
அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. கணிப்பொறியுடன் மாரடித்துக் கொண்டு இருந்த சமயம், அந்தப் பெண்ணை அழைத்து வந்தாள், பவித்ரா. எங்கேயோ பார்த்த முகமாய் இருக்கிறது என்று யோசித்தேன்.
''என்னங்க, இது யார்ன்னு தெரியுதா,'' என்று, அந்தப் பெண் முன், என்னை, 'பல்ப்' வாங்க வைத்த, பவித்ராவை மனதில் கடிந்தபடி, அசடு வழிந்தேன்.
''நாம அரும்பாக்கத்துல இருந்தப்போ, பக்கத்து வீட்டுல இருந்தாங்களே... இப்போ ஞாபகம் வருதா.... செல்வாண்ணே மனைவி மஞ்சுளா,'' பவித்ரா சொன்ன போது, எல்லாம் நினைவில் வந்தது.
''வாங்க... எப்படி இருக்கீங்க?'' சம்பிரதாயமாய் வரவேற்று, உள்ளே நகர, ஹாலில் அமர்ந்து இருவரும் பேச ஆரம்பித்தனர்.
சென்னை, அரும்பாக்கத்தில் நாங்கள் இருந்தபோது, இவர்கள் பக்கத்து வீடு. மஞ்சுளாவின் கணவன், ஒரு பிரபல ஜவுளிக்கடையில் சூப்பர்வைசராக இருந்தார்.
ஆற அமர அளவளாவிய மஞ்சுளாவை, என்னிடம் சொல்லிக் கொண்டு போக, அழைத்து வந்தாள், பவித்ரா.
''சாப்பிட்டு போலாமேம்மா,'' என்றேன்.
''இல்ல அண்ணா, இன்னொரு நாள் வரேன்,'' என்று, பவித்ராவின் முகம் பார்க்க, அவள் தான் மெல்ல, ''மஞ்சுளா வீட்டுக்காரருக்கு, 'ஆக்சிடெண்ட்' ஆகிடுச்சுங்களாம்... இப்போ வீட்டுல தான் இருக்காறாம்...''
'அடடா, இதெப்போ... அவர் ஒருத்தரை நம்பித்தானே குடும்பமே இருந்தது...' என, நானும் ஒரு குடும்பத் தலைவனாய் கவலைப்பட, தன் புடவைத் தலைப்பால் கண்களை ஒற்றிக் கொண்டாள், மஞ்சுளா.
''வாஸ்தவம்தாண்ணே... அவரால நடக்க முடியல... நான் தான் இப்போ ஸ்கூல் வேலைக்கு போயிட்டு, என்னால முடிஞ்ச வரைக்கும் காலத்தை நகர்த்தறேன்.''
''எல்லாம் சரியாகும்மா... இந்த கஷ்டங்கள் எப்படி நம்மை கேட்காம வந்துச்சோ, அதே மாதிரி சந்தோஷமும் நம்மைக் கேட்காம வந்துடும்,'' ஆறுதல் சொல்லி, அனுப்பி வைத்தேன்.
நிஜமாகவே எனக்கு வருத்தமாகத் தான் இருந்தது. செல்வா ரொம்ப நல்ல மனிதர். தள்ளாடாமல் பாரம் சுமந்தவர்.
என்னிடம் வந்து நின்றாள், பவித்ரா.
''எதாவது செய்யணும்ங்க... இத்தனை கஷ்டத்துக்கு நடுவிலயும் பொண்ணை படிக்க வைக்கணும்ன்னு சொல்றாங்க... நல்லா படிக்கிற புள்ளையாம்... ஸ்கூல் பஸ்ட் வருமாம்... 'நீட் எக்ஸாம்'க்கு, பயிற்சிக்கு அனுப்ப வழியில்லாம தவிக்கிறாங்களாம்.''
எனக்கு, நிஜமாகவே வருத்தமாய்ப் போனது.
''கடவுள் நமக்கு எந்தக் குறையும் வைக்கல. இந்த நிமிஷம் நல்லா இருக்கோம். அப்போ நமக்கான கடமை, இந்த நிமிஷம் நல்லா இல்லாதவங்களுக்கு உதவறது தான்,'' பவித்ரா சொன்னபோது, எனக்கு பெருமையாக இருந்தது.
அடுத்த நாள், என் பெண்ணின், 'நீட்' தேர்வு பயிற்சி மையத்தில் கேட்டு, அவர்களுடைய குடும்ப நிலையைச் சொல்லி, இலவச பயிற்சி வகுப்புக்கு ஏற்பாடு செய்தேன்.
மஞ்சுளாவுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
''இதப்பாருமா... உன் அப்பா - அம்மா, உன்னை அத்தனை கஷ்டத்துக்கு நடுவே பெரிய இடத்துக்கு கொண்டு வர முயற்சி செய்யிறாங்க... நீ அதுக்கு ஒத்துழைக்கணும்... நல்லா படிச்சு, முன்னேறணும்,'' மஞ்சுளாவின் மகளுக்கு அறிவுரை சொன்னேன்.
இசைவாய் தலை அசைத்தாள்.
சந்தோஷமாக இருந்தாள், பவித்ரா. அவளுக்குள் முளைத்திருந்த பொது நலச்சிந்தனை, எனக்கு உகப்பாய் இருந்தது. தன்னிறைவானவர்கள், தங்களிடம் வளர்த்துக் கொள்ள வேண்டிய தன்னிகரல்லாத குணம், மற்றவர்களுக்கு உதவுவது மட்டும் தான்.
பயிற்சி வகுப்பில் இணைந்து கொண்ட பின், பலமுறை எங்கள் வீட்டிற்கு வந்து, தாயும் - மகளும் நன்றி நவின்று போவர்.
மஞ்சுளா வேலை செய்து கொண்டிருந்த சின்ன தனியார் பள்ளியை விட்டு, மிகப்பெரிய அளவில் இருந்த மற்றொரு தனியார் பள்ளியில் வேலை கிடைத்தது. இதற்கு நேரிடை காரணமாக நாங்கள் இல்லாவிட்டாலும், எங்களைச் சுற்றித் தான் அதுவும் நடந்தது.
ஒருமுறை, மஞ்சுளா வந்தபோது, எங்கள் துாரத்து உறவு முறை, அத்தையும் இருந்தார். அவர், நிறைய தொண்டு நிறுவனங்களோடு இணைப்பில் இருக்கும் மேல்தட்டு பெண்மணி.
மஞ்சுளாவோடு இயல்பாக அறிமுகமாகி, கல்வித்தகுதி இத்யாதி விபரங்களை கேட்டு, அந்த மிகப்பெரிய பள்ளியில் பணி வாங்கித் தர, நிஜமாகவே சட்டென்று அவளின் வாழ்க்கை மாறித்தான் போனது.
உண்மையில் மன நிறைவாய் இருந்தது எனக்கு. நாம் உதவி செய்வது ஒரு புறம் என்றால், நம்மால் ஒருவருக்கு வாழ்க்கைத் தரம் மாறுகிறது என்றால், அது இன்னும் நன்மை அல்லவா!
முதல் மாத சம்பளம் வாங்கியவுடன், எங்கள் வீட்டுக்குத் தான் இனிப்புகளை வாங்கி, ஓடோடி வந்தாள், மஞ்சுளா. முன்னை விட நல்ல பளபளப்புத் தெரிந்தது உடையிலும், வாழ்விலும்.
''மறக்கவே முடியாது, பவி... என் மனசு முழுக்க நீ, சாமி மாதிரி உயர்ந்து இருக்க,'' மஞ்சுளா சொன்ன போது, பவித்ராவுக்கு மட்டுமல்ல, எனக்கும் சிலிர்த்துத் தான் போனது.
''அடடா, என்ன மஞ்சு இது... சரி, அதை விடு இப்போ, உனக்கு எவ்வளவு சம்பளம்... இது போதுமானதா இருக்கா... அண்ணனுக்கு உடம்பு எப்படி இருக்கு?'' சிரித்தபடியே, கேட்டாள்.
''நான் கனவிலயும் நினைக்காத சம்பளம், பவி... 20 ஆயிரம். அந்த ஸ்கூல் எவ்வளவு பெரிய மேனேஜ்மென்ட். அது மட்டுமில்ல, ஏகப்பட்ட, 'ஆன்லைன் டியூஷன்' வேற கிடைச்சிருக்கு. நான் அந்த ஸ்கூல்ல வேலை செய்றேன்னு என்னுடைய சுய விபரத்தை பார்த்துட்டு ஏகப்பட்ட ஆபர்...'' அவள் அகமகிழ்வாய் சொல்ல, பவியின் முகத்தில் இருந்த புன்னகை மெல்ல மறைந்தது.
''ஓ...'' என்றாள் சுரத்தில்லாமல். இதை, நான் கவனிக்கத் தவறவில்லை.
அதன் பிறகு நடந்த பேச்சுகளில் அவ்வளவு மனம் ஒன்றி, பவி, கலந்து கொள்ளவில்லை. நடு ராத்திரி புரண்டு படுக்கையில் என்னிடம், ''ஏங்க, அவ்வளவு சம்பளம் குடுப்பாங்களா...'' அவள் கேள்வியில் வழிந்த உணர்வை இனம் காண இயலாமல் உறுத்துப் பார்க்க, அவள் திரும்பி படுத்துக் கொண்டாள்.
இப்பொதெல்லாம் மஞ்சுளா இந்தப் பக்கம் அதிகம் வருவதில்லை. ஆனால், தவறாமல் போன் பேசிக் கொண்டு தான் இருந்தாள்.
வராமல் போக வேறொன்றும் காரணமில்லை. வேலை, 'ஆன்லைன்' வகுப்பு, வீட்டு வேலைகள், மகளின் படிப்பிற்கு உதவுவது, கணவனின் சிகிச்சைக்கு அலைச்சல் என்று, அவளுடைய வேலைகள் மொத்தமாக அவளை அலைக்கழித்தது. ஆனால், 'சுயநலக்காரி, மறந்து விட்டாள்...' என்று, பவி தான் புலம்பிக் கொண்டே இருந்தாள்.
எனக்கு புரிந்தாலும், அமைதியாக இருந்தேன்.
காலம் ஓடியது. 'நீட்' தேர்வில் என் பெண் தோல்வியையும், மஞ்சுளாவின் மகள் அதிக மதிப்பெண்ணில் பாஸாக, உக்கிரமாகி விட்டாள், பவி.
எனக்கும் வருத்தம் தான். அது, என் மகள் தோல்விக்காகத் தான்
அன்றி, அந்தக் குழந்தையின் வெற்றிக்காக இல்லை.
'நாம விசிறினதை திண்ணதுக எல்லாம் படிச்சு முன்னேறியாச்சு. நான் பெத்தது, கோட்டை விட்டுட்டு வந்து நிக்குது...' அவள், வார்த்தைகளை சிதற விட்டாள்.
மஞ்சுளா அங்கே வர, இப்போது தான் மலர்ந்த மல்லிகை போல், நொடியில் முகம் மாற்றி சிரித்தாள்.
நான் அசந்து போனேன்.
மெடிக்கல் காலேஜில் சேர்க்க வேண்டும், ஏகப்பட்ட செலவு. திருச்சியில் அவர்களுக்கு சொந்தமான இடம் இருக்கிறது அதை விற்க வேண்டும் என்று சொல்லி, இந்த முறையும், ஒரு உதவி கேட்டுத்தான் வந்திருந்தாள், மஞ்சுளா.
நான் வாய் திறக்கும் முன்னே, பவி முந்திக் கொண்டு, ''ஆன்லைன்ல கிளாஸ் எடுக்கற மஞ்சு, உனக்கு ஆன்லைன்ல விளம்பரம் கொடுத்து விற்கத் தெரியாதா என்ன... பார்த்து செய்துக்க... அவருக்கு, ஆடிட்டிங் வருது...'' என்ற, முகத்திலடித்த பதிலில், ஒரு நிமிஷம் மஞ்சுளா மலைத்துப் போனாலும், அதைக்காட்டிக் கொள்ளாமல் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்து கிளம்பிப் போனாள்.
என் பார்வையைத் தவிர்த்து, பவி இடத்தைக் கடக்க, ''என்னாச்சு பவித்ரா?'' என்றேன் அழுத்தமாக.
''என்னாசுன்னா என்ன... நம்மாள முடிஞ்சளவு உதவி செஞ்சாச்சு... இனியென்ன பண்ண... அதான் கை நிறைய சம்பாதிக்கிறா, அவளுக்கு எல்லாம் தெரியும். நாளைக்கு இவ பொண்ணு டாக்டராகி நிற்பா, இவளுக்கு பாவப்பட்ட நம் பொண்ணு எதுவுமில்லாம நிக்கணும்.''
அவள் முடித்தபோது, என் கடையிதழில் சின்னப் புன்னகை அரும்பியது.
''பவி, உனக்கு அதெல்லாம் கோபமில்ல. நீ மட்டுமில்ல, நம்மில் பல பேர், ஒரு விஷயம் யோசிபோம்... நம் கூட ஓடி வர்றவன் நம்மை முந்தியோட ஆரம்பிச்சா, அவன் நமக்கு எதிரி ஆகிடறான்... அது ஏன், நாம நிர்ணயிச்சதை விட யாராவது ஜெயிக்க ஆரம்பிச்சா, நமக்கு ஏன் பிடிக்க மாட்டேங்குது...
''நாம உதவி செய்த, மஞ்சுளா, நம்மை விட சவுகரியப்பட ஆரம்பிச்சதும், உனக்கு பிடிக்கல. இது நிஜமான உதவும் குணத்துக்கு அடையாளம் இல்ல. 'ஓடு, ஆனா நான் நினைச்ச அளவுக்கு மட்டும் ஓடு'ன்னு, நாம யாரையும் சொல்ல முடியாது. யாருக்கும் கெட்டது நினைக்காம இருக்கிறதும் ஒரு நல்ல குணம் தான், பவி... அது நல்லது நினைக்கிறதை விட சிறப்பான செயல்.''
''அப்படியெல்லாம் எதுவுமில்லை... நீங்களா கற்பனை பண்ணாதீங்க.''
''நீ ரொம்ப நல்லவ தான். ஆனா, இந்த இடர்பாடான சிந்தனை, நம்மில் பலருக்கு இருக்கு. அதுல, ஆண் - பெண் பேதமில்லை, பவி. தவறுகள் குற்றமில்லை. நாம உதவி தான் செய்தோம். நிஜத்தில் உயர்த்தியது கடவுள் தான்.
''நாம செய்தோம்ன்னு நினைச்சாத் தான் பொறாமை வரும். நம் கையில எதுவுமில்லைன்னு நினைக்க கத்துக்க... உன்னையும் அறியாத தெளிவும், பணிவும் வரும்.''
நான் சொல்ல, தலை குனிந்தாள், பவித்ரா.
என் வார்த்தைகள் அவளுக்குள் பிரளயத்தை உண்டாக்கும் என்றெல்லாம், நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால், சின்ன பொறி விழுந்திருக்கும்; அது போதும் எனக்கு.
எஸ். பர்வின் பானு

