தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/ஆச்சி மனோரமா (10)

ஆச்சி மனோரமா (10)

ஆச்சி மனோரமா (10)


PUBLISHED ON : மே 13, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 13, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உதயசூரியன் என்ற நாடகத்தை எழுதி, அதில் கதாநாயகனாக கருணாநிதி, நடிக்க, கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு மனோரமாவிற்கு கிடைத்தது.

ஆனால், அந்நாடகத்தில் நடிக்க முடியாமல் போய் விடுமோ என்ற அச்சம் மனோரமாவிற்கு ஏற்பட்டது. காரணம், அப்போது, அன்பு எங்கே? என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார், மனோரமா. அதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது.

மறுநாள், தேவகோட்டையில், உதயசூரியன் நாடகத்தின் அரங்கேற்றம்; மனோரமா இருந்ததோ சென்னையில்!

சூரியன் மறைந்த பின்னரும் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்ததால், ஆச்சிக்கு பதற்றம் அதிகரித்தது.

நேரம் ஆக ஆக, எங்கே தேவகோட்டைக்கு செல்ல முடியாமல் போய் விடுமோ என்ற பயம் ஏற்பட, என்ன செய்வதென்றே அவருக்கு புரியவில்லை.

இயக்குனரிடம் தன் நிலையை சொன்னார், மனோரமா.

ஆனால், அவரோ, 'இதோ இன்னும் கொஞ்ச நேரத்தில் ஷூட்டிங் முடிஞ்சிரும்; நீங்க போயிரலாம்...' என்று சொல்லிக் கொண்டே இருந்தார். ஆனாலும், படப்பிடிப்பு முடிவதாக இல்லை.

இனிமேல் ரயிலை பிடிப்பது முடியாது என்ற நிலை ஏற்படவே, 'கருணாநிதி என்ன நினைப்பார்... அவரோடு இணைந்து நடிக்கும் ஒரு நல்ல வாய்ப்பு பறிபோகிறதே...' என்ற கவலை, அவருள் பெரிதாக எழுந்தது.

ஆனால், இவருடைய கவலை, வருத்தம், பதற்றம் போன்றவற்றை பற்றியெல்லாம் படக்குழுவினர் கண்டுகொள்ளவே இல்லை. நள்ளிரவு வரை படப்பிடிப்பு நடந்தது.

கவலையும், ஏமாற்றமுமாக ஒரு மூலையில் அமர்ந்து விட்டார்.

சிறிது நேரத்தில், மனோரமாவின் அருகே வந்த இயக்குனரும், தயாரிப்பாளரும், 'தேவகோட்டைக்கு போக முடியலயேன்னு கவலையா இருக்கீங்களா?' என்று, கேட்டனர்.

அதற்கு பதில் சொல்ல முடியாமல் அழுது விடுபவர் போல் காணப்பட்டார், மனோரமா.

'ஒண்ணும் கவலைப்படாதீங்க... நீங்க தேவகோட்டைக்கு போறீங்க; கருணாநிதியோட நாடகத்தில் நடிக்கிறீங்க...' என்றனர்.

'நாளைக்கு ராத்திரி தான் ரயில் இருக்கு; அப்புறம் எப்படி போறது?' என்றார், சிறிது கோபத்தோடு மனோரமா.

'ரயில் இல்லன்னா என்ன... கார் தான் இருக்கே...' என்றனர் நமட்டு சிரிப்புடன்!

முதலில் புரியாமல் விழித்தாலும், பின், உண்மை புரிந்து, மகிழ்ந்தார்.

மனோரமாவிற்கு தனியாக, ஒரு காரையே ஏற்பாடு செய்து விட்டனர்.

மறுநாள், தேவகோட்டைக்கு அவரை காரில் அனுப்பி வைத்தனர்.

அன்றைய காலகட்டத்தில், கார் ஏற்பாடு செய்வது என்பது அத்தனை எளிதானதல்ல. அதனால், சந்தோஷத்தின் உச்சிக்கே சென்று விட்டார், மனோரமா.

பின், உதயசூரியன் நாடகத்தில், கருணாநிதிக்கு ஜோடியாக நடித்து, அவரிடம் நல்ல பேரையும் வாங்கினார். ஐம்பதுக்கும் மேற்பட்ட தடவை அந்த நாடகத்தில் நடித்தார், மனோரமா.

வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் மறக்க முடியாத அனுபவங்கள் சில இருக்கத்தான் செய்யும்; அப்படித்தான் மனோரமாவிற்கும் மறக்க முடியாத சில அனுபவங்கள் உண்டு. அதில் இதுவும் ஒன்று...

பொதுவாக, தொழிலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார், மனோரமாவின் தாய், ராமமிர்தம். எப்பேர்பட்ட இடைஞ்சல்கள் வந்தாலும், தொழிலை விட்டுவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பார். ஏனென்றால், தொழில் தான் சோறு போடுகிறது; சோறு இல்லையென்றால், மனிதனால் வாழவே முடியாது என்பார்.

சிவாஜி கணேசன், சரோஜா தேவி நடித்த, பாலும் பழமும் படத்தில், மனோரமாவிற்கு மிகச்சிறிய பாத்திரம்.

மறுநாள், மனோரமா நடிக்க வேண்டிய காட்சி படமாக்கப்பட இருந்தது. முதல் நாள் இரவு, மனோரமாவிற்கு நல்ல காய்ச்சல்; அதனால், மாத்திரையை விழுங்கி, துாங்கி விட்டார்.

மறுநாள் படுக்கையை விட்டு எழுந்திருக்கவே முடியவில்லை; உடம்பு அனலாக கொதித்தது.

நெற்றியில் கை வைத்து பார்த்தார், ராமமிர்தம். ஆங்காங்கே, முத்து முத்தாக அம்மை போட்டிருந்தது.

முக்கியமான ஷூட்டிங் வேறு; என்ன செய்வது என்று ஒன்றும் புரியவில்லை.

அதற்குள், படப் பிடிப்பிற்கு அழைத்து செல்வதற்காக கார் வந்து விட்டது; முடியாது என்று காரை திருப்பி அனுப்பினால், நன்றாக இருக்காது.

'என்னால் எழுந்திருக்கவே முடியல; ஷூட்டிங்குக்கு எப்படிம்மா போறது?' என்று கவலையோடு கேட்டார், மனோரமா.

'தொழில் தான் முக்கியம்; யாரிடமும் இதைப் பற்றி எதுவும் சொல்ல வேணாம்; பேசாமல் புறப்பட்டு செல்வோம்...' என்றார், ராமமிர்தம்.

அம்மா சொன்னால் மறுப்பு சொல்ல முடியுமா... உடை மாற்றி, காரில் ஏறி புறப்பட்டனர்.

பரபரப்பாக இருந்தது, ஸ்டுடியோ. வழக்கம்போல மனோரமாவிற்கு, 'மேக் அப்' போடுவதற்கு தயாரானார், 'மேக் அப்' மேன் ரங்கசாமி.

முகத்தில் கையை வைத்தவர், 'ஷாக்' அடித்தவர் போல சட்டென்று கையை எடுத்து, 'என்னம்மா, உடம்பு இப்படி அனலா சுடுது; 'மேக் அப்' போடவே முடியாது...' என்று மறுத்து விட்டார்.

இதைப் பார்த்ததும், பதறிப்போனார், ராமமிர்தம். உடனே, நடிகை சுந்தரி பாயை பார்த்து, மனோரமாவின் உடல்நிலையை பற்றி விளக்கினார், ராமமிர்தம்.

பதறிப்போய் அங்கே வந்த சுந்தரி பாய், 'மேக் அப்'மேனை வெளியே போகச் சொல்லி, மனோரமாவின் உடம்பை பார்த்தார். உடல் முழுவதும் அம்மை போட்டிருப்பது தெரிந்ததும், அவரின் பதற்றம் மேலும் அதிகமானது.

உடனே வேகமாக சென்று, தயாரிப்பாளர், ஜி.என்.வேலுமணியிடம் விஷயத்தை சொன்னார்.

பதற்றத்துடன் அங்கே விரைந்து வந்தவர், 'ஏம்மா, அம்மை போட்டிருக்கும் போது எதுக்காக வந்தீங்க... சொல்லியிருக்க வேண்டியது தானே... நாங்க என்ன அரக்கர்களா... வந்துதான் ஆகணும்ன்னு சொல்லிடுவோமா... நாங்களும் மனுஷங்க தான்; முதல்ல வீட்டுக்கு போய் நல்லா ரெஸ்ட் எடுங்க...' என்று சொல்லி, உடனடியாக காரில், அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.

மனோரமா மட்டுமல்ல, அன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான கலைஞர்கள் இப்படித்தான் கலையை, உயிருக்கும் மேலாக நேசித்தனர். நேரம் தவறாமை, கடமை உணர்வு, கடின உழைப்பு என்று தொழிலுக்காக தங்களை அர்ப்பணித்தனர்.

ஆனால், இன்று?

மனோரமாவை சிறந்த குணசித்திர நடிகையாக, மக்கள் மனதில் அழுத்தமாக பதிய வைத்த படம், தில்லானா மோகனாம்பாள்; நகைச்சுவை கலந்த அற்புதமான குணசித்திர பாத்திரம்.

பிரபல நட்சத்திரங்களுக்கு மத்தியில் சிறப்பாக, 'ஜில் ஜில் ரமாமணி'யாக நடித்து, பேரும் புகழும் அள்ளிக் கொண்டார்.

— தொடரும்

நன்றி: சங்கர் பதிப்பகம், சென்னை.

www.shankar_pathippagam@yahoo.com

- குன்றில் குமார்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us