தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : பிப் 04, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 04, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள அம்மா —

என் வயது, 32; பெற்றோருக்கு ஒரே மகள். கல்லுாரியில் படிக்கும் போதே, படிப்பு, விளையாட்டு, பேச்சுப் போட்டி, பாட்டு, டான்ஸ் என, எல்லாவற்றிலும், நான் தான் முதல் மாணவி.

கல்லுாரி ஆண்டு விழாவின் போது, நாட்டிய நாடகம் ஒன்று நடைபெற்றது; அதில், எங்கள் அணி பங்கு பெற்று, பரிசு பெற்றது.

அந்த நாட்டிய நாடகத்துக்கு, 'ஸ்கிரிப்ட்' தயார் செய்ததிலிருந்து, அனைத்திலும், முக்கிய பங்கு வகித்தேன். என்னுடைய தனித்துவத்துக்கு சிறப்பு பரிசு அளித்து, கவுரவித்தனர்.

விழாவுக்கு வந்திருந்த கல்லுாரி முதல்வரின் உறவினர் பையன் ஒருவன், என்னை பார்த்திருக்கிறான்.

இது நடந்து சில நாட்களுக்கு பின், கல்லுாரி முகவரிக்கு, என் நாட்டிய நாடகத்தை சிலாகித்து, கடிதம் எழுதியிருந்தார், அவர்.

மொபைல் போன், கம்ப்யூட்டர், இன்டர்நெட் எல்லாம் எனக்கு பழக்கமாகாத காலகட்டம் அது!

கடிதத்தில், தான் கப்பலில் பணிபுரிவதாக குறிப்பிட்டு, அந்நிறுவனத்தின் முகவரி கொடுத்திருந்தார். நான் நன்றி தெரிவித்து, கடிதம் எழுதினேன். அதன்பின், அவ்வப்போது கடிதம் எழுதுவார். என்னுடைய கருத்துகள் பல, அவருடன் ஒத்துப்போனது.

அவருடைய ஒவ்வொரு கடிதமும், ஒவ்வொரு கருத்து பெட்டகமாக இருக்கும்; மிகவும் நாகரிகமாக, அழகான வார்த்தைகளாக மிளிரும். அக்கடிதங்கள், எனக்குள் உத்வேகத்தையும், நிறைய சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தையும் துாண்டும். வீட்டு முகவரிக்கே கடிதம் அனுப்புவார்.

அவரது அலுவலக விலாசம் மட்டும் என்னிடம் இருந்ததால், அலுவலக முகவரிக்கு பதில் எழுதுவேன். இதற்கிடையில், கல்லுாரி படிப்பு முடித்து, வேலைக்கு செல்ல ஆரம்பித்தேன்.

மூன்று ஆண்டுகள் தொடர்ந்த இந்த கடிதத் தொடர்பு, திடீரென்று நின்றது. நான் போடும் கடிதத்திற்கு பதில் வரவில்லை. பல விதத்தில் அவருடன் தொடர்பு கொள்ள முயற்சித்தும், முடியவில்லை. கல்லுாரி முதல்வரை சந்தித்து, அவரை பற்றி விசாரிக்கவும் முடியவில்லை.

இப்படியே காலம் கடந்தது; எனக்கு திருமணம் செய்ய, பெற்றோர் எவ்வளவோ முயற்சித்தனர்; நான் மறுத்து விட்டேன். தற்போது, கல்லுாரி முதல்வர், ஓய்வு பெற்று, சொந்த ஊருக்கு சென்று விட்டதாக தகவல் தெரிந்தது.

கடிதம் எழுதியவர் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா... அதே வேலையில் இருக்கிறாரா, வெளிநாடு எங்காவது சென்று விட்டாரா, திருமணமாகி விட்டதா என்று எதுவும் தெரியாது.

'இன்னும் காலம் கடத்துவது முட்டாள்தனம்; பெற்றோர் பார்க்கும் பையனை திருமணம் செய்து, 'செட்டில்' ஆகப் பாரு...' என்கிறாள், தோழி.

என் மனம் சமாதானமாகவில்லை. இப்போது சமூக வலைதளங்களில், நிறைய கருத்துகளை பகிர்ந்து கொள்கிறேன். எங்கிருந்தாலும் அவர் என்னை, 'பேஸ் - புக்' மூலம் அறிந்து, தொடர்பு கொள்வார் என்று நம்புகிறேன்.

நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் அம்மா!

— இப்படிக்கு,

அன்பு மகள்.


அன்பு மகளுக்கு —

மெத்த படித்த பலர், யதார்த்தத்திற்கு ஒவ்வாத அதீத கற்பனையில் மிதந்து, வாழ்க்கையை தொலைத்து விடுகின்றனர். அதற்கு நீயும் ஒரு உதாரணம். 'திருவிழா கூட்டத்தில் ஒருவன் என்னைப் பார்த்து கையசைத்தான்... அவனை மறக்காமல் தொடர்ந்து தேடி வருகிறேன்; ரயிலில் என்னுடன் ஒருவன் பயணம் செய்து, பிரியாவிடை பெற்று இறங்கி போனான்... அவன் நினைவாகவே இருக்கிறேன்; செஞ்சுரி அடித்த கிரிக்கெட் வீரரை பார்த்து, பறக்கும் முத்தம் அனுப்பினேன்... பதிலுக்கு, வீரரும் பறக்கும் முத்தம் அனுப்பினார். அதனால், அந்த வீரர் மீது மீளா காதல் கொண்டுள்ளேன்...' என்பதைப் போன்றது தான் உன் காதலும்!

உன் நாட்டிய நாடகத்தை சிலாகித்து கடிதம் எழுதிய கப்பல் இளைஞன் மீது, நீ காதல் கொண்டது, மிதக்கும் மேகத்தில் கட்டப்பட்ட மணி மாளிகை போன்றது. பாராட்டு கடிதத்தை பாராட்டு கடிதமாக பாவி; காதல் கடிதமாக கருதாதே!

கல்லுாரி ஆண்டு விழாவில், உன், 20 வயதில் அவனை பார்த்திருக்கிறாய்... இப்போது உனக்கு, 32 வயது; வாழ்வில், 12 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இந்த, 12 ஆண்டுகளில் நீ, ஆயிரம் ஆண்களை கடந்து வந்திருப்பாய்; உன் கப்பல் காதலனும் ஆயிரம் பெண்களை கடந்து போயிருப்பான். ஒரே ஒரு தடவை பார்த்த அவன் முகத்தை நீ வேண்டுமானால் மறக்காமல் இருக்கலாம்; ஆனால், அவன் மறந்து போயிருக்கலாம். அவன் உனக்கு தொடர்ந்து கடிதம் எழுதியதே, தன்னை கலா ரசிகனாகவும், அறிவு ஜீவியாகவும் காட்டிக்கொள்ளும் முயற்சியே!

இப்போதும், அவன் நிச்சயமாக அதே வேலையில் தான் இருப்பான். மாத சம்பளமாக லட்சக்கணக்கான ரூபாய் பெறும் பணியை விட எப்படி மனம் வரும்... கப்பல் பணி, ஒரு சாகச பணி; ஒருமுறை அந்த போதையை அனுபவித்து விட்டால், ஆயுளுக்கும் அதை விட மனம் வராது. வெளிநாடு சென்றிருப்பானோ என்று உனக்குள் ஐயம்... ஏதாவது ஒரு வெளிநாட்டு துறைமுகத்தில் தற்காலிகமாக, 'டேரா' போட்டிருக்கலாம்; ஏன், அவனுக்கு திருமணமாகி குழந்தைகள் கூட இருக்கக் கூடும்.

முகநுாலில் உன்னை பார்த்தாலும், கண்டுகொள்ள மாட்டான்; நீ, அவனுடன் நேரில் பழகவில்லை; அவனை ஸ்பரிசிக்கவில்லை.

அத்துடன், அவனுடைய கடிதங்களில் உன்னை காதலிப்பதாக குறிப்பிட்டதாக நீ எழுதவில்லை. பின், ஏனிந்த சினிமாத்தனமான குருட்டு காதல்... அபாயகரமான வயது, 32; மணம் செய்து கொள்ளாமல், காலம் கடத்தினால், பின், திருமணம் நடப்பது குதிரை கொம்பு! அநித்தியமான வாழ்வில், யதார்த்தமில்லாத காதல் படு அநித்தியம். இறைவன் உனக்கு தேர்ந்தெடுத்து தரும் இணையே பொருத்தமானவன்; வானவில்லில் ஊஞ்சலாட முடியாது மகளே... கடலளவு நீர் இருந்தாலும், நமக்கு கையளவு நீரே பிராப்தம்.

அடுத்த ஆறு மாதத்தில், உன் திருமண அழைப்பிதழ் என்னை தேடி வரவேண்டும்.

என்றென்றும் தாய்மையுடன்,

சகுந்தலா கோபிநாத்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us