவும் மகிழ்ச்சி தருகிறது.
- கி.ஜெகன்மோகன், கோவை.
