PUBLISHED ON : ஜூலை 02, 2023

நம் அண்டை நாடான சீனாவின் தனியார் நிறுவனங்களில், '996 வேலை கலாசாரம்' என்ற நடைமுறை அமலில் உள்ளது. காலையில், 9:00 மணிக்கு துவங்கி, இரவு 9:00 மணி வரை, வாரத்துக்கு ஆறு நாட்கள் வேலை பார்ப்பது தான், இந்த நடைமுறை.
சீனாவில் உள்ள பெரும்பாலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் இந்த நடைமுறை அமலில் உள்ளது. இதுபோன்ற ஒரு நிறுவனத்தில் பணியாற்றிய நியானன் என்ற பெண், பணிச்சுமையால் மன அழுத்ததுக்கு ஆளாகி, நோய் வாய்ப்பட்டார்.
இதனால் கவலையில் ஆழ்ந்த அவரது பெற்றோர், 'நீ வேலையை ராஜினாமா செய்து விடு. எங்களை பராமரிப்பது, சமைப்பது போன்ற வேலையை மட்டும் பார். உனக்கு அந்த நிறுவனத்தில் எவ்வளவு சம்பளம் தருகின்றனரோ, அந்த தொகையை நாங்கள் தருகிறோம்...' என்றார்.
இதையடுத்து அந்த பெண், வேலையை உதறி விட்டு, தன் பெற்றோரை கவனிக்கும் பொறுப்பை செய்து வருகிறார். இதற்காக அந்த பெண்ணுக்கு, அவரது பெற்றோர், மாதம், 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் தருகின்றனர்.
'சம்பளத்துக்கு சம்பளம், நிம்மதிக்கு நிம்மதி...' என, பெருமூச்சு விடுகிறார், நியானன்.
— ஜோல்னாபையன்
