தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/யாதும் ஊரே!

யாதும் ஊரே!

யாதும் ஊரே!


PUBLISHED ON : நவ 07, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 07, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வீட்டிற்குள் நுழைந்தார் தாத்தா. பேரனின் அழுகை சத்தம் வரவேற்றது.

''என்னடா கண்ணு...'' என்றபடி, பொருட்களை மகளிடம் தந்தார். அழுகைக்கான காரணத்தை கேட்டார்.

''புது வீட்டுக்கு குடி போறோம் இல்லையா... இங்குள்ள நண்பர்களை விட்டு பிரிந்து வர மாட்டானாம்; புதிய பள்ளிக்கூடமும் பிடிக்கவில்லையாம். அது தான் அழுகை...'' என்றாள் மகள்.

''புது வீடு பிடிக்கலன்னா, மறுபடியும் இங்கே திரும்பி வந்துடுங்க; பள்ளிக்கூடம் திறக்க இன்னும் இரண்டு மாதம் இருக்கேம்மா...'' என்றார்.

அழுகையை நிறுத்தியவன், ''பிடிக்கலைன்னா, திரும்பவும் வந்துடலாம் தானே தாத்தா...'' என மகிழ்ச்சியுடன் கேட்டான்.

நம்பிக்கை தரும் வகையில் பேசி சமாதானப்படுத்தினார்.

புது வீட்டில் குடியேறும் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது.

பேரனுக்கு ஒதுக்கிய அறையில், பொருட்களை அடுக்க உதவினார் தாத்தா.

அது புறநகர் பகுதி -

வீடுகள் பெரும் இடைவெளியில் தனிதனியாக இருந்தன. மனித நடமாட்டம் குறைவாக இருந்தது. யாரும், யாருடனும் பேசிக் கொள்ளவில்லை.

நாட்கள் ஓட போரடித்தது. தாத்தாவை தொந்தரவு செய்ய ஆரம்பித்தான்.

மறுநாள் வீட்டை சுற்றிய இடத்தை சுத்தம் செய்து பண்படுத்தினார், தாத்தா. பூ, காய்கறி, பழச் செடிகளையும், பலா, மா மரக் கன்றுகளையும் நட்டார். உயிர் நீர் ஊற்றி பேணினார்.

புது அனுபவத்தை உணர்ந்தான். காலை, மாலையில் தண்ணீர் விடும் வேலையை, பேரனிடம் தந்தார் தாத்தா. மகிழ்ச்சியுடன் ஏற்றான்.

அதிகாலை சீக்கிரமே எழ ஆரம்பித்தான். சிரத்தையுடன் தோட்டத்தை பராமரித்தான்.

தவறாமல், தாத்தாவுடன் நடை பயிற்சிக்கு சென்றான். சாலை விதிகள், பாதுகாப்பு, சுத்தம், சுகாதாரம் பற்றி எல்லாம் கற்றுக் கொண்டான்.

புதிய இடம் மிகவும் பிடித்து விட்டது.

நடைப்பயிற்சியின் போது, அறிமுகமானவர்கள் அன்புடன் உபசரித்தனர். புதிய நண்பர்களை பெற்றான்.

ஞாயிற்று கிழமைகளில், சிறுவர், சிறுமியரை வீட்டிற்கு அழைத்து வந்தார் தாத்தா. பாட்டு, நடனம், சித்திரம் வரைதல் போன்ற நுண் கலைகளில் பயிற்சி கொடுத்தார். விளையாட்டுகளிலும் திறன் வளர்க்க வாய்ப்பளித்தார்.

தெருக்களை சுத்தமாக பராமரிக்கவும், நிழல் தரும் மரங்கள் நடவும் முடிவு செய்தனர்.

ஒரு பூங்கா அமைக்கும் முயற்சியையும் துவங்கினர்.

மிக சுறுசுறுப்பாகி விட்டான் பேரன்; செடி, கொடிகள் வளர்வது பரவசம் தந்தது. நடைப்பயிற்சியின் போதே தெரு சுத்தத்தையும் கவனித்தான்.

அன்று காலை, ''பழைய வீட்டிற்கு போகலாமா...'' என்றார் தாத்தா.

''ஐயோ... செடியெல்லாம் வாடி விடுமே...''

தவிப்புடன் கூறினான் பேரன்.

''அப்ப... புது பள்ளிகூடத்திற்கு தான் போவாயா...''

''ஆமாம்... என் நண்பர்கள் நிறைய பேர் படிக்கின்றனர்; அவர்களுடன் பள்ளி கூடத்தை பார்த்து வந்தேன்; தலைமையாசிரியரிடம் பேசி அங்கும் மரம், செடிகள் நடலாம் தாத்தா...''

கூறியபடி பரபரப்பாக ஓடியவனைப் பார்த்து, புன்னகையில் நனைந்தார், தாத்தா.

குழந்தைகளே... நமக்கான இடத்தை, நாம் தான் உருவாக்க வேண்டும்; தவித்து நின்றால், தனித்து விடுவோம்.

ஆர்.ராதா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us