
தொண்டை செரும நா வறட்சியில், படுக்கையிலிருந்து மெல்ல எழுந்து உட்கார்ந்தார், வாசுதேவன். வயது, 85ஐ நெருங்குகிறது. உடல் தளர்ந்து விட்டது. மனைவி உலகை விட்டுச் சென்றுவிட, அவருக்கான நேரத்திற்காகக் காத்திருந்தார்.
தண்ணீர் சொம்பு காலியாக இருந்தது. மெல்ல எழுந்து சொம்புடன் கதவைத் திறந்து வெளியே வந்தார். ஹாலில் மகன், மருமகள் உட்கார்ந்திருந்தனர்.
''என்ன மாமா வேணும்?''
''சொம்பில் தண்ணி இல்லம்மா, போய் எடுத்துக்கிறேன்.''
''இங்கே கொடுங்க, நான் எடுத்துட்டு வரேன்,'' அவரிடம் வாங்கியவள், கொண்டு வந்து தர, திரும்ப அறைக்குள் வந்தார்.
வெளியே மகன், மருமகளிடம் பேசுவது அவர் காதில் விழுந்தது.
''இந்த அண்ணன்ங்க இரண்டு பேரும் சவுக்கியமாக இருக்காங்க. வயசானவரை வச்சுக்கிட்டு நாம் தான் சிரமப்படறோம்.''
''ஆமாங்க, கொஞ்சமும் பொறுப்பு இல்லாதவங்க. பெத்தவரைக் அழைத்து போய் வச்சுக்க முடியாதா... கடைசிப் பிள்ளைன்னு உங்க தலையில் கட்டிட்டு நிம்மதியாக இருக்காங்க.''
''மறைமுகமாக கூட அண்ணன்கிட்டே கேட்டுப் பார்த்தேன். அப்பா ஒரே இடத்தில் இருக்காரு. நீ கொஞ்ச நாள் உன் வீட்டில் வச்சுக்கக் கூடாதான்னு. 'வயசானவரை எதுக்கு அலைக்கழிக்கணும்; இங்கே நல்லபடியாதானே இருக்காரு'ன்னு சொல்லிட்டாரு...''
''இதெல்லாம் பொறுப்பை தட்டிக் கழிக்கிற வேலை. இவங்க கூட்டிட்டுப் போகலைன்னு பெத்தவரை தெருவிலா விடுவோம். நல்லாதான் பார்த்துப்போம்.
''உங்க அண்ணன் இரண்டு பேரையும் நினைச்சா எரிச்சல் தான் வருது. இரண்டு மாசத்துக்கு ஒருமுறை பழங்கள் வாங்கிட்டு வந்து கொடுத்து, 'அப்பா எப்படியிருக்கீங்க'ன்னு, தேனொழுக பேசிட்டால் சரியா போச்சா,'' எரிச்சலுடன் சொன்னவள், ''இனிமேல் வந்தால் முகம் கொடுத்து பேசாதீங்க. இவரைப் பார்த்துக்கிற புண்ணியம் நமக்கே சேரட்டும். அதற்கான தண்டனையை கடவுள் அவங்களுக்குக் கொடுப்பாரு.''
''சரி, சரி நீ எரிச்சல்படாமல் போய் சமையலைக் கவனி.''
மாமனார் இருந்த அறைக்கு சென்று, ''ஹீட்டர் போட்டிருக்கேன் மாமா... போய் குளிங்க... பார்த்து மெதுவா போங்க; பாத்ரூம் வழுக்கப் போகுது,'' என்றாள்.
''சரிம்மா.''
அவர் உள்ளே நுழைந்து கதவை மூட, ''என்னங்க, உங்களுக்கு விஷயம் தெரியுமா... உங்க பெரிய அண்ணன் அமெரிக்கா போகப் போறாராம்.''
''ஆமாம் கேள்விப்பட்டேன். மகளை வெளிநாட்டில் கட்டிக் கொடுத்திருக்காரு. பணி ஓய்வும் கிடைச்சாச்சு. இங்கே மகன், மருமகளோடு சவுகரியமான வாழ்க்கை. வாழ்க்கையை, 'என்ஜாய்' பண்றாரு.''
''உங்க அண்ணனை நீங்க தான் மெச்சுக்கணும். பங்களா போல பெரிய வீடு. மகன், மருமகள்ன்னு... வேலைக்கார உதவியோடு சவுகரியமான வாழ்க்கை. அப்பாவை மட்டும் கொண்டு போய் வச்சுக்க முடியாது. உங்க சின்ன அண்ணன், 'பெங்களூரு குளிரு, அப்பாவுக்கு ஒத்துக்காது'ன்னு சொல்லிட்டு, புருஷன், பெண்டாட்டின்னு தனிக்குடித்தனம் நடத்தறாங்க.''
''எரிச்சலும், கோபமும் வருது... என்ன பண்ண சொல்றே... எனக்கு ஆபீசுக்கு நேரமாச்சு. டிபன் எடுத்து வை,'' என, மனைவியிடம் சொன்னான். அழைப்பு மணி அடிக்க, கதவைத் திறந்தான். வாசலில் பழப் பையுடன் பெரிய அண்ணனும், அண்ணியும் நின்றிருந்தனர்.
ஒப்புக்கு, ''வாங்க...'' ஒரு வார்த்தை சொல்லி, நகர்ந்து வழிவிட, உள்ளே வந்தனர்.
'அப்பாவைப் பார்த்துட்டு போகலாம்ன்னு வந்தோம்...' என்றனர்.
அதற்குள் உள்ளிருந்து வந்த அவன் மனைவி, ''வாங்க வாங்க... இரண்டு மாசம் ஆச்சே. இன்னும் அப்பாவைப் பார்க்க வரலையேன்னு நினைச்சேன். காபி கொண்டு வரட்டுமா?''
''அதெல்லாம் வேண்டாம். பசங்க ஸ்கூலுக்குப் போயாச்சா,'' என்றாள், அண்ணி.
''எல்லாரும் கிளம்பியாச்சு. நீங்க போய் அப்பாவைப் பாருங்க.''
மூடியிருந்த வாசுதேவன் அறையை திறந்து உள்ளே வந்தனர். மகன், மருமகளை பார்த்ததும் முகம் மலர்ந்து, ''வாப்பா, வாம்மா நல்லா இருக்கீங்களா?''
''நீங்க எப்படி இருக்கீங்க மாமா?''
''வயதுக்குரிய சின்ன சின்ன உபாதையோடு நல்லா இருக்கேன்மா.''
தளர்ந்த கைகளால் மகனின் கையை பிடித்து, ''என்னப்பா, போன தடவை பார்த்ததற்கு ரொம்பவே இளைச்சுப் போயிட்டே,'' என்றார்.
புன்னகையோடு, ''எனக்கும், 65 வயது ஆகிடுச்சுப்பா... உடம்பு தளர்ந்து போச்சு.''
''அமெரிக்காவில் என் பேரன், பேத்தியெல்லாம் எப்படி இருக்காங்க?''
''எல்லாரும் நல்லா இருக்காங்க. இன்னும் நாலு மாசத்தில் நானும், உங்க மருமகளும் அமெரிக்கா போகலாம்ன்னு இருக்கோம்.''
''போயிட்டு, மகளோடு இருந்துட்டு வாங்க.''
அப்பாவின் கைபிடித்தவன், ''என்னோடு கொண்டு போய் வச்சுக்கலைன்னு உங்களுக்கு ஏதும் வருத்தம் இருக்காப்பா.''
''என்னப்பா இப்படி கேட்கற. இதுவும் பிள்ளை வீடு தான். என் மகன் வீட்டில் தானே இருக்கேன். எனக்கு, நீங்க மூன்று பேரும் ஒண்ணு தான். வயதான காலத்தில் அலையாமல் ஒரு இடத்தில் நிம்மதியாக இருக்கேன். தம்பியும், தம்பி மனைவியும் என்னை நல்லாவே கவனிச்சுக்கிறாங்க... எனக்கு எந்தக் குறையுமில்லப்பா.''
''கேட்க நிம்மதியாக இருக்குப்பா. இருந்தாலும், தம்பிக்கு எங்க மேல வருத்தம் இருக்கும். உண்மையைச் சொல்லணும்னா... எனக்கும் வயசாச்சு, 'ரிடையர்ட்' ஆயிட்டேன். என் ஒரே பிள்ளை, மருமகளோடு தான் இருக்கேன். அவங்க பொறுப்பில் நான் இருக்கிற வயது வந்துடுச்சு.
''இப்ப உங்களையும் கூட்டிட்டு போய், அவங்களுக்கு ஏதும் சங்கடம் வரக்கூடாது. கடைசி வரை என் பிள்ளை, மருமகளோடு எந்த மனஸ்தாபமும் வராமல் வாழ்ந்துட்டு போகணும்ன்னு நினைக்கிறேன். உங்களை என்னோடு வச்சுக்கணும்ன்னு மனசு நிறைய ஆசை இருக்கு. சூழ்நிலை ஒத்துவரலை... தயவுசெய்து நீங்க தப்பா நினைக்காதீங்கப்பா,'' என, குரல் கம்ம சொன்னான்.
''என்னப்பா இது, எனக்கு எந்த வருத்தமுமில்லை. உன் நிலைமையை என்னால் நன்றாக உணர முடியுது. உங்க மூணு பேரையும் என்னைக்கும் பிரிச்சுப் பார்த்ததில்லை. என்னை உன் தம்பி நல்லபடியா கவனிக்கும்போது நான், ஏன்பா வருத்தப்படணும்.
''ஆனால், மனசுக்குள் சின்ன வருத்தம், 'அப்பாவை நான் மட்டும் வச்சுக்கணுமா... அண்ணன்ங்க இரண்டு பேரும் வச்சு பார்க்க உரிமை இல்லையா'ன்னு, அவன் கோபப்படும்போது, என்னால் என் பிள்ளைகளுக்குள் மனஸ்தாபமும், பிரிவும் வருவதைத் தாங்க முடியலைப்பா.
''நான் பாசம் காட்டி வளர்த்த பிள்ளைகள், என்றைக்கும் ஒற்றுமையாக இருக்கணும். இப்ப கடவுள்கிட்டே கேட்கிற வரம் ஒண்ணே ஒண்ணு தான். என்ன தெரியுமா? கடவுளே அடுத்த ஜென்மம்னு ஒன்று இருந்தால், எனக்கு மூன்று பிள்ளைகள் வேண்டாம். ஒரு பிள்ளையை மட்டும் கொடு. அவனோடு கடைசி வரை நிம்மதியாக வாழ்ந்துட்டு போறேன்.
''அப்பாவை பங்கு போட யாரும் இருக்க மாட்டாங்க. உன்னை மாதிரி ஒரு பிள்ளையோடு அனுசரிச்சு நிம்மதியாக வாழ்ந்துட்டு போறேன். என்னால் என் பிள்ளைகளுக்குள், மனஸ்தாபம் வருதுங்கிற குற்ற உணர்வு எனக்கு இருக்காது இல்லையா?'' என, கண்கலங்க சொல்லும், 85 வயது அப்பாவை, மனம் நெகிழ, இரு கைகளாலும் அணைத்து கொள்கிறான், 65 வயது மகன்.
பரிமளா ராஜேந்திரன்