தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/திருமணப் பரிசு!

திருமணப் பரிசு!

திருமணப் பரிசு!


PUBLISHED ON : ஜூலை 25, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 25, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரும்பாக்கம் என்ற ஊரில் ராம்மோகன் என்றொரு செல்வந்தர் இருந்தார். அவர் அவரது முன்னோர்கள் கட்டிய அரண்மனை போன்ற வீட்டில் மனைவி, மகளோடு வாழ்ந்து வந்தார்.

அவரிடம் வாரி வழங்கும் பண்பு இயல்பாகவே இருந்தது. உதவி கேட்டு வந்தவர்களுக்கு இல்லை என்னாது வாரி வழங்கினார். இதனால் அவர் செல்வம் கரைந்ததோடு, கடனாளியாகவும் ஆனார்.

தான் கடனாளியானது பிறருக்குத் தெரியக்கூடாது. தெரிந்தால் தன் மதிப்புப் போய் விடும் என்று நினைத்தார் அவர்.

வழக்கம் போலப் பிறருக்கு உதவி செய்து வந்தார்.

அந்த ஊரில் திவான் என்ற செல்வந்தன் இருந்தான். அவனுக்குப் பணத்தேவை ஏற்பட்டது.

ராம்மோகனிடம் வந்த அவன், ''அவசரமாக எனக்கு நூறு பொற்காசுகள் தேவைப்படுகிறது. கடனாகத் தாருங்கள். மூன்று மாதங்களில் திருப்பித் தந்து விடுகிறேன்,'' என்றான்.

'நானே வறுமையில் வாடுகிறேன். இந்த நிலையில் பொற்காசுகள் கேட்கிறாரே. உண்மையைச் சொல்லவும் தயக்கமாக உள்ளது. என்ன செய்வது?' என்று குழம்பினார் அவர்.

''இப்போது என்னால் உங்களுக்குக் கடன் தர இயலாது. வேறு யாரிடமாவது வாங்கிக் கொள்ளுங்கள்,'' என்று தயக்கத்துடன் சொன்னார்.

இதைக் கேட்டுக் கோபம் கொண்ட திவான், 'எனக்கா கடன் தர மறுக்கிறாய்? உன்னை ஓட்டாண்டியாக்கித் தெருவில் அலைய விடுகிறேன்' என்று உள்ளுக்குள் கருவினான்.

ராம்மோகனை எப்படி ஓட்டாண்டி ஆக்குவது என்று சிந்தித்தான்.

திருடன் மலையப்பன் நினைவு அவனுக்கு வந்தது. எந்த வீட்டிலும் நுழைந்து திருடி விடுவான். ராம்மோகன் வீட்டிற்கு அவனைத் திருட அனுப்ப வேண்டும் என்று முடிவு செய்தான்.

மலையப்பனை சந்தித்த அவன், ''நீ பெருஞ்செல்வந்தர் ராம்மோகன் வீட்டிற்குள் நுழைய வேண்டும். அவர் சேர்த்து வைத்திருக்கும் செல்வத்தைத் திருட வேண்டும்,'' என்றான்.

கரும்பு தின்னக் கசக்கவா செய்யும்? மலையப்பனும் அதற்கு ஒப்புக் கொண்டான்.

நள்ளிரவு நேரம், ராம்மோகன் வீட்டிற் குள் யாரும் அறியாமல் நுழைந்தான் திருடன்.

அப்போது ராம்மோகனும், அவர் மனைவியும் பேசிக் கொண்டிருந்தனர்.

'அவர்கள் தூங்கிய பிறகு திருடலாம்' என்று அங்கேயே ஒளிந்து இருந்தான் திருடன்.

''அடியே! நான் பிறக்கும் போதே பெருஞ் செல்வந்தனாகப் பிறந்தேன். உதவி கேட்டு வந்தவர்களுக்கு எல்லாம் இல்லை என்னாது வாரி வழங்கினேன். இப்போது ஒன்றும் இல்லாதவனாக இருக்கிறேன். பல பேரிடம் நிறைய கடனும் வாங்கி விட்டேன். யார் கடனையும் அடைக்க முடியவில்லை. இந்த நிலையில், திவான் நம் நிலைமை அறியாமல் கடன் கேட்டார். நான் இல்லை என்று சொல்லி விட்டேன். அவர் கோபத்துடன் சென்று விட்டார்,'' என்று வருத்தத்துடன் சொன்னார்.

''நமக்கு வயசுக்கு வந்த பெண் இருக்கிறாள். இந்த நிலையில் எப்படி அவளுக்குத் திருமணம் செய்து வைப்பது? அதை நினைத்தால் கவலையாக உள்ளது'' என்றார் அவரது மனைவி.

''எனக்கும் அந்தக் கவலைதான் வாட்டுகிறது. நிறைய செல்வந்தர்கள் தங்கள் மகனுக்குப் பெண் கேட்டு வருகின்றனர். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை,'' என்று கண் கலங்கச் சொன்னார் ராம்மோகன்.

''திக்கற்றவர்களுக்குத் தெய்வமே துணை என்பர். நாம் யாருக்கும் எந்தத் தீங்கும் செய்தது இல்லை. தெய்வம் நம்மைக் காப்பாற்றும். கவலைப்படாதீர்கள்,'' என்று ஆறுதல் சொன்னாள் மனைவி.

அவர்கள் பேசியதைக் கேட்ட மலையப்பன் நெகிழ்ந்து போனான்.

நல்லவர்களான அவர்களுக்கு உதவி செய்ய நினைத்தான். உடனே தன் வீட்டிற்கு சென்றான். தான் சேமித்து வைத்த பணத்தை எல்லாம் மூட்டையாக கட்டினான். அந்த மூட்டையை ராம்மோகனின் மாளிகையில் வைத்தான்.

ஒரு தாளில், 'உங்கள் மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துங்கள். அன்பன் ஒருவனின் அன்பளிப்பு' என்று எழுதினான்.

அந்தத் தாளை மூட்டையில் செருகிவிட்டு அங்கிருந்து மகிழ்ச்சியுடன் புறப்பட்டான்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us