sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/கவலையா இருக்கு!

கவலையா இருக்கு!

கவலையா இருக்கு!


PUBLISHED ON : ஏப் 11, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 11, 2014


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிருஷ்ணதேவராயருக்கு ஒருநாள் திடீரென்று ஒரு எண்ணம் உண்டாயிற்று. யாரைப் பார்த்தாலும், அதைப் பற்றிக் கவலை, இதைப் பற்றிக் கவலை என்று கூறுகிறார்களே, கவலை இல்லாத மனிதர்களே நாட்டில், இல்லையா என்று எண்ண ஆரம்பித்தார்.

இதுபற்றி அப்பாஜியிடம் கேட்கலாமே, அவர் என்ன கருத்துத் தெரிவிப்பார் என்று எண்ணியவராக அவரிடம் கூறினார். அவர் அதற்கு எதுவும் பேசாமல் இருந்தார்.

பின்னர், மன்னரிடம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கவலையுண்டு என்று சொல்லிப்பார்த்தார். அதில் மன்னர் திருப்திப்படவில்லை.

''அப்பாஜி, நீங்கள் ஒரு சுற்றுப் பயணம் சென்று வந்தால் நல்லது. உங்களுக்கும் இந்தப் பிரச்னைகளிலிருந்து விடுதலை கிடைக்கும். ஒன்றிரண்டு நாட்கள் இவ்விதம் பயணம் மேற்கொண்டால் புதிய, புதிய சிந்தனைகள் உங்களுக்கு ஏற்படும்; அப்படியே, கவலை இல்லாத மனிதனை அறிந்து கொள்ளலாம்,'' என்று கூறவும் அவர் புறப்பட்டார்.

'கவலை இல்லாத மனிதனை நிச்சயம் கண்டுபிடிக்க முடியாது. முதலில் சொன்னது போலப் புதிய சிந்தனைகள் நிச்சயம் பிறக்கத்தான் செய்யும்; பல்வேறு மக்களைச் சந்திக்கும் போது நமக்கும் புதுப்புது எண்ணங்கள் பிறக்கும்' என்று எண்ணியவராக அப்பாஜி புறப்பட்டார்.

அரண்மனையை விட்டு நீண்ட தூரம் வந்து விட்டார். அது ஒரு சிறிய கிராமம். நல்ல பசுமையான புல்வெளி; அந்தப் புல்வெளியில் குதிரையும் கொஞ்சம் மேயும், நாமும் யாரிடமாவது வாயைக் கிண்டிப் பார்க்கலாம் என்று எண்ணியவராக அங்கு இறங்கினார்.

'அங்கு ஒரு வயலின் பக்கத்திலுள்ள குடிசையின் முன்புறத்தில் நார்க்கட்டிலைப் போட்டுக் கணவனும், மனைவியும் பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்தால் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்படுபவர்கள் போலத் தோற்றம் அளித்தனர். எனவே, அவர்கள் கவலையில்லாமல் இருந்தால் இவர்களையே கூட்டிக் கொண்டு சென்றுவிடலாம். நமக்கு நடையும் லாபம்' என்று எண்ணி அவர்களைப் பார்த்துப் புன்னகையுடன் சென்றார்.

தங்களைப் பார்த்துத் தலைமையமைச்சர் வருவதைப் பார்த்த அவர்கள் இருவரும் எழுந்து வணக்கம் தெரிவித்தனர். பதில் வணக்கம் தெரிவித்த அப்பாஜி அவர்களிடம் மகிழ்ச்சியுடன் பேச்சுக் கொடுத்தார்.

பின்னர் ''உங்களுக்கு எந்த விதக் கவலையும் இருக்காது என்று எண்ணுகிறேன்,'' என்று ஆரம்பித்தார்.

''கவலை இல்லை தான். இருந்தாலும் என் மனதில் உள்ளதை உங்களிடம் சொன்னால்தான் என் மனப்பாரம் குறையும்,'' என்று ஆரம்பித்தார்.

''என்ன இது, முதலில் கவலை இல்லை என்றார். பின்னர் என்னவென்றால் தன் மனதிலுள்ளதைச் சொன்னால்தான் மனப்பாரம் குறையும் என்று கூறுகிறாரே, அதனால் இருவரும் கவலையுள்ளவர்தான் போலும்!'' என்று எண்ணியவராய் அவர் சொல்லும் கதையைக் கேட்க ஆரம்பித்தார்.

''அமைச்சர் அவர்களே, நானும் என்னுடைய மனைவியும் கவலை இல்லாமல் தான் இருந்தோம். ஆனால், என்னுடைய இளைய தம்பியை நினைத்தால்தான் கஷ்டமாக இருக்கிறது,'' என்று ஆரம்பித்தார்.

இவருடைய இளைய தம்பி இவரை விடவும் கஷ்டப்படுகிறார் போலும் அல்லது உடல் நலம் இல்லை போலும் என்று எண்ணிய அப்பாஜி, ''சரி, சொல்லுங்கள் உங்கள் இளைய தம்பிக்கு என்ன ஆயிற்று?'' என்று கவலையுடன் கேட்டார்.

''ஒன்றும் ஆகவில்லை. அவன் நன்றாகத்தான் இருக்கிறான். அவனுக்கு வயல், வீடு, தோட்டம் என்று எல்லாம் இருக்கிறது; ஆனால், எனக்குத் தோட்டம் இல்லையே அதுதான் கவலையாக இருக்கிறது,'' என்று கூறி முடித்தார்.

வேறு இடத்துக்குத் தான் போக வேண்டும் கவலை இல்லாத மனிதனைப் பார்ப்பதற்கு என்று எண்ணி, மேய்ந்து கொண்டிருந்த குதிரையை பிடித்து வந்து அதன்மீது ஏறி சென்றார்.

ஆற்றின் கரையோரமாகக் குதிரையில் அப்பாஜி சென்று கொண்டிருந்தார். அங்கு ஒரு சலவைத் தொழிலாளி பாடிய வண்ணம் துணி துவைத்துக் கொண்டிருந்தான்.

இவன் மகிழ்ச்சியுடன் பாடுகிறானே, ஒருவேளை இவன் கவலை இல்லாத மனிதனோ என்று எண்ணிய அப்பாஜி குதிரையை விட்டு இறங்கி அவன் பக்கம் சென்றார்.

அவன், தன்னை நோக்கி வந்த அப்பாஜியைப் பார்த்து வணங்கி நின்றான். ''என்னப்பா, பாட்டெல்லாம் பிரமாதமாகப் பாடுகிறாயே... உனக்கென்னப்பா, நீ கவலையில்லாத மனிதன்,'' என்று ஆரம்பித்தார்.

''அமைச்சர் அவர்களே, என் கவலையை நான் மறக்கத் தான் பாடிய வண்ணம் துணி துவைத்துக் கொண்டிருக்கிறேன். உங்களைக் கண்டதும் என் கவலைகளுக்கு விடிவு ஏற்படும் என்று எண்ணி மகிழ்ந்தேன்,'' என்று கூறினான்.

''உன் கவலை என்னப்பா, அதைச் சொல்; நான் கேட்டுக் கொள்ளுகிறேன்,'' என்றார் அப்பாஜி.

''என்னுடைய மூன்று கழுதைகளில் இரண்டு கழுதைகளைக் காணவில்லை; யாரோ கொண்டு சென்று விட்டனர். உங்களிடம் சொன்னால் நீங்கள் ஏதாவது ஏற்பாடு செய்வீர்கள் அல்லவா என்று எண்ணித்தான் உங்களைக் கண்டதும் மகிழ்ச்சியடைந்தேன்,'' என்று கூறினான்.

''சரி. கவலைப்படாதே... நான் மன்னரிடம் சொல்லி உன் கழுதைகளைத் தேடக் காவலர்களை அனுப்பச் சொல்கிறேன்,'' என்று கூறிய வண்ணம் புறப்பட்டார்.

அங்கிருந்து ஆற்றங்கரை வழியாகக் குதிரையில் சென்று கொண்டிருந்த போது, அந்த ஊரின் ஆரம்பத்தில் ஒரு பழ வியாபாரி கட்டை வண்டி ஒன்றில் பழங்களை வைத்துத் தள்ளிக் கொண்டு வந்தான்.

அப்பாஜியைக் கண்டதும், ''வணக்கம் ஐயா!'' என்றான்.

அவனுக்குப் பதில் வணக்கம் தெரிவித்து விட்டு, ''என்னப்பா வியாபாரம் எப்படியிருக்கிறது?'' என்று கேட்ட போது அவன் தன்னுடைய குறையைக் கூற ஆரம்பித்தான்.

''ஐயா, உங்களைப் பார்த்ததில் மிகவும் சந்தோஷம். நிறையப் பழங்களைக் கொண்டு வருகிறேன். எப்படிப் பார்த்தாலும் பழங்கள் மிஞ்சி விடுகின்றன. அதனால் அரண்மனை ஜோதிடரிடம் சொல்லி வியாபாரத்திற்கு வழி செய்யுங்கள். அப்போதுதான் என் கவலை தீரும்,'' என்றான்.

''கண்டிப்பாகச் சொல்லுகிறேன். நீ அங்கு வா, அரண்மனை ஜோதிடரிடம் சொல்லி நிச்சயம் ஏற்பாடு செய்கிறேன்; உன் பிரச்னையை முதலில் தீர்த்து வைக்கிறேன்,'' என்று கூறி விடை பெற்றார்.

''கவலை இல்லாத மனிதனைக் கண்டு பிடிக்க வேண்டும் என்று மன்னர் கூறவும் நாமும் அதைப் பற்றி எண்ணிப் பார்க்காமல் புறப்பட்டு விட்டோம். மனிதனாய்ப் பிறந்து விட்டாலே கவலையும் கூடவே பிறக்கும். இதைத் தெரிந்து கொள்ளாமல் நாமும் புறப்பட்டு வந்தோமே,'' என்று எண்ணியவராக மன்னரைப் பார்க்கச் சென்றார்.

''மன்னர் பெருமானே, என்னை மன்னித்து விடுங்கள். கவலை இல்லாத மனிதனைக் கண்டுபிடிக்க நீங்கள் கூறவும், நானும் ஏதோ ஒரு எண்ணத்தில் உடனே புறப்பட்டேன். அவர்கள் ஒவ்வொருவரும் என்னிடம் அவர்களின் கவலையை கூறினர். என்னிடம் ஆறுதலும் கேட்டனர். ஆகவே, என்னுடைய பயணத்தை இடையிலேயே முடித்துக் கொண்டு வந்து விட்டேன்,'' என்றார்.

''அப்பாஜி அவர்களே, நானும் ஏதோ அவசரத்தில் உங்களிடம் கூறி விட்டேன். உடனே தாங்கள் அதைத் தங்களுடைய கடமையாகக் கொண்டு சென்றதை எண்ணிப் பெருமைப்படுகிறேன். கவலை இல்லாத மனிதன் யாருமே இருக்க முடியாது என்பதைத் தெரிந்திருந்தும், அதை என்னிடம் நேருக்கு நேராகச் சொல்லாமல் முயற்சி செய்து பார்த்த தங்களுக்கு உண்மையில் நான் இதய பூர்வமான பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்ளு கிறேன். அதோடு இந்தப் பரிசுப் பொருட் களையும் தங்களுக்கு அளிக் கிறேன்,'' என்று கூறவும், அப்பாஜி அதைக் கேட்டு மகிழ்ந்து, ''மன்னர் அவர்களே, உங்கள் இதய பூர்வமான அன்பைப் பெற்ற நான் தான் இப்போது கவலை இல்லாத மனிதன்,'' என்று கூறி மன்னரின் கரங்களைப் பற்றிக் கண்களில் ஒற்றிக் கொண்டார்.

''உண்மையில் அப்பாஜி, நீங்கள் கூறியது போன்று கவலை இல்லாத மனிதராக நீங்கள் என்றும் திகழ்ந்தால்தான் இந்த நாடு, இந்த நாட்டு மக்கள் அனைவரும் கவலை இல்லாமல் வாழ்வர்; வாழ முடியும் என்பதில் சந்தேகமில்லை,'' என்றார் மன்னர் கிருஷ்ணதேவராயர்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us