
அன்புள்ள அம்மா —
என் வயது 43; மனைவியின் வயது 39. எங்கள் திருமணம் இரு குடும்பத்தினர் ஏற்பாடு செய்த திருமணம். தனியார் நிறுவனத்தில் கேஷியராக பணிபுரிகிறேன். எங்களுக்கு திருமணமாகி, 12 ஆண்டுகள் ஆகின்றன. நான் புது நிறம்; மனைவி கறுப்பு. என் உடன் பிறந்தோர் மூன்று பெண், இரு ஆண்; என் மனைவியின் உடன் பிறந்தோர் இரு தம்பிகள் மட்டுமே!
எனக்கு பெண் பார்க்கும் போது, என் தரப்பில் நான் என் வீட்டாரிடம் சொன்னது, 'பெண் கறுப்பா இருந்தாலும் பரவாயில்ல; நல்ல குடும்ப சூழ்நிலையில் வளர்ந்த பெண்ணாக இருக்கணும்...' என்று சொல்லி, ஆசைப்பட்டு திருமணம் முடித்தேன்.
என் மனைவி கல்லூரி பேராசிரியை; திருமணமான இரு ஆண்டுகளிலேயே எங்கள் இருவரின் பெற்றோரின் சண்டையால், தனிக்குடித்தனம் சென்று விட்டோம்.
என் மனைவி எல்லாரிடமும் சகஜமாக பழகுவாள். நான் மிகவும் சென்சிட்டிவ் மற்றும் ரிசர்வ்டு டைப். நான் உண்டு, என் வேலை உண்டு, வீடு உண்டு என்று இருப்பவன்.
நான் அவளிடம் பலமுறை, 'திருமணத்திற்கு முன், நீ எல்லாரிடமும் ஜாலியாக பழகியிருக்கலாம்; ஆனால், உனக்கு திருமணமாகி விட்டது. ஆள் பார்த்து பழகு...' என்று கூறியிருந்தேன். பெண்களை, தன் பேச்சில் மயக்கி, தன் வசம் இழுக்கக்கூடிய ஆண்களை பற்றி பல உதாரணங்களுடன் கூறியுள்ளேன். திருமணமான புதிதில், நான் ஏதாவது அதிர்ந்து பேசிவிட்டால், மூன்று நாட்கள் பேச மாட்டாள். அவள் செய்வது சரியென்று சொல்லி, பிரச்னையில் மாட்டி விடுவாள்.
கல்லூரி மாணவர்களை வீட்டிற்கு வரவழைப்பாள். ஒருமுறை, ஒரு மாணவன் வீட்டிற்குள் இருப்பதை பார்த்து, அப்பையனை வெளியே போகச் சொல்லி, என் மனைவியை கண்டித்தேன். 'நாம் காலனி வீட்டில் உள்ளோம்; மாணவர்கள் தேவையில்லாமல் வீட்டில் இருப்பதை பார்த்தால், நாலுபேர் தவறாக உன் மீது பழி போட்டு பேசி விடுவர், ஜாக்கிரதை...' என்று புத்திமதி கூறினேன். இதனால், அவள் மூன்று நாட்கள் என்னுடன் பேசவில்லை.
திருமணமாகாத அவளுடைய சொந்தக்காரப் பையன், நான் இல்லாத நேரம் பார்த்து வீட்டிற்கு வருவான். ஒரு முறை திடீரென்று நான் வீட்டுக்கு வந்த போது, அந்த பையன் வீட்டில் இருந்தான். அவன் போன பின், அவளை திட்டினேன். அதற்கும், மூன்று நாட்கள் பேசாமல் இருந்தாள். எவ்வளவு தான் புத்திமதி கூறினாலும், அதை ஏற்றுக் கொள்ளாமலே இருந்தாள்.
ஒருமுறை, அவசரமாக போன் செய்வதற்கு அவள் மொபைலை எடுத்தேன். அதில், ஒரு குறுஞ்செய்தி, 'அன்பு முத்தங்கள் என் செல்லக்குட்டிக்கு...' என்று, ஆண் பெயர் போட்டு வந்திருந்தது. என்னவென்று கேட்ட போது, 'ஏன் சந்தேகப்படுறீங்க... அவர் என்னுடன் வேலை செய்யும் ஆசிரியர்; என் அப்பா மாதிரி...' என்றாள். 'இப்படி குறுஞ்செய்தி எல்லாம் அனுப்ப கூடாதுன்னு சொல்...' என்றும், 'ஆண் நண்பர்களுடன் ஜாக்கிரதையாக பழகு; ஆபத்தில் மாட்டிக்கொள்ளாதே...' என்றும் எச்சரித்தேன். ஆனாலும், என் மனது, அந்த குறுஞ்செய்தியை சுற்றியே வந்தது. பைத்தியம் பிடித்தவன் போல இருந்தேன். பின், எனக்கு நானே மனதை திடப்படுத்தி, வாழ்க்கையை நகர்த்தினேன். இது நடந்தது இரு ஆண்டுகளுக்கு முன்!
கடந்த ஒரு மாதத்திற்கு முன், என் மொபைலில் பேலன்ஸ் இல்லாததால், அவசரத்திற்கு அவள் மொபைலை கேட்டேன். தயங்கியபடி கொடுத்தாள். போன் பேசி முடிக்கவும், ஒரு குறுஞ்செய்தி வந்தது. நான் தயங்கியபடி குறுஞ்செய்தியை பார்த்த போது, என் இதயம் ஒரு வினாடி துடிக்க மறந்தது. 'ஏய்... என்னடி இன்னிக்கு வர்றியா இல்லயா...' என்று ஒரு ஆணிடம் இருந்து வந்திருந்தது அந்த குறுஞ்செய்தி.
அதுபற்றி மனைவியிடம் கேட்டதற்கு, அவள் கூலாக, 'நாங்க சகஜமாக அப்படித்தான் பேசுவோம்; நீங்கள் தப்பாக அர்த்தம் புரிந்து கொள்ள வேணாம்...' என்றாள்.
எனக்கு வந்த கோபத்தில், அவளை பெல்டால் அடித்து விட்டேன். பின், 'இரு பிள்ளைகளுக்கு தாய் நீ, பொறுப்பான மனைவியாக, பிள்ளைகளுக்கும், சமுதாயத்திற்கும் எடுத்துக்காட்டாக விளங்க வேண்டியவள், பல நூறு பிள்ளைகளுக்கு ஆசிரியை, இப்படி செய்யலாமா...' என்ற வாக்குவாதத்தில், அவளுக்கும், எனக்கும் வார்த்தை தடித்தது.
'வார்த்தையால் இவ்வளவு நெருக்கத்தை அனுபவித்த நீ, உடலளவில் எவ்வளவு நெருக்கம் கொடுத்திருப்பாய். உடல் நெருக்கம் இருந்தால் தான் வார்த்தை நெருக்கம் வரும்...' என்று கூறி, 'விவாகரத்து வாங்கிக் கொள்வோம்...' என்றேன். இரண்டு நாட்கள் மனப்போராட்டத்திற்கு பின், அவளை அழைத்து, 'நம் சண்டையில் நம் பிள்ளைகள் இருவரும் பாதிக்கக்கூடாது; எனவே, நீ உன் இஷ்டப்படி வாழ்ந்து கொள். ஆனால், சமுதாயம் சிரிக்கும்படி வாழாதே...' என்று சொல்லி, மனதளவில் விலகினேன்.
சிலநாட்கள் கழித்து, என்னிடம் வந்து, 'நான் இனி தவறு செய்ய மாட்டேன்; என்னை ஏற்றுக் கொள்ளுங்கள்...' என்று அழுதாள்.
என் மனம் மாறி, அவளுடன் வாழ்ந்து வருகிறேன்.
ஆனால், அந்த இரு குறுஞ்செய்தியும், என் நினைவை விட்டு அகல மறுக்கிறது. தினமும், அந்த நினைப்பு வந்து என்னை ஆட்டிப் படைக்கிறது. 'என் மனைவி நல்லவளா, கெட்டவளா... இவளுடனா இத்தனை காலம் வாழ்ந்திருக்கிறேன்; என்னிடம் என்ன குறை... ஏன் இன்னொரு ஆணிடம் பழக்கம் வைத்திருக்கிறாள்! நல்ல குடும்பத்துப் பெண்கள் இப்படி இருக்க மாட்டார்களே...' என்று, எனக்குள் குழம்பியபடியே வாழ்வின் முடிவை, சோகத்துடன் எதிர்பார்த்து, நாட்களை நகர்த்தி வருகிறேன்.
அவளை பார்க்கும் போதெல்லாம், 'இன்னொரு ஆணிடம் நெருக்கம் வைத்து விட்டாளே...' என்று, என் மனம் அமைதியின்றி தவிக்கிறது.
மீதி வாழ்நாட்களை அமைதியுடன் கழிக்க, நல்ல பதில் தாருங்கள் அம்மா!
— தங்கள் அறிவுரையை எதிர்பார்க்கும்
உங்கள் மகன்.
அன்புள்ள மகனுக்கு, —
உன் மனைவிக்கு வந்த இரு குறுஞ்செய்திகள், உன்னை அல்லும், பகலும் துன்புறுத்துவதாக எழுதியிருக்கிறாய். இரு குறுஞ்செய்திகளும் சந்தேகத்துக்குரியவை தான்; இரண்டுக்குமே உன் மனைவி கூறியிருப்பது நொண்டி சமாதானம் தான். ஆனாலும், அவளை சந்தேகப்பட்டு, நீ அடித்தது சரியென ஒப்புக் கொள்ள மாட்டேன். அடிப்பது தவறு என்பது ஒரு பக்கம்; அடிப்பதால், தவறு செய்யும் நபரை மென்மேலும் தூண்டுவதாகி விடும்.
உன் மனைவி நல்லவளா, கெட்டவளா என்றால், சபல, சலன மயக்க குழப்பங்களில் அமிழும் நல்லவள். உன் மீது அவளுக்கு மிதமிஞ்சிய காதல் இருக்கிறது. எக்காலத்திலும், அவள் திருமண பந்தத்தை முறித்து, வெளியே பறந்து விட மாட்டாள். இரு குறுஞ்செய்திகளை வைத்து மட்டும், உன் மனைவி அன்னிய ஆணுடன் படுக்கையை பகிர்ந்திருப்பாள் என்கிற முடிவுக்கு வர இயலாது.
ஒரு ஆண் தரும் தாம்பத்ய சுகம், எத்தனை முழுமையானது என்பதை, அந்த ஆணின் மனைவி மட்டுமே அறிவாள். உன் தாம்பத்யம் குறைபாடானதா, முழுமையானதா என்பதை, உன் மனைவி தான் கூற வேண்டும்.
உன் கடிதப்படி பார்க்கையில், உன் மனைவி திருந்திவிட்டதாக தெரிகிறது. அதற்கு பின்பும் பழையவைகளை நினைத்து நீ பரிதவிப்பது அனாவசியம். உனக்கு, 11 வயதில் ஒரு பெண் குழந்தையும், 9 வயதில் ஒரு ஆண் குழந்தையும் இருக்கக் கூடும் அல்லது இரண்டுமே ஆண் குழந்தைகளாகவோ இல்லை இரண்டுமே பெண் குழந்தைகளாகவோ இருக்கக் கூடும். உன் குழந்தைகளின் நலனுக்காக, பழையவற்றை அசை போடுவதை நிறுத்து.
உன்னிடம் ஏதாவது குறைகள் இருந்தால் திருத்தி, மனைவியிடம் மனம் விட்டு பேசி பழகு. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, அருகில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்காவது குடும்பத்துடன் செல். மாதம் ஒருமுறை சினிமா பார்த்து, நல்ல ஓட்டலில் சாப்பிட்டு, வீடு திரும்புங்கள். பணி இடத்தில் இருந்து, உன் மனைவிக்கு தினமும் காதல் குறுஞ்செய்திகளை அனுப்பு. காலை, இரவு உணவை குடும்பத்துடன் சேர்ந்து அமர்ந்து உண். குடிப்பழக்கம் இருந்தால் குறை. வாழ்த்துகள்.
— என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத்

