தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : டிச 11, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 11, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னையில், முன்பு வெளியான இந்தியப் பத்திரிகையான, 'மெட்ராசி' இதழ், பல காரணங்களால் நின்று விட்டது. அந்தச் சமயம், சர் டி.முத்துஸ்வாமி ஐயரவர்களுக்கு ஐகோர்ட் ஜட்ஜ் வேலை கிடைத்ததைப் பற்றி, சில ஆங்கிலோ - இந்தியப் பத்திரிகைகள் தூஷணையாக எழுதியதைச் சகியாமல், நாங்கள் ஆறு பேர் ஒன்று சேர்ந்து,

1878ம் வருடம் செப்டம்பர் மாதம், 'இந்து' பத்திரிகையை ஆரம்பித்தோம். பத்திரிகையை ஆரம்பிக்கும் சமயத்தில் பத்திரிகையின் பொறுப்புகள், அதை நடத்தும் விதம், அதற்குப் பிடிக்கும் செலவு போன்ற விஷயம் ஒன்றும் எங்களுக்குத் தெரியாது. பத்திரிகை செலவுக்காக எங்களிடம் கையில் பணம் இல்லாமல், ஒன்றே முக்கால் ரூபாய் கடன் வாங்கி, 80 பிரதிகள் அச்சிட்டு வெளியிட்டோம். இதில், முத்துஸ்வாமி ஐயரவர்களின் நியமனம் சரியானது என்றும், ஆங்கிலோ - இந்தியப் பத்திரிகையில் வந்த விஷயங்களைக் கண்டித்தும் எழுதினோம்.

'மெட்ராசி'யை நடத்தி வந்த ராமசந்திர ஐயர், அடுத்த வாரத்தில் என்னை அழைத்து தைரியப்படுத்தி, 'மெட்ராசி' சந்தாதாரர் பட்டியலைக் கொடுத்து, ஐநூறு பிரதிகள் போடும்படி தைரியமூட்டினார். முதலில் சகாயம் செய்ய முன் வந்தவர்களுள் பலர் சர்க்கார் அலுவலில் அமர்ந்து விட்டபடியால், அவர்கள் முழு உதவியும் செய்ய இயலாமல் போகவே, ஏகதேசத்தில், 'இந்து' பத்திரிகைக்கு எழுதும் பொறுப்பை நானே முழுதும் வகிக்கும்படி நேரிட்டது.

'இந்து' பத்திரிகை ஆங்கிலப் பத்திரிகையாக இருப்பதால், இங்கிலீஷ் பாஷை அறியாத தமிழ் ஜனங்களும் தேச சமாச்சாரங்களை அறிந்து கொள்ள வழியில்லாது இருப்பதை யோசித்து, அதன் பின், 'சுதேசமித்திரன்' பத்திரிகையை, 1882ம் ஆண்டு மார்ச் மாதத்தில் வாராந்திரப் பத்திரிகையாகத் துவக்கினேன்.

எனக்கு, 'இந்து, சுதேசமித்திரன்' என்ற இரண்டு பத்திரிகைகளுக்கும் விஷயம் எழுதி, அவற்றை ஒரே காலத்தில் கவனித்து நடத்த முடியாததால், சுதேசமித்திரன் பத்திரிகைக்கு எழுதும் பொறுப்பை வோறொருவரிடம் ஒப்படைந்தேன்.

பின், சில காரணங்களால், 'இந்து' பத்திரிகையை விட்டு நான் விலகிக் கொள்ளும் படி நேரிட்டது. 'சுதேசமித்திரன்' பத்திரிகையை விருத்தி செய்து, தமிழ் ஜன சமூகத்தாரின் அறிவை வளர்ப்பதே மேன்மை என கருதினேன். அவ்வாறே, 1889ம் வருடம் சுதேசமித்திரன் பத்திரிகையை தினசரியாக்க முயன்ற சமயத்தில் அநேகர், 'தமிழ்ப் பத்திரிகையைத் தினசரியாக நடத்துவது முடியாத காரியம்; அதை ஆதரிப்பவர் கிடையாது...' என தெரிவித்தும், நான் எடுத்த முயற்சியைத் தளர விடாது நடத்தினேன். அதன் காரணமாக தமிழர்கள், 'மித்திர'னை மிகுதியும் ஆதரிக்க ஆரம்பித்து விட்டனர்.

— ஜி.சுப்பிரமணிய ஐயர் பேசிய சொற்பொழிவிலிருந்து...

அந்தக் காலத்தில் யாழ்ப்பாண வாசிகளே தமிழில் நன்றாக கற்றவர்கள் என்று மதிக்கப்பட்டனர். அவர்களுள்ளும் (சி.வை.தாமோதம்) பிள்ளையவர்கள் சிறந்த புலமை உள்ளவர் என்று மதிக்கப்பட்டார்.

இவர் ஒரு வயதிலேயே, 'டயபடிஸ்' எனும் சர்க்கரை நோய்க்கு உட்பட்டவரானார். பொதுவாக இந்த நோயாளிகள் சர்க்கரைத் தின்பண்டங்களைச் சாப்பிடவே கூடாது என்பது, மருத்துவர்களுடைய கட்டளை. இவர், அதற்கு மாறாக லட்டு போன்ற இனிப்புப் பதார்த்தங்களை வைத்த போதிலும் கொஞ்சங்கூட விடாது சாப்பிட்டு விடுவார். இவர் எங்கள் வீட்டில் பலமுறை சாப்பிட்டிருக்கிறார். எங்கள் தகப்பனார், 'இவருக்கு சர்க்கரைத் தின்பண்டங்களை வைக்காதீர்கள்...' என்று கட்டளை இடுவதுண்டு. அதற்கு மாறாக சிறுவர்களாகிய நாங்கள் ஜிலேபி, அல்வா முதலிய பண்டங்களை வேண்டுமென்றே அதிகமாய் போடுவோம். இவர் அவற்றை எல்லாம் கவனியாது விழுங்கி விடுவார்.

இவர் சாப்பிடும் போது ஒரு புதுமை என்னவென்றால், சாப்பாட்டின் கடைசியில் இலையில் மிகுந்திருந்த எல்லாப் பதார்த்தங்களையும் சேர்த்து முருங்கைக்காய்த் தோல், ஊறுகாய், மிகுதியாய் இருந்த உப்பு இவைகளுடன் கலந்து, ஒரே பெருங் கவளமாக்கி, அதையும் விழுங்கி விடுவார். இது, இவர் நோய்க்கு செய்து கொள்ளும்படியான முதல் மருத்துவம்.

— பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய, 'நான் கண்ட புலவர்கள்' நூலிலிருந்து...

நடுத்தெரு நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us