தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/தென்னாப்பிரிக்க மண்ணில் 10 நாட்கள்! (3)

தென்னாப்பிரிக்க மண்ணில் 10 நாட்கள்! (3)

தென்னாப்பிரிக்க மண்ணில் 10 நாட்கள்! (3)


PUBLISHED ON : பிப் 18, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 18, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நான்கு மாடி கட்டடத்திலிருந்து கீழே பார்க்கவே அஞ்சும் நான், மன தைரியத்தை வரவழைத்து, தரையிலிருந்து, 1 கி.மீ., உயரம் வரை பலுானில் சென்று, அதிலிருந்தபடி, வன விலங்குகள், துாரத்தில் தெரியும் நகரங்கள் மற்றும் அப்பகுதியின் இயற்கை அழகை ரசித்தேன்.

இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக, வானில் வட்டமடித்த பலுான், தரையிறங்கியதும், உடன் கொண்டு வந்திருந்த, 'ஷாம்பயின்' எனப்படும், திராட்சை ரச பாட்டிலை திறந்து, அனைவருக்கும், பருக தந்தார், அதன் நிர்வாகி பில் ஹாரோப்.

தென் ஆப்ரிக்காவில், இது போல, ஒன்றிரண்டு இடங்களில் பலுான் சபாரி இருந்தாலும், பில் ஹாரோபின் பலுான் சபாரிக்கு தான் அதிக மவுசு என்பதால், ஏராளமான சுற்றுலா பயணியர் குவிகின்றனர்.

'நாள்தோறும் பலுான் சபாரி நடக்கிறது; இது வரை எந்த விபத்தும் ஏற்பட்டதில்லை...' என்றார் ஹாரோப்.

பலுானில் இருந்து இறங்கியதும், பில் ஹாரோப்பின் ஓட்டலில், காலை உணவு பரிமாறப்பட்டது. இயற்கை சூழலில், அவரின் நகைச்சுவையான பேச்சுடன் உணவு அருந்தியது, சுகமான அனுபவம்.

அங்கிருந்து, இரண்டு மணி நேர கார் பயணத்தில், மாரோபெங் என்ற இடத்தை அடைந்தோம். ஜோஹன்னஸ்பர்க் நகரிலிருந்து, 50 கி.மீ., துாரத்தில் அமைந்துள்ள, ஸ்டெர்க்பொன்டைன் என்ற நகரின் அருகில், சுண்ணாம்பு கல் மலையில் இயற்கையாக அமைந்துள்ள குகையை பார்க்க சென்றோம்.

கி.பி., 19ம் நுாற்றாண்டில் தங்கம் மற்றும் வைர சுரங்கங்களை தேடி ஐரோப்பியர், தென் ஆப்ரிக்காவுக்கு வந்த போது, இந்த குகை கண்டுபிடிக்கப்பட்டதாம்.

'மனித குலத்தின் தொட்டில்' என, இந்த இடம் அழைக்கப்படுகிறது. ஆப்ரிக்காவிலிருந்து தான் மனித இனம் தோன்றி, பல கண்டங்களுக்கும் பரவியது என்பதற்கான ஆதாரங்களை இங்குள்ள குகையில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் மற்றும் மனித எலும்புக்கூடுகள் மூலம் விளக்குகின்றனர்.

வெளியே கடும் உஷ்ணம் நிலவும் நேரத்தில், குகைக்குள், 'மைனஸ்' டிகிரி வெப்பம் நிலவுவதும், குகை பல, 100 கி.மீ.,க்கு விரிந்துள்ளது எனக் கூறியபோது, வியப்பாக இருந்தது.

குகைக்குள், குனிந்தும், தவழ்ந்தும், மண்டியிட்டும் செல்ல வேண்டும். உள்ளே திருமண மண்டபம் போல, விசாலமாக பல இடங்கள் காணப்பட்டது.

சுத்தம், வழிகாட்டிகளின் பணிவு மற்றும் பாதுகாப்பு போன்றவை, நாள்தோறும் சுற்றுலா பயணிகளை இங்கு வரவழைக்கிறது.

அது போல, மரோபெங்க் என்ற இடத்தில், மனித குலம் எவ்வாறு தோன்றியது, கண்டங்கள் எவ்வாறு இடம்பெயர்ந்தன என்பதை ஒலி - ஒளி காட்சியின் மூலம் விளக்குகின்றனர்.

தென் ஆப்ரிக்காவில் உள்ள உணவகங்களுடன், மதுபான பார்களும் இணைந்துள்ளன. நகரங்கள் மட்டுமின்றி கிராமங்களிலும் இத்தகைய நிலை தான். மது பானங்களின் விலையும், வாங்கும் அளவில் உள்ளதால், கிராமங்களில் ஏராளமானோர், போதைக்கு அடிமையாகியுள்ளனர்.

அவர்களின் வீடுகளில் வறுமை தாண்டவமாடுகிறது; குடும்ப வன்முறை அதிகரித்துள்ளது. எனவே, மதுபான பார்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்ற குரல், நகரங்களில் ஒலிக்கத் துவங்கியுள்ளது.

தனியார் வன விலங்கு சரணாலயங்களுக்கு தாராளமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அங்கே சுற்றித் திரியும் விலங்குகளை அருகில் காணும் வகையில், வாகனங்களில் அழைத்து செல்கின்றனர். 'அனிமல் சபாரி' என அழைக்கப்படும் இந்த சாகச பயணத்தின் போது, வன விலங்குகளை அருகில் இருந்து காண முடிகிறது.

திறந்த, பச்சை நிற ஜீப் மற்றும் பஸ்களில், அதிகாலை மற்றும் மாலை நேரங்களில், சபாரி துவங்குகிறது. தேர்ந்த ஓட்டுனர்கள் மற்றும் வன விலங்குகளை பற்றி அறிந்தவர்கள், வழிகாட்டிகளாக வருகின்றனர்.

யானை, சிங்கம், ஒட்டகச்சிவிங்கி, மான், காண்டாமிருகம், நீர் யானை போன்றவற்றை மிக அருகில் காண முடிகிறது. பெரிய மரங்கள் இல்லாத சாதாரண புதர்கள் போன்ற இடங்களில் சுற்றித் திரியும் மான்களை சாப்பிட, சிங்கங்கள் தயாராக இருந்ததையும் பார்த்தோம்.

ஜோஹன்னஸ்பர்க்கில் இருந்து, மூன்று மணி நேர கார் பயணத்தில் உள்ளது, வனவிலங்குகள் சரணாலயமான பிளானெஸ்பெர்க். இந்த பகுதியில், பல 100 கி.மீ.,க்கு பரந்துள்ள காடுகளை கூறு போட்டு, தனி நபர்கள், ஆடம்பர ஓட்டல்கள் நடத்தி வருகின்றனர்.

அடர்ந்த காட்டில், 'குவா மாரிடேன்' என்ற ஓட்டலில் தங்கியிருந்தோம். அங்கிருந்து திறந்த, பச்சை நிற ஜீப், லாரி, வேன்களில் வன விலங்குகளை காண, சபாரி அழைத்து சென்றனர். நம்ம ஊரில் இருப்பது போல பெரிய மரங்கள் இல்லாமல், புதர்கள் போல வளர்ந்த மரங்களே அதிகம் இருந்த காட்டில் விலங்குகளை தேடி, பயணித்தோம்.

மாலை, 5:00 மணிக்கு புறப்பட்ட போது, துாரத்தில் யானைகள், ஒட்டகச் சிவிங்கிகள், வைல்ட்பீஸ்ட் எனப்படும் சிறு காட்டு மாடு மற்றும் ஏராளமான மான்களை காண முடிந்தது.

'அதிர்ஷ்டம் இருந்தால் சிங்கங்களை அருகில் காண முடியும்...' என கூறி, அழைத்து சென்றார் டிரைவர். ஆனால், பெரும்பாலும், சுற்றுலா பயணிகள் கண்களில் எளிதில் தட்டுப்படுவதில்லை; நீண்ட துாரம் பயணித்த பின்தான், சிங்கங்களை காண முடியும் என்றார்.

ஒரு இடத்தில் சிங்கத்தை பார்த்து விட்டால், 'வயர்லெஸ்' மூலம், சிங்கத்தை பார்க்க, பிற வாகனங்களில் சுற்றிக் கொண்டிருப்போருக்கு தகவல் கொடுக்கின்றனர். அடுத்த சில நிமிடங்களில், அனைத்து வாகனங்களும் அந்த இடத்தில் குவிகின்றன.

எங்களுக்கும் மூன்றாவது முறை சபாரியில் தான் சிங்கம் தென்பட்டது. சிங்கம் அல்ல; சிங்க கூட்டங்கள். நான்கைந்து பெண் சிங்கங்களுடன் ஒரு ஆண் சிங்கம், புதர் ஒன்றின் அருகே ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது.

நாங்கள் பயணித்த ஜீப்பின் டிரைவர் கிரெய்க், 20 அடி துாரத்தில் வாகனத்தை நிறுத்தி, 'சத்தம் போடாமல் பார்த்து ரசியுங்கள்; படம் எடுத்துக் கொள்ளுங்கள்...' எனக் கூறி, இன்ஜினை நிறுத்தி விட்டார்.

அப்போது ஒரு சிங்கம்...

— தொடரும்.

முதலையுடன் என்கவுன்டர்!

வெஸ்டர்ன் கேப் மாகாணத்தில், கேங்கே குகைகளுக்கு அருகே, வன விலங்கு சரணாலயம் ஒன்று உள்ளது. இங்கு, ஏராளமான வன விலங்குகள், இயற்கையான முறையில் பராமரிக்கப்படுகின்றன.

தனியாரால் நடத்தப்படும் இந்த சரணாலயத்தில், நீரில் முதலையுடன் சந்திக்கும் சாகச விளையாட்டு நடத்தப்படுகிறது. முதலையால் கடித்து, உடைக்க முடியாத இரும்பு கூண்டிற்குள் நம்மை சிறை வைத்து, தண்ணீரில் இறக்கி விடுவர்.

தண்ணீரில் படுத்திருக்கும் முதலை, நம்மை சாப்பிட, சுற்றிச்சுற்றி வரும். அந்த திகிலான அனுபவத்தை, தண்ணீரில் மூழ்கிய படி, ரசிப்பது, 'திரில்' அனுபவம்.

இதற்காக, ஒருவராகவும், ஜோடியாகவும், தண்ணீரில் இறக்கி விடப்படுகின்றனர். எங்கள் குழுவினர், தண்ணீரில் இறங்கிய போது, முதலை மிகவும் சோர்வாக இருந்ததால், பக்கத்தில் கூட வரவில்லை.

ஒரு முறையாவது அதற்கு இரை கிடைத்திருந்தால் தானே, ஆர்வமாக சுற்றி வரும்! இங்கு தான், 100 சதவீதம் பாதுகாப்பாக கூண்டிற்குள் நிறுத்தப்படுகின்றனரே! அதனால், இயந்திரத்தனமாக, முதலை சுற்றி வருகிறது; வாயைக் கூட திறப்பதில்லை.

ஆனால், இங்கு பராமரிக்கப்படும், சிங்கம், சிறுத்தையின் அருகே சென்று பார்க்க, சுற்றுலா பயணியர் அழைத்து செல்லப்படுகின்றனர்.

அதற்காக கூடுதல் கட்டணம் செலுத்தினால், வன விலங்கு பராமரிப்பாளருடன் சிங்கத்தின் கூண்டுக்குள் இறங்கி, ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் சிங்கத்தை தொட்டு, தடவிப் பார்க்கலாம்.

இந்த பயங்கர அனுபவத்திற்காக, பல வெள்ளைக்காரர்கள் ஆர்வமாக இருந்ததை காண முடிந்தது.

ஏ.மீனாட்சிசுந்தரம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us