PUBLISHED ON : பிப் 04, 2018

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், தபால் அதிகாரியின் எட்டு குழந்தைகளில் ஒருவனான நான், பொருளாதாரத்தில், எம்.ஏ., படித்து முடித்ததும், 1987ல் நெல்லை, தினமலர் நாளிதழில், உதவி ஆசிரியராக சேர்ந்தேன்.
ஏழ்மையான பின்னணி கொண்டது என் குடும்பம். உறவினர்கள் அனைவருமே, தமிழகத்திற்குள் இருந்ததால், தமிழகத்தை தாண்டி, பிற மாநிலங்களுக்கு கூட சென்றதில்லை.
அலுவலகம், வீடு, குழந்தைகள் என, இயந்திரத்தனமான வாழ்க்கை. எனினும், பணியில் நேர்த்தி, பணிவு, நன்னடத்தை இருப்பதாக, எங்கள் பாஸ் கருதியதால், அவரின் அருட்பார்வை என் மீது விழுந்தது.
அது ஒரு மாலை நேரம்... செய்தி தயாரிப்பில் மும்முரமாக இருந்த போது, பாஸ் அழைப்பதாக கூறினார், அவரின் உதவியாளர்.
பாஸ் அறை கதவை தட்டி, அவர், 'மணி'யடித்ததும் உள்ளே சென்ற போது, 'வாங்க...' என, சிரித்தபடியே அழைத்தவர், 'என்ன, எப்படி இருக்கீங்க...' என்றார்.
'நன்றாக இருக்கிறேன் பாஸ்...' என்றேன்.
'சரி, பத்து நாள், சவுத் ஆப்ரிக்கா, 'டூர்' போயிட்டு வாறீங்களா... முதன்மை செய்தி ஆசிரியர் உங்களைத் தான் பரிந்துரைத்துள்ளார். இது, அட்வஞ்சர் டூர்; நீங்க தான் சரியான ஆளுன்னு சொல்றாங்க. அதனால, போயிட்டு வாங்க...' என்றார்.
கண்களில் கண்ணீர் ததும்பி நிற்க, 'நன்றி பாஸ்...' என்றேன்.
'செலவுக்கு பணம் உட்பட மற்றதை எல்லாம், பி.ஏ., கலாவிடம் கேட்டுக்குங்க... இன்றே, நீங்க சவுத் ஆப்ரிக்கா அரசுக்கு விண்ணப்பிக்கணும். போயிட்டு வாங்க...' எனக் கூறி, அவர் முன் குவிந்திருந்த வேலையில் ஆழ்ந்து விட்டார்.
முகத்தில், 1,000 வாட்ஸ் மின் விளக்கின் பிரகாசத்துடன், பாஸ் அறையிலிருந்து வெளியே வந்தேன்.
'நட்சத்திர ஓட்டல்களில் தங்கல்; சொகுசு கார் பயணம். விதவிதமான சாகச நிகழ்ச்சிகள், ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் என, பத்து நாட்கள் ஓடியே போய் விடும்...' என, கடந்த ஆண்டு, தென் ஆப்ரிக்காவுக்கு சுற்றுலா சென்று வந்த, முதன்மை செய்தி ஆசிரியர் கூறியிருந்ததால், கனவில் மிதந்தபடி நடந்து சென்று, கலாவிடம், பாஸ்போர்ட், இ--மெயில், முகவரி போன்ற தகவல்களை கூறி வந்தேன்.
இரவு, 11:00 மணிக்கு, வீட்டிற்கு சென்ற போது, என் பைக் சத்தம் கேட்டு, கதவை திறந்த என் மனைவி, 'என்ன, ரொம்ப உற்சாகமா இருக்கீங்க... ஏதும் விசேஷமா...' என்றாள்.
'பத்து நாள் சவுத் ஆப்ரிக்கா போயிட்டு வர, பாஸ் கூறியிருக்கிறார்...' என்றேன், பூரிப்புடன்!
'நீங்க மட்டும் தானா?' என்று கேட்டாள்.
'ஆமா... நம்ம நாளிதழில் நான் மட்டும் தான். பிற மாநிலங்களில் இருந்து பலர் வர்றாங்க...' என்றேன்.
'அது இல்லீங்க... நீங்க மட்டும் தானா; நானும் உண்டான்னு கேட்டேன்...' என, மனைவி கேட்கவும், 'ஏய்... இதுவே, நமக்கு ஆண்டவன் அளித்த பரிசு; பாஸ் என் மீது கொண்ட கருணையால் அனுப்புகிறார். அவரிடம் போய், மனைவியையும் அழைத்து போக முடியுமான்னு கேட்க முடியுமா...' என்றேன்.
'பரவாயில்லீங்க... பத்திரமா போயிட்டு வாங்க...' என்றாள்.
அன்றிலிருந்து, வானில் விமானங்கள் பறக்கும் சத்தம் காதில் விழும் போதெல்லாம், 'நானும் விமானத்தில் பறப்பேன்...' என, என் மனம் மகிழ்ச்சியில் துள்ளும்.
மறுநாள் மாலை, செய்தி ஒன்றுக்கு, பாஸ் அனுமதி பெற, அவர் அறைக்கு சென்ற போது, 'என்ன... வீட்டில என்ன சொன்னாங்க... 'டூர்' பற்றி குழந்தைங்க எப்படி, 'பீல்' பண்றாங்க...' என, கேட்டார்.
'வீட்டில எல்லாருக்கும் சந்தோஷம் தாங்கலை; கூட வர முடியலையேன்னு ஒய்புக்கு ஏக்கம்...' என்றேன்.
'ஓ... அப்படி ஒண்ணு இருக்கோ... அதனால் என்ன, இரண்டொரு மாசம் ஆகட்டும்; உங்க ஒய்போட, அந்தமான் அல்லது கேரளா போயிட்டு வாங்க...' என்றார்.
'என்னவொரு அன்பு, கருணை அவர் மனதில் இருந்தால், இப்படியொரு எண்ணம் அவருக்கு வந்திருக்கும்...' என, எண்ணி நின்றிருந்த போது, 'சவுத் ஆப்ரிக்காவில் குளிர் எத்தனை டிகிரின்னு, நெட்ல பாத்துக்குங்க...' என்றார், பாஸ்.
உடனே நான், 'பாஸ்... இப்போ அங்கே, கோடை காலம்; அதிகபட்சம், சில இடங்களில், 17 -- 19 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலை நிலவுகிறது...' என்றேன்.
'அப்படியா... சென்னை உஷ்ணத்தில் இருந்து பழகிய உங்களுக்கு, இந்த வெப்ப நிலை சற்று கடினமாக இருக்கலாம்; எனவே, குளிரை தாங்கும் உடைகள வாங்கிக்குங்க...' என்றார்.
தேவையான ஸ்வெட்டர், உல்லன் உடைகள் என, 15 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கினேன். வீட்டிற்கு அவற்றை கொண்டு சென்ற போது, உருகிப்போயினர் குழந்தைகள்.
படித்து முடித்து, வேலை தேடிக் கொண்டிருக்கும் என் மகன், 'எல்லா முதலாளிகளும் இப்படி இருப்பாங்களாப்பா...' என, கேட்டான்.
'எங்க பாஸ் இப்படி தான்; உண்மையான ஊழியர்களுக்கு, நிறையவே செய்வார்...' என்றேன்.
அன்று மதியம், பாஸ் அழைத்தார். 'நீங்க நாளைக்கு ஊருக்கு போறீங்க தானே... நான் நாளை ஊரில் இருக்க மாட்டேன்; திருவனந்தபுரம் போறேன்; அதனால், உங்களுக்கு இப்போதே, 'சென்ட்ஆப்' சொல்லிட அழைத்தேன். பத்திரமாக, உடல் நலத்துடன், பண பலத்துடன், மன நலத்துடன் சென்று வாங்க...' என, அன்புடன், ஒரு சகோதரனுக்கு ஆசீர்வாதம் கூறுவது போல, வாழ்த்தினார்.
'அவர் எங்கே, நான் எங்கே. என்னிடம் இவ்வளவு பிரியம் வைத்திருக்கும் பாஸுக்கு என்ன கைமாறு செய்யப் போகிறேன்...' என, எண்ணிய போது, கண்ணீர் தாரை தாரையாக வந்தது.
உடன் பணியாற்றுபவர்கள், நண்பர்கள், நெல்லையில் இருக்கும் என் அம்மா, மாமனார் -- மாமியாரிடம், வாழ்த்துகள் பெற்று, மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு, மனைவி மற்றும் குழந்தைகளுடன் சென்றேன். அவர்களுக்கு, 'டாட்டா' சொல்லி, மும்பைக்கு விமானம் ஏறினேன்.
இத்தனை ஆண்டுகளாக, பெரிதாக எந்த பொழுதுபோக்கும், கேளிக்கையும் இல்லாமல் இருந்த நான், இப்போது கிடைத்துள்ள வாய்ப்பை, ஒவ்வொரு வினாடியும் அனுபவிக்க வேண்டும் என, நினைத்துக் கொண்டேன்.
— தொடரும்
டாய்லெட் பிரச்னை!
தென் ஆப்ரிக்க நகரங்களுக்கு எங்களை அழைத்துச் செல்ல வந்திருந்தார், 'வெபர் சாண்ட்விக்' என்ற, பிரபல, பி.ஆர்., நிறுவனத்தின், 30 வயது பெண் அதிகாரி.
நகரங்களுக்குள் அழைத்து செல்ல, டயோடா வேன் எப்போதும் உடன் வந்தது. அதிலும், அந்நாட்டின் பிரபலமான நான்கு நட்சத்திர ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டோம்.
இரண்டு பேர் துாங்கும் வசதி கொண்ட அறைகளாக இருந்தாலும், ஒரு அறையில், ஒருவர் தான் தங்கியிருந்தோம்.
பளிங்கு போன்ற விசாலமான குளியல் அறைகள்; ஒவ்வொரு அறையிலும் விலை மதிக்க முடியாத அறைகலன்கள், ஓவியங்கள் என, புதுமையாக இருந்தது.அத்துடன், டீ, காபி போன்றவற்றை நாமே தயாரித்து சாப்பிட வசதியாக, கெட்டில், தேயிலை, காபித்துாள், கோப்பைகள், தண்ணீர் பாட்டில் இருந்தன.
அறைகளுக்குள் புகைக்க, அனுமதி கிடையாது.
நவீன ஓட்டலுக்கு உரிய எல்லா வசதிகளும் இருந்தாலும், நம் ஊர் போல, கழிப்பறையில் தண்ணீர் பிடித்து அலம்ப, பக்கெட், குவளை மற்றும் 'ஹெல்த் பாசிட்'டோ இல்லை.
ஆனால், டிஷ்யூ பேப்பர் ரோல், நிறைய இருக்கின்றன. அந்த தாளில் துடைத்து, கழிப்பறை பேசினில் போட்டு, தண்ணீரை திறந்து விட வேண்டியது தான்.
கையை அலம்ப, விதவிதமான ரசாயன, மணம் பரப்பும் திரவங்கள் இருந்தன.
இதற்கு முன், இந்த நாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்று திரும்பியிருந்த, முதன்மை செய்தி ஆசிரியர், இப்பிரச்னையை பற்றி கூறியிருந்ததால், எனக்கு அதிர்ச்சியாக இல்லை.
அதனால், அறையில், 1 லிட்டர் தண்ணீர் பாட்டிலை எப்போதும் வைத்திருந்தேன். மேலும், அதிகாலையிலேயே எழுந்து, காலை கடனை முடிக்க, தண்ணீர் பாட்டிலை பயன்படுத்திக் கொண்டேன்! இதனால், துடைக்கும் வேலை இல்லை.
நட்சத்திர ஓட்டல்கள் அனைத்திலும், தங்குபவர்களுக்கு, காலை உணவு தருகின்றனர். பழங்கள், லேசாக வேக வைத்த காய்கறிகள், கீரை வகைகள். பால், வெண்ணை, சாஸ், கிரீம், ஜாம் என, ஏராளமான வெஜிடேரியன் ஐட்டங்கள் உள்ளன. பொரித்து வைக்கப்பட்ட பாதாம், முந்திரி பருப்பு. லிட்டர் கணக்கில் ஆரஞ்சு, ஆப்பிள் பழச்சாறுகள் என, ஆரோக்கியமான உணவு வகைகள் வைக்கப்பட்டிருந்தன.
அசைவ பிரியர்களுக்கும், போதும் போதும் என சொல்லும் அளவுக்கு, கோழி, மாட்டிறைச்சி, இறால், சாலமன் மீன்கள், வேக வைக்கப்பட்ட, வேகாத முட்டை மற்றும் ஆம்லெட் என உணவுகள் வரிசை கட்டின.
வயிற்றுக்கு கெடுதல் செய்யாத இந்த உணவுகளில், உப்பு, காரம் அறவே கிடையாது. இனிப்பு பண்டங்கள் ஏராளமாக உள்ளன.
காரசாரமாக சாப்பிட்டு பழகிய நான், பிரெட், பட்டர், ஜாம், பழச்சாறு, பழங்கள், காய்கறிகள், கீரைகள் என சாப்பிட்டு, 10 நாட்களை கடத்தினேன். ஒரு நாள் கூட, வயிற்றுக்கு எந்த பாதிப்பும் இல்லை.
ஏ.மீனாட்சிசுந்தரம்
