நடன நிகழ்ச்சியில் மனைவிகளை தேர்வு செய்யும் மன்னர்!
நடன நிகழ்ச்சியில் மனைவிகளை தேர்வு செய்யும் மன்னர்!
PUBLISHED ON : டிச 11, 2011

இந்த பூமிப்பந்தின் கடந்த கால நிகழ்வுகள் நமக்கு கிடைத்த பொக்கிஷங்கள். இன்பம், துன்பம், வேடிக்கை, வினோதம், அடக்குமுறை, சுதந்திரம் என்ற பல உணர்ச்சிகரமான நிகழ்வுகளின் கூட்டுக் கலவை அவை. இளமையில், ஒரு வேளை உணவுக்கே வழி இல்லாமல் சிரமப்பட்டவன், ஆட்சியை பிடித்ததும் உண்டு. தங்கத் தட்டில் சாப்பிட்டு, பட்டு மெத்தையில் உறங்கி, பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு கார்களில் பவனி வந்த ஆட்சியாளர்கள், பொதுமக்களின் கைகளால் தெரு நாய்களைப் போல அடிபட்டு செத்ததும் உண்டு.
வேடிக்கை என்னவென்றால், இதுபோன்ற விசித்திரமான ஆட்சியாளர்கள் இன்னும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்பது தான். அப்படிப்பட்ட ஒரு வேடிக்கையும், வினோதமும் நிறைந்த மன்னர் தான், சுவாசிலாந்தை ஆட்சி செய்து வரும் ராஜா முசுவாதி-3.
நம் நாட்டில், 22ம் புலிகேசி, 23ம் புலிகேசி என பெயர் வைப்பது போல், முசுவாதி அரச வம்சத்தில் இவருக்கு மூன்றாம் நம்பர் கிடைத்துள்ளது. சுவாசிலாந்து என்பது ஆப்ரிக்கா கண்டத்தில் உள்ள மிகச்சிறிய நாடு. மன்னர் உட்பட, இந்த நாட்டில் உள்ள பெரும்பாலானோர் பழங்குடியினர் தான்.
பிரிட்டனில் படித்த முசுவாதி, 14 வயதிலேயே, அரியனை ஏறி விட்டார். ஆடம்பர வாழ்வில் நாட்டம் உடையவர். இவரிடம் உள்ள விலை உயர்ந்த கார்களின் எண்ணிக்கை மட்டும், ஆயிரத்துக்கு மேல். சுவாசிலாந்து, உலக வரைபடத்தில் ஏழை நாடாக அடையாளம் காட்டப்பட்டு இருந்தாலும், இங்கு ஆட்சி நடத்தி வரும் முசுவாதி, உலகின் மிகப் பெரிய பணக்கார அரசர்களில் ஒருவர் என, போர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.
இந்த நாட்டில் வசிக்கும், 38 சதவீதம் பேருக்கு எய்ட்ஸ் பாதிப்பு உள்ளது. இதை கட்டுப்படுத்துவதற்காக, 18 வயதுக்கு குறைவான பெண்கள், பாலியல் உறவில் ஈடுபடுவதற்கு, தடை விதித்தார் முசுவாதி. ஆனால், அடுத்த சில மாதங்களிலேயே, 17 வயது பெண்ணை மணந்து கொண்டதன் மூலம், தான் விதித்த தடையை, அவரே மீறினார்.
தற்சமயம், முசுவாதிக்கு, 14 மனைவிகள் உள்ளனர். ஆடம்பர வாழ்வில் நாட்டம் உடைய முசுவாதி, திருமண விஷயத்திலும் கில்லாடி. திருமணம் செய்து கொள்வதற்காக பெண்களை இவர் தேர்வு செய்யும் விதமே, மிகவும் அலாதியானது. ஆண்டுதோறும் இங்கு, 'ரீட் டான்ஸ்' என்ற நடன நிகழ்ச்சி நடக்கும். திருமணமாகாத பெண்களுக்காக பாரம்பரியமாக இந்த திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. மன்னர் முசுவாதியோ, இந்த பாரம்பரிய திருவிழாவை, சமீபகாலமாக, தனக்கு மனைவிகளை தேர்வு செய்யும் விழாவாக மாற்றி விட்டார்.
இந்த திருவிழாவுக்காக, நாட்டின் பல பகுதிகளில் இருந்தும், இளம் பெண்கள் வருவர். பாரம்பரிய பழங்குடியின உடை அணிந்து, திருவிழாக்களில் பங்கேற்பர். இந்த திருவிழாவுக்கு முசுவாதியும் ஆஜராகி விடுகிறார். பழங்குடியின இளம் பெண்கள், பாரம்பரிய இசைக்கு ஏற்ப, வரிசை, வரிசையாக நின்று நடனமாடுவர். முசுவாதியும், பாரம்பரிய உடை அணிந்து, காட்சி அளிப்பார்.
'ஸ்டார்ட் மியூசிக்' என்று கூறியதும், இசை ஒலிக்கத் துவங்கும். பெண்கள் நடனமாடத் துவங்குவர். மன்னர் முசுவாதியின் கண்கள், நடனமாடும் பெண்கள் கூட்டத்தின் மீது அலை பாயும். காதலும், காமமும் கொப்பளிக்க, காட்சி அளிக்கும் முசுவாதி, இறுதியாக, நடனமாடும் பெண்கள் கூட்டத்தில், தன் மனம் கவர்ந்த ஒரு காந்த கண்ணழகியை தேர்வு செய்வார். இதன்பின், அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வார்.
முதலில் மணந்த இரு பெண்களை தவிர, மற்ற, 12 பேரையும், இந்த நடனத் திருவிழாவில் தான், இவர் தேர்வு செய்துள்ளார். 'இன்னும் எத்தனை காலத்துக்கு இவர் ஆட்சியில் இருப்பாரோ, இன்னும் எத்தனை பெண்களை திருமணம் செய்து கொள்ளப் போகிறாரோ...' என, பொதுமக்கள் புலம்புகின்றனர்.
கூடுதல் தகவல்: இந்த அருந்தவப் புதல்வனை பெற்றெடுத்த மாட்சிமை தாங்கிய அரசரின் பெயர், சொபுஷா-2 . இவரது அந்தப்புரத்தை அலங்கரித்த மனைவிகள் எத்தனை பேர் தெரியுமா? 70 பேர். நல்ல வேளையாக, மனிதர், 1982லேயே போய்ச் சேர்ந்து விட்டார். இல்லையெனில், அவரின் மனைவிகளின் எண்ணிக்கையை கணக்கிடுவதில், கால்குலேட்டருக்கே கிறுக்கு பிடித்திருக்கும்.
***
சி. சண்முகநாதன்
