PUBLISHED ON : ஏப் 01, 2012

சின்னஞ் சிறிய பறவைகளைப் பார்த்து, யானைக் கூட்டம், சிதறி ஓடிய வித்தியாசமான சம்பவம் நடந்துள்ளது. கென்யாவில், கிழக்கு ட்சாவோ என்ற இடத்தில், வன விலங்குகளுக்கான பூங்கா உள்ளது. மிருகங்கள், தங்களின் தாகத்தை தணித்துக் கொள்வதற்காக, பூங்காவின் ஒரு சில இடங்களில், நீர்க்குட்டைகள் அமைக்கப் பட்டுள்ளன. சமீபத்தில் ஒரு நாள், சில யானைகள், இங்கு தண்ணீர் குடிக்கச் சென்றன. அப்போது, அங்கிருந்த மரங்களின் மீது அமர்ந்திருந்த பறவைகள், யானைகளை பார்த்து பயந்து போய், அங்கிருந்து தப்பிச் செல்லும் நோக்கத்தில், கூட்டம், கூட்டமாக பறக்கத் துவங்கின.
இந்த பறவைகள் பெரும் கூட்டமாக வந்ததை பார்த்த யானைகள், தங்களை நோக்கி பெரும் ஆபத்து வருவதாகக் கருதி, பயந்து, மிரண்டு ஓடின. அங்கிருந்த புகைப்படக்காரர் ஒருவர், இந்த அதிசயமான நிகழ்வை, தன் கேமராவில் பதிவு செய்தார்.
அவர் கூறுகையில், 'யாருக்குமே கிடைக்காத நல்ல வாய்ப்பு, எனக்கு கிடைத்தது. அளவில் மிகச் சிறியதான பறவைகளைப் பார்த்து, மலை போன்ற வடிவமுடைய யானைகள் சிதறி ஓடின. இந்த பறவைகள், சிவப்பு நிற அலகுகளை கொண்டவை. தினமும், காலையிலும், மாலையிலும் தண்ணீர் குடிப்பதற்காக, நீர்க்குட்டைகளின் அருகில் உள்ள மரங்களில் அமர்ந்திருக்கும். அப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில், யானைகள் அங்கு வந்ததால் தான், பறவைகள் பெரும் கூட்டமாக பறந்தன. என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு புகைப்படமாக இது அமைந்து விட்டது...' என, பெருமிதப்படுகிறார்.
— ஜோல்னா பையன்.
