
ராம.அரங்கண்ணன் எழுதிய, 'நினைவுகள்' நுாலிலிருந்து: முதன் முதலாக, அண்ணாதுரை எழுதிய, சந்திரோதயம் நாடகம், நிதி வசூலுக்காக நடத்தப்பட்டது. ஈ.வெ.ரா., தலைமை வகிக்க, என்.எஸ்.கிருஷ்ணன், தண்டபாணி தேசிகர், தியாகராஜ பாகவதர் ஆகியோர், சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மூவரையும் பார்த்த, ஈ.வெ.ரா., தன் தலைமை உரையில்:
நாட்டில் எத்தனையோ நாடகங்களும், சினிமாக்களும் நடைபெறுகின்றன. அவையெல்லாம் மக்களை மடமையில் ஆழ்த்துகின்றனவே தவிர, அறிவு விளக்கம் பெறுவதாக காணோம். அவ்வித நடிகர்களுக்கு, 20, 30, 50 ஆயிரம் என்று, ஒரு படத்துக்கு கொட்டி கொடுக்கப்படுகிறது.
(என்.எஸ்.கே., அப்போது, ஒரு படத்துக்கு, 50 ஆயிரமும், பாகவதர், ஒரு லட்சமும் சம்பளமாக வாங்கி வந்தனர்.)
இதனால், யாருக்கு லாபம்... சினிமாவிலும், நாடகத்திலும், சில மணி நேரம் அர்த்தங்கெட்ட கூத்து அடிப்பதற்காக, பல ஆயிரம் ரூபாய் கொட்டி கொடுக்கப்படுகிறது.
அது போலவே, கச்சேரிகளும் நடைபெறுகின்றன. அங்கேயாகிலும், அறிவு வளர்ச்சிக்கு ஏற்றார் போல், பாடல்கள் உண்டா எனில் அறவே கிடையாது. ராமா, கிருஷ்ணா, முருகா, சிவ சிவா என்று பாடுகிறவர்களுக்கு, ஒரு கச்சேரிக்கு, 3,000 - 4,000 என்று கொட்டி அழுகின்றனர். இவர்களுக்கெல்லாம் தேசிகர், பாகவதர் என்கிற பட்டங்களும் குறைவில்லை.
கச்சேரி, சினிமாகாரர்களுக்கு, ஆயிரக்கணக்கில் கொடுத்து ஏமாறுவதும், அதை பெறுகிறவர்கள் மைனர்களை போல் வாழ்க்கை நடத்துவதும் ஒழிய வேண்டும்.
- இவ்வாறு, ஈ.வெ.ரா., பேசியதும், தேசிகரும், பாகவதரும் திடுக்கிட்டனர். நாடகத்திற்கு, 1,100 ரூபாய் வசூலாகி இருந்தது. தேசிகரும், பாகவதரும், தங்கள் கையிலிருந்து, 900 ரூபாய் போட்டு, 2,000 ரூபாயாக, ஈ.வெ.ரா.,விடம் கொடுத்துச் சென்றனர்.
'சின்ன சின்ன மின்மினிகள்' நுாலிலிருந்து: காந்திஜி, நடை பயிற்சி மேற்கொண்டபோது, தெருவில் கிடந்த பஞ்சை எடுத்து, பத்திரப்படுத்தச் சொன்னார். மறுநாள், ஞாபகமாக அதை கேட்டு வாங்கி, ராட்டையில் நுால் நுாற்பதற்கு பயன்படுத்திய நிகழ்ச்சி, பிரசித்தமானது.
எவ்வளவு தான் அற்பப் பொருளாக இருந்தாலும், அதில் மனித உழைப்பு இருக்கிறது; அதை மதிக்க வேண்டும் என்பது தான் இதன் கருத்து.
பிரான்ஸ் நாட்டில் நடந்த ஒரு சம்பவம்...
வறுமையில் உழலும் ஒரு சிறுவன், வேலை தேடி, ஒரு நிறுவனத்திற்கு போனான்.
'வேலை இல்லை...' என்று கூறி, கையை விரித்தார், அதன் நிர்வாகி.
திரும்பி போகும்போது, வாசலை கடந்தவன், குனிந்து, கீழே கிடந்த எதையோ எடுத்தான்.
தற்செயலாக அதை பார்த்த நிர்வாகிக்கு, 'எதை எடுத்தான்... நிறுவனத்துக்கு சொந்தமான விலை உயர்ந்த பொருளாக இருக்குமோ...' என, சந்தேகப்பட்டு, கூப்பிட்டு விசாரித்தார்.
அவன் எடுத்து காண்பித்தான். அவர் உள்ளம் நெகிழ்ந்தது. அற்பத்திலும் அற்பமான குண்டூசி. அதை மதித்து சட்டையில் குத்திக் கொண்டான். அந்த பையனுக்கு வேலை தரப்பட்டது.
அந்த சிறுவன் தான் பிற்காலத்தில், 'பேங்க்'கர்களில் பெரிய கோடீஸ்வரனாக திகழ்ந்த, பைலட்.
'படிக்காத மேதை காமராஜர்' நுாலிலிருந்து: காமராஜர் அமைச்சரவையில், அமைச்சராக இருந்த, ஆர்.வெங்கட்ராமன், விருதுநகரில் உள்ள காமராஜர் வீட்டிற்கு, கோடைக் காலத்தில் சென்றார்.
அப்போது, காமராஜரின் தாயார், சிவகாமி அம்மாள், பனை ஓலை விசிறியால் விசிறியபடி உட்கார்ந்திருந்தார்.
அதைக் கண்ட, வெங்கட்ராமன், தன் சொந்த செலவில், ஒரு மின் விசிறி வாங்கி, தன் முன்னிலையில் அதை உத்திரத்தில் பொருத்தி, ஓடச் செய்து, ஊர் திரும்பினார்.
பிறிதொரு சமயம், காமராஜர், விருதுநகர் வீட்டிற்கு சென்ற போது, மின் விசிறியை பார்த்து, விசாரித்தார்.
'ஊரில், எல்லா வீட்டு பெண்மணிகளும் விசிறியால் தான் காற்று வாங்கிக் கொண்டிருக்கின்றனர்... உனக்கு மட்டும் மின் விசிறியை, வெங்கட்ராமன் ஏன் வாங்கிக் கொடுத்தார்... முதல்வரின் அம்மா என்பதால் தானே... இது கூட, ஒரு சலுகை; ஒரு லஞ்சம் மாதிரி தான்...' என்று சொல்லி, அந்த மின் விசிறியை, அப்போதே, விருதுநகரில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு எடுத்து போகச் சொல்லி விட்டார்.
நடுத்தெரு நாராயணன்

