தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : ஏப் 01, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 01, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடந்த 1939ல், இரண்டாம் உலகப் போரில், இந்தியாவும் இறங்கிற்று. இந்தியாவை ஆட்சி செய்த பிரிட்டிஷார், காங்கிரசின் யோசனையை கேட்காமலே, இந்தியாவை போரில் ஈடுபடச் செய்தது தவறு என்று கண்டித்து, இந்தியாவில் அப்போதிருந்த காங்கிரஸ் அமைச்சரவைகள் அனைத்தும் ராஜினாமா செய்தன.

தமிழகத்தில், (சென்னை மாகாணம்) ராஜாஜி தன் அமைச்சரவையை ராஜினாமா செய்தார். எனவே, அப்போது எதிர்க்கட்சியாக இருந்த நீதிக்கட்சியை (ஜஸ்டிஸ் பார்ட்டி) பதவி ஏற்குமாறு, அழைத்தார் கவர்னர்.

அச்சமயம், ஈ.வெ.ரா., தான், நீதிக்கட்சிக்குத் தலைவர் பொறுப்பில் இருந்தார். ராஜா சர் முத்தையா செட்டியார், துணைத் தலைவராக இருந்தார். முத்தையா செட்டியாருக்கு, முதல்வர் பதவியை ஏற்க வேண்டும் என்று விருப்பம். ஆனால், ஜஸ்டிஸ் கட்சி பதவி ஏற்பதில், ஈ.வெ.ரா.,வுக்கு விருப்பமில்லை.

செட்டியார், ஈ.வெ.ரா.,வுக்குத் தந்தி கொடுத்து வரவழைத்து, தன் அடையாறு மாளிகையில், நீதிக்கட்சியின் நிர்வாகக் கமிட்டியைக் கூட்டினார் கவர்னர். மாளிகையில் பெரிய விருந்து நடத்தப்பட்டது. ஆந்திரா மற்றும் கேரளாவிலிருந்து, தலைவர்கள் வந்திருந்தனர்.

அப்போது அங்கிருந்த சிலரிடம், 'சோறு போட்டு ஏமாற்றி விடலாம் என்று பார்க்கின்றனர். என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பாருங்கள்...' என, கூறினார் அண்ணாதுரை.

விருந்து முடிந்ததும், நீதிக்கட்சியின் கூட்டம் துவங்கியது. 'ராஜாஜி பதவியை விட்டு விலகிய இடத்தில், நாம் பதவி ஏற்க வேண்டும்...' என்று, ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

உடனே அண்ணாதுரை, 'வெள்ளை ஏகாதிபத்தியத்தை, இந்த நாட்டை விட்டே விரட்டியாக வேண்டும். சுதந்திரம் எப்படி அடைய வேண்டும் என்பதில் வேண்டுமானால், மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். ஆனால், இடைக்கால அமைச்சரவையை ஏற்கக் கூடாது என்ற கருத்துப்பட, அந்தத் தீர்மானத்தை ஏற்கக் கூடாது...' என்று வலியுறுத்திப் பேசினார்.

ஆனால், ராஜா சர் முத்தையா செட்டியார் கொண்டு வந்த, 'பதவியை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்...' என்ற தீர்மானத்திற்கு ஆதரவாக, பெரும் எண்ணிக்கை பலம் இருந்தது. அண்ணாதுரைக்கு ஆதரவாக, நான்கைந்து பேர் தான் இருந்தனர். சர்.ஏ.டி பன்னீர் செல்வம், சவுந்தரபாண்டிய நாடார் ஆகியோரும், அக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். இரு தரப்பினருக்குள்ளும், பெரிய கொந்தளிப்பே ஏற்பட்டு விட்டது.

இதைக் கண்ட ஈ.வெ.ரா., 'அண்ணாதுரை சொல்வதை, நானே ஒரு தீர்மானமாகக் கொண்டு வருகிறேன்...' என்று சொல்லி, 'பதவி ஏற்கக் கூடாது' என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்தார். ஈ.வெ.ரா., தீர்மானம் நிறைவேறியது; ராஜா சர் முத்தையா செட்டியார் தீர்மானம் தோல்வியுற்றது!

நீதிக்கட்சியை, எப்படியும் ஆட்சியில் அமர வைத்து விடலாம் என்று எண்ணிய கவர்னரே, இந்தத் தீர்மானத்தைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தார்.

***

குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா, தன் இளமைக் காலத்தில் முதன் முதலாக, தன் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். அதன் பெயர், 'மலரும் உள்ளம்!'

பள்ளி நாட்கள் முதலே, வள்ளியப்பா, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் பக்தர். குழந்தைப் பாடல்களை எழுதி, தமிழில் குழந்தை இலக்கியத்தைத் தோற்றுவித்தவர், (1901ல்) கவிமணி தான்.

எனவே, கவிமணியின் வாழ்த்துடன், தன் பாடல் தொகுதி வெளிவர வேண்டும் என்று, வள்ளியப்பா விரும்பினார். நாகர்கோவிலை அடுத்த, புத்தேரிக்குச் சென்று, கவிமணியை சந்தித்தார்.

ஏழு வாழ்த்துப்பாக்களை வள்ளியப்பாவுக்கு வழங்கிய கவிமணி, 'நான் எழுதும் கவிதைகளை, என் நண்பர் பேராசிரியர் வையாபுரி பிள்ளை பார்த்த பிறகு தான், அச்சுக்கு அனுப்புவது வழக்கம். இந்த ஏழு வாழ்த்துப் பாடல்களையும் அவரிடம் காட்டுங்கள். ஏழில், ஐந்து பாடல்களை தேர்ந்தெடுத்துத் தரச் சொல்லுங்கள். அந்த ஐந்தை மட்டும், உங்கள் நூலில் வெளியிடுங்கள்...' என்றார் கவிமணி.

புகழ்பெற்ற கவிஞரான கவிமணி, தாம் எழுதும் கவிதைகளை இன்னொரு தமிழ்ப் பேராசிரியர் பார்த்து ஒப்புதல் தந்த பின் தான், வெளியிடும் பழக்கத்தை மேற்கொண்டிருந்தார்.

— 'குழந்தைக் கவிஞர் வள்ளியப்பா' நூலில், பூவண்ணன்.

***

நடுத்தெரு நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us