sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

மரம் வைத்தவன்!

/

மரம் வைத்தவன்!

மரம் வைத்தவன்!

மரம் வைத்தவன்!


PUBLISHED ON : ஜூன் 14, 2015

Google News

PUBLISHED ON : ஜூன் 14, 2015


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூரில் உள்ள உறவினரின் திருமணத்திற்கு சென்றிருந்தார் ராமையா. நாதஸ்வர ஓசை, மந்திர கோஷங்கள், சளசளவென்ற பேச்சு சத்தம் இவற்றுக்கிடையே திருமணம் முடிந்தது. காலில் விழுந்த ஜோடியின் தலையில், அட்சதையை தூவி, ஆசி வழங்கி, மொய் அளித்து, விருந்து உண்ட பின், வெற்றிலையை எடுத்து, பதமாக காம்பை கிள்ளி சுண்ணாம்பு தடவி, பாக்குடன் வாயில் வைத்து மென்றபடி மெல்ல திருமண ஹாலுக்கு வந்தார்.

காலையில், அழகாக வரிசையாகப் போடப்பட்டிருந்த இருக்கைகள், உறவும், நட்பும் கூடி பேச வசதியாக மாற்றிப் போட்டு அமர்ந்ததால், ஆங்காங்கே கலைந்திருந்தன. சில வாண்டு பயல்கள் ஓடிப்பிடித்து விளையாடியபடி இருந்தனர். சிலர், நாற்காலியில் அமர்ந்து எதிரில் உள்ள நாற்காலியில் காலை நீட்டி, சயன கோலத்தில் இருந்தனர்.

முகூர்த்தம், மதியம், 12:00 மணி வரை நீண்டு விட்டதால், நிதானமாக சாப்பிட்டு முடிக்க, 2:00 மணி ஆகி விட்டது. வீட்டில் ஏதும் வேலை இல்லாததால், சற்று வெயில் தாழ்ந்த பின் கிளம்பலாம் என்று முடிவெடுத்து, மின்விசிறியின் கீழ், நாற்காலியில் அமர்ந்து ஓய்வெடுத்தார் ராமையா.

''அண்ணே... எப்படி இருக்கீங்க,'' என்றபடி அருகே வந்து, அவர் கையை பிடித்தார் சிவகிரி.

ராமையாவுக்கு தம்பி உறவு முறை. ராமமையா இருப்பது போதனூர்; சிவகிரி வசிப்பது ஈரோடு. இப்படி ஏதாவது விழாவில் சந்தித்தால் தான் உண்டு.

''எனக்கென்னப்பா...ஆண்டவன் புண்ணியத்தில ஒரு குறையுமில்லாம நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க...'' என்றார் ராமையா.

''உங்களுக்கென்ன அண்ணே... நிலம், நீச்சு, வீடு வாசல்ன்னு கேக்கணுமா... நானும் உங்க புண்ணியத்துல ஓரளவு இருக்கேன். சரி... ஒரு விஷயம் பத்தி நானே உங்கள வந்து பாக்கலாம்ன்னு இருந்தேன்... என் மருமவன் கோயம்புத்தூர்ல ஒரு ஏஜன்சி எடுத்திருக்கான்; பொருட்களை வைக்க ஒரு குடோன் வேணும்ன்னு சொன்னான். உங்களுக்கு தான் ஊருக்கு வெளியே ஒரு பழைய வீடு இருக்குதே... அதை எனக்கு தந்தா, என்ன வாடகையோ கொடுத்துடறேன் இல்ல லீசுக்கு வேணும்ன்னாலும் எடுத்துக்கறேன்,'' என்றார் சிவகிரி.

''அது ரொம்ப பழைய வீடாச்சே... மராமத்து வேலை செய்யாம இல்ல கிடக்கு,'' என்றார் ராமையா.

''அட, எதுவானாலும் நான் பாத்துக்கிறேண்ணே... நீங்க மட்டும் என்னிக்கு வரலாம்ன்னு சொன்னா, நான் வந்து முன்பணம் கொடுத்துட்டு, சாவி வாங்கிக்கிறேன். என்னண்ணே யோசிக்கிறீங்க...'' என்றார் சிவகிரி.

''எல்லாம் சரி தாம்பா... உனக்கு குடுக்க என்ன ஆட்சேபனை... ஆனா, ஒரு விஷயம்... ரெண்டு, முணு மாசத்துக்கு முன் தான், அங்க ஒருத்தரை குடி வச்சேன். கணேசன்னு பேரு... குடும்பஸ்தன்; பொண்டாட்டி, ரெண்டு குழந்தைங்க இருக்காங்க. பெரிய மில்லுல வேலை பாத்தவன், அதை மூடிட்டதால அங்கங்க எலக்டிரிக்கல், பிளம்பிங்குன்னு சில்லரை வேலை செஞ்சிகிட்டுருக்கான். சம்பளம் அதிகமில்ல, கஷ்ட ஜீவனம். அதுதான் யோசிக்கிறேன்,'' என்றார் ராமையா.

''அவன் என்ன வாடகை தர்றான்'' என்று கேட்டார் சிவகிரி.

''வாடகை கம்மியா தான் வாங்கறேன், 2,000 ரூபாய்! பழைய வீடு; ஒரு ரூம் மட்டும் தான் நல்லா இருக்கும். வீட்டை சுத்தி நிலம் தான் அதிகம். 12 சென்ட்; ஆனா, வீடு சின்னது. பாவம் அவனை போயி, எதுக்கு இப்ப காலி செய்ய சொல்லணும்ன்னு யோசிக்கிறேன்,'' என்றார்.

''பாவம், புண்ணியம் பாத்தா எப்படி... இது, பிசினஸ் யுகம். நீங்க தரலைன்னா வேற எங்கியாவது போயிருப்பான் இல்ல. கடவுள் எல்லாருக்கும் ஒரு ஏற்பாடு செய்து வச்சிருப்பான்னு நீங்க தானே சொல்வீங்க... அவனுக்கு ஆனாக்க அந்த மடம், ஆவாட்டி சந்த மடம். சரி, நான் வாடகை, 5,000 ரூபாய் தர்றேன்,'' என்றார் சிவகிரி.

''என்னப்பா பேசறே... பணத்துக்காகவா யோசிக்கிறேன்... சரி சரி... நீ இவ்வளவு தூரம் கேக்கிறே... உனக்கு எப்படி முடியாதுன்னு சொல்றது... இன்னிக்கு போகும் போது அவனை பாத்து, இன்னும் ஒரு மாசத்துல காலி செய்துடுன்னு சொல்லிடுறேன், சரி தானே... சரிப்பா நான் கிளம்பறேன்,'' என்றார் ராமையா.

''ஆகட்டும்ண்ணே... என்னிக்கு காலி செய்றான்னு கேட்டுட்டு சொல்லுங்க. நானும், மருமகப் புள்ளையும் வந்து பாக்குறோம். சரியா...'' என்றார் சிவகிரி.

''சரி தான்... போயி போன் செய்றேன்,'' என்றார் ராமையா.

மறுநாள், தன் வண்டியை எடுத்துக் கொண்டு, ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த அவ்வீட்டை நோக்கி பயணித்தார் ராமையா.

செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த கணேசன், இவரைப் பார்த்ததும், ''வாங்கய்யா... உக்காருங்க,'' என்று நாற்காலியை எடுத்துப் போட்டான். மூன்று மாதங்களுக்கு முன், வெறும் பொட்டலாக, கல்லும், முள்ளும், பாம்பு புற்றுமாகக் கிடந்த இடம் இன்று, செப்பனிட்டு, செடிகொடி நடப்பட்டு, சோலைவனமாக காட்சி அளித்தது. சுற்றிலும் முட்செடிகளை வேலியாக்கி, ஆடு, மாடு வராமல் பாதுகாத்திருந்தான்.

''கணேஷ்... சொல்றதுக்கு கஷ்டமா இருக்குப்பா... என் உறவுக்காரன் ஒருத்தன், இந்த வீடு வேணும்ன்னு ரொம்ப தொந்தரவு செய்றான். பிசினசுக்கு அர்ஜென்டா வீடு தேவைப்படுதாம்; அதனாலே...''

விஷயத்தை புரிந்து கொண்ட கணேசனின் முகம் வாடியது. ஆனாலும், சமாளித்து, ''வீடு என்னிக்கி வேணும்ன்னு சொல்லுங்க; அதுக்கு முன், ஒரு மாசம் டயம் குடுங்கய்யா, நான் வேற ஏற்பாடு செய்துட்டு போயிடுறேன்,'' என்று சொல்லி, காபி தந்து, மரியாதையுடன் அனுப்பினான்.

ஒரு வாரம் சென்றபின், அந்த பக்கமாக போனார் ராமையா. குழி தோண்டி செடிகளை நட்டுக் கொண்டிருந்தான் கணேசன்.

''என்னப்பா கணேஷ், என்ன செய்றே?''

''அருமையான மாஞ்செடி நாலு, ஒஸ்தி வெரைட்டி கிடைச்சுது; அதான் நட்டுகிட்டிருக்கேன்,'' என்றான்.

''நீதான் வீட்டை காலி செய்யப் போறியே... அப்புறம் ஏம்பா இப்படி கஷ்டப்படறே?'' என்று கேட்டார்.

''அதனால என்னய்யா... இந்த நிலம் உங்களுதோ, என்னுதோ இல்லயே...''

''என்ன கணேஷ் சொல்றே...'' என்றார், சற்று பதற்றத்துடன்!

''அய்யா... இந்த பூமி ஆண்டவன் படைச்சது; இதுல மனுஷன் தான் பாகம் பிரிச்சு, பங்கு போட்டுகிட்டான். காயையும், கனியையும் அனுபவிக்க போறது நானா, நீங்களா, அடுத்த தலைமுறையா என்பது இல்ல கேள்வி... நம்மால முடிஞ்ச அளவு மரம் வளத்து, பூமிய பசுமையா, செழுமையா ஆக்கணுங்கிறதுதான் முக்கியம். பசுமையான நாட்டிலதான், மழை பொழிவு ஜாஸ்தியா இருக்கும். அதனால, விளைச்சல் அதிகரிச்சு சுபிட்சம் ஏற்படும்.

''ஒவ்வொரு செடியையுமே குழந்தையா நினைச்சுத் தான் வளக்கிறேன். குழந்தையைக் கூட பத்து மாதம் சுமந்து, பல கஷ்டங்கள அனுபவிச்சுதான் ஒரு தாய் பெத்தெடுக்கிறா. ஆனா, ஒரு விதைய விதைச்சோ அல்லது செடியை நட்டோ தண்ணிய மட்டும் நாம ஊத்தினா போதும்; அது பாட்டுக்கு வளரும். நம்மளோட சோம்பல் காரணமா, அதைக்கூட நாம செய்றது இல்ல. வீட்டுல நாயி, பூனை வளர்க்கிற மனுஷன், ஏன் நாட்டு நலனுக்காக நாலு செடிய வளக்க கூடாது...

''செடிகள் துளிர் விட்டு, பூ பூத்து காய்த்து, கனியாகி வளர்ந்து நிற்பதைப் பார்க்கும் போது கிடைக்கும் சந்தோஷத்தை, காசு பணத்தால் அடைய முடியாது.

''நான் வீட்டை விட்டு போனாலும், இந்த செடிகொடிகளை விட்டு பிரிய மாட்டேன். இந்த என் புள்ளைங்களோட எனக்கிருக்கும் உறவை யாராலும் அறுக்க முடியாது. வாரா வாரம் வந்து பாத்துட்டு பராமரிச்சுட்டு போவேன். அதுக்கு நீங்க அனுமதிக்கணும்,'' என்றான்.

காபியை, அவர் முன், ஸ்டூலில் வைத்த அவன் மனைவி, மெல்லிய குரலில் சொன்னாள்... ''ஞாயித்துக் கிழமை கூட இவரு வீட்டில இருக்கிறதில்லங்க. இதுக்கு முன் நாங்க குடியிருந்த வீடுகள்ல இவரு வச்ச தோட்டத்தை பார்க்கப் போயிடுவாரு. பாத்தி சரியா இருக்கா; செடியெல்லாம் நல்லா வளருதான்னு பார்த்து, தண்ணி ஊத்திட்டு வருவாரு. உறவுக்காரங்க வீட்டு விசேஷங்களுக்கோ இல்ல பள்ளிக்கூட லீவுல பசங்களோட வெளியூருக்கு போனாக் கூட, இவருக்கு ரெண்டு நாளைக்கு மேல இருப்பு கொள்ளாது; செடிகளுக்கு தண்ணி ஊத்தணும்ன்னு கிளம்பிடுவாரு. எங்களுக்குத் தான் ஏமாற்றமா இருக்கும்...'' என்றாள்.

சிலை போல அமர்ந்திருந்தார் ராமையா. 'இப்படியும் ஒருவனா... தன் வாழ்க்கையையே தாவரங்களுக்காக அர்ப்பணிக்கும் இவன் எவ்வளவு பெரிய தியாகி...' என்று நினைத்தவர் கண்களில், நீர் பெருகியது.

''கணேஷ்... இங்க வாடா,'' என்றார் உரிமையுடன்!

அருகில் வந்தவனின் தோளை அன்புடன் அணைத்து, ''நீ ஏண்டா காலி செய்யணும்... இனிமே நான் இருக்கிறவரைக்கும், நீ தான்டா இங்கே இருக்கணும்,'' என்றார்.

''அய்யா... என்ன சொல்றீங்க...'' என்றான் நம்ப முடியாமல்!

''ஆமாண்டா... நீ போயிடுவியா... இல்ல நாந்தான் விடுவேனா...'' என்று கூறி சிரித்தவர், ''இனிமே நீ சில்லரை வேலைகளுக்கெல்லாம் போக வேணாம். பின் பக்கத்துல என்னோட நிலம் அஞ்சு ஏக்கர் இருக்கு; அதை பெரிய தோப்பா மாத்தணும். என்ன செலவானாலும் கொடுத்துடறேன். என்ன சம்பளம் வேணும்ன்னாலும் வாங்கிக்க. எவ்வளவு ஆளுங்கள வேணும்ன்னாலும் கூட்டிக்க. ஆனா, வாரம் ஒரு நாள், உன் குடும்பத்தாரோட கழிக்கணும்.

''பைத்தியக்காரா... செடி, கொடி பராமரிப்பு முக்கியம் தான், இல்லேங்கல... ஆனா, குடும்பத்தை பராமரிப்பது, அதை விட முக்கியம். இதை ஏண்டா நீ புரிஞ்சுக்கல... செடிக்கு தண்ணி ஊத்தற மாதிரி, குடும்பத்துக்கு அன்பு, அரவணைப்பு, பாசம்ன்னு தண்ணி ஊற்றி, அவங்க வாடிப் போயிடாம பாத்துக்கணும்,'' என்று கூறி விடை பெற்றவருக்கு, மனம் லேசாகி, புத்துணர்ச்சி ஏற்பட்டது.

அவர் போவதையே பார்த்தபடி நின்றான் கணேசன். அவனால் நடந்ததை நம்பவே முடியவில்லை.

அடுத்த நாள், செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் வேலையை, அவனுக்கு மிச்சமாக்கும் வண்ணம் வானம் லேசான தூறலாக ஆரம்பித்து, பின் வலுக்க ஆரம்பித்தது.

ஆர்.ரகோத்தமன்






      Dinamalar
      Follow us