
வாழக் கற்றுக்கொள்!
அவமானம் படுத்தியவரால்
தன்மான வாழ்க்கை
பெற்றேன்!
அலட்சியம் செய்தோரால்
லட்சியம் வகுத்து
வென்றேன்!
வீழ்த்தி சிரித்தோரால்
எழுந்து நிதானமாய்
நடந்தேன்!
தாழ்த்தி பழித்தோரால்
நம்பிக்கை செழிப்பில்
உயர்ந்தேன்!
ஒதுக்கி நகைத்தோரால்
என்னை செதுக்கி
நிமிர்ந்தேன்!
காயப்படுத்தி களித்தோரால்
அன்பே ஆலயமென
தொழுதேன்!
ஏளனத்தால் ரணமாக்கியவரால்
இலக்கிற்கான களம்
அமைத்தேன்!
அழ வைத்து ரசித்தோரால்
நிலைத்த புன்னகை
கற்றேன்!
உறவுகளின் நகைப்பால்
தன்னம்பிக்கை தழைக்க
நிலைத்தேன்!
நட்பே நரகமானதால்
நெஞ்சத்தில் நம்பகம்
விதைத்தேன்!
அவனை விட்டொழிங்க
பழித்து தனித்தோரால்
பாராட்டப்பட்டேன்!
முனைந்து முடமாக்கி
முண்டாசு கட்டியோரால்
விவேக தடம் அமைத்து
புதிய வேதமாவேன்!
என் மீது
வீசப்படும் கற்களையே
அழகு சிலைகளாய்
படைப்பேன்!
வசைப்பாடும் சொற்களையே
இசையாக்கி யாழிசை
மீட்டுவேன்!
விடியலே நானாகி
சூரிய ஒளி பரப்பி
காட்டும் திசையெல்லாம்
மடமையை விரட்டி
மகிழ்வேன்!
இனி கொட்டும் முரசொலியில்
என் பெயர் ஒலிக்க
வியர்க்கும் வியர்வையில்
விருட்சமாவேன்
வீழ்வேனென்று நினைத்தாயோ...
பாரதியே, உன் பட்டாக்கத்தி
வார்த்தைகள் தான்
என் வாழ்க்கை!
வேதை. ரா.மாரியப்பன்
சென்னை.

