தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : மே 13, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 13, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கொடைக்கானல் ஏரியை சுற்றி, சுற்றுலா பயணிகள் குதிரை சவாரி செய்ய, வாடகைக் குதிரைகள் கிடைக்கும். குதிரையின் சொந்தக்காரர்கள் பயணிகளுக்குத் துணையாக, குதிரையின் கடிவாளத்தைப் பிடித்தபடி நடந்து வருவர்; - அது, ஒரு காலம். சமீபத்தில் பார்த்த காட்சி, - நடைக்குப் பதில் சைக்கிளில் செல்கின்றனர்.

மிக நீண்ட நாட்களாகவே, முறையாக குதிரை சவாரி பழக வேண்டும் என்ற ஆவல்... ஒருமுறை, கொடைக்கானலில் குதிரை சவாரி செய்யும் போது, குதிரை, என்னை கீழே தள்ளி விட்டதே இதற்கு முக்கிய காரணம்.

'குதிரை சவாரி என்ன குதிரை கொம்பா' என்ற நினைப்பில், குதிரையோட்டியை, 'உடன் வர வேண்டாம்' எனக் கூறி, தனியாளாகப் போன போது நடந்த விபரீதம் இது!

சென்னை வந்த உடன், இதுபற்றி விஷயம் தெரிந்த ஒருவரிடம், என் விருப்பத்தைத் தெரிவித்தேன்.

பின், திருமண விழா ஒன்றுக்கு, நண்பர் ஒருவருடன் சென்றிருந்த போது, பெண் - ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவருடன் வந்த அம்மையாரை அறிமுகம் செய்து, அவர் சென்னை ரேஸ் கோர்சில் முக்கிய பணியில் இருப்பதாக கூறினார்.

அறிமுகப்படலம் முடிந்து, அந்த அம்மையார் சென்று விட்ட நிலையில், என் குதிரை சவாரி ஆசையைக் மீண்டும் நண்பரிடம் கூறினேன். அடுத்த இரண்டாவது நாளில், ரேஸில் குதிரை ஓட்டிய முன்னாள் ஜாக்கி ஒருவரை அறிமுகம் செய்தார், நண்பர்.

அவரிடம் பேசிக் கொண்டிருந்த போது தெரிந்து கொண்டவை:

குதிரை சவாரியில் முதலில் நடை; பின், துரித நடை; அதன் பின், அலை போன்ற மெல்லோட்டம்; இறுதியாக பாய்ச்சல்... ஆகிய நான்கு வகைகள் உள்ளன.

ஓட்டம் பழகிய பின், உயரத் தாண்டுதல், நீளம் தாண்டுதல் முதலியவை பயிற்றுவிக்கப்படும்.

குதிரை சவாரிக்கு ஆசைப்படுவோரில் இரண்டு வகை உண்டு; முதல் வகையினர், ஆரம்பத்தில் வேடிக்கை பார்ப்பர்; பின், விருந்தினராகச் சவாரி செய்து பார்ப்பர். தங்களால் முடியும், நேரமிருக்கும் என்று நிச்சயம் செய்து கொண்ட பின் உறுப்பினராவர். பின், நாள் தவறாமல் வருவர்.

அடுத்த வகையினர் அப்படியல்ல; தடபுடலாக, 'செக்' தந்து, உறுப்பினர் ஆவர். பல ஆயிரம் ரூபாய் செலவில் உடை தைப்பர். ஆனால், பத்தே நாளில், 'அம்பேல்' ஆகி விடுவர்.

குதிரை சவாரியின் போது விபத்துகள் நேரிடாமல் இருக்க, குதிரையின் மீது ஆதிக்கம் செலுத்தும் கலையைப் படிக்க வேண்டும். அதற்கு, மனோ திடம், உடல் வலு, சமயோசிதம் எல்லாம் தேவை.

குதிரை எவ்வளவு துள்ளினாலும், பிடிமானமும், திறமையும் உள்ளோர் கீழே விழ மாட்டார்கள்.

பொதுவாக, குதிரை துள்ளினால், முழங்கால்களால் கிடுக்கிப் பிடியாகப் பற்றி கொள்ள வேண்டும்.

வெறித்தனமாகக் குதிரை ஓட ஆரம்பித்து விட்டால், அதுவாகவே, ஓடி நிற்கும் வரை ஒன்றும் செய்யக் கூடாது.

இத்தனையும் தெரிந்து கொண்ட நான் முதல் வகையா, இரண்டாவது வகையா என்பதை பிறகு சொல்கிறேன்!

பெங்களூரில், மருத்துவமனை நடத்தி வரும் நண்பர் ஒருவர், அறுவை சிகிச்சை நிபுணர்.

எனக்கு கடிதம் எழுதி, புகைப்படம் ஒன்றும் அனுப்பியிருந்தார். கடிதம் இதோ:

சென்ற வாரத்தில் ஒருநாள், என் மருத்துவமனைக்கு வந்த ஒருவர், தான், 10 ஆண்டுகள் சவுதி அரேபியாவில், ஒரு மருத்துவமனையில் வேலை பார்த்ததாக கூறினார். அப்போது, தான் தங்கி இருந்த அறைக்கு அருகில், ஒரு பிலிப்பைன்ஸ் நாட்டு நர்ஸ் தங்கி இருந்ததாகவும், அவரிடம் உறவு வைத்திருந்ததாகவும், அந்த நர்ஸ், அவரது ஆண் உறுப்பின் தோலின் அடியில் நான்கு கற்களை பதித்து விட்டதாகவும் கூறினார்.

அவரை பரிசோதித்த போது தோலுக்கடியில் நான்கு கற்கள் இருந்தன.

எதற்காக அது பதிக்கப்பட்டது என்று கேட்ட போது, அவர் கொடுத்த பதில் அதிர்ச்சியூட்டும்படி இருந்தது.

பெண்களுக்கு உணர்ச்சி அதிகரிப்பதற்காக, இப்படி கற்களை பதிப்பது, பிலிப்பைன்ஸ் நாட்டு ஆண்களின் வழக்கம் என்றும், சில ஆண்கள், உறுப்பு முழுவதும் கற்களை பதித்து கொள்வர் என்றும் அந்த நர்ஸ் கூறியதாகச் சொன்னார்.

அந்த கற்களை, அறுவை சிகிச்சை மூலம் எடுத்தேன்.

மருத்துவ உலகில், இது போல கேள்விப்பட்டதே இல்லை; இது பற்றி சில டாக்டர்களிடம் பேசியபோது, அவர்களும் ஆச்சர்யமடைந்தனர்.

- இவ்வாறு எழுதியுள்ளார். மனித வக்கிரங்களுக்கு எல்லையே இல்லை போலும்!

கி.வா.ஜ., எழுதிய கட்டுரை ஒன்றைப் படிக்க நேர்ந்தது; அதில்...

வால்மீகி ராமாயணத்தை சொல்லிக் கொண்டிருந்தார், ஒரு பெரியவர். ஊர்க்காரர்கள் கீழே உட்கார்ந்து, ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தனர். ஓர் ஓரத்தில் நின்று, அதைக் கேட்டுக் கொண்டிருந்தார், கம்பர். அவர் கவிச் சக்கரவர்த்தி ஆகாத காலம் அது.

கதையில், சீதாபிராட்டியை ராவணன் துாக்கிச் செல்லும் கட்டம்... ராவணன், ஒரு கையால் சீதையின் தலையையும், மற்றொரு கையால், காலையும் பற்றித் துாக்கிச் சென்றான் என்று, வால்மீகி முனிவர் பாடியிருப்பதை விரிவாக எடுத்துரைத்தார், கதை சொல்பவர்.

ஒவ்வொரு நாளும், ராமனது கதையை கேட்கும் மக்கள், வீட்டுக்குப் போகும் போது தாம் கேட்டவற்றைப் பற்றிப் பேசியபடி போவர். முறையாக விமர்சனம் செய்ய தெரியாவிட்டாலும், எந்தப் பகுதி அவர்கள் உள்ளத்தில் அழுத்தமாகப் பதிந்ததோ, அதைப் பற்றி பேசுவர்; அவர்களுடைய பேச்சையும் கவனிப்பார், கம்பர்.

அன்றும், கதை முடிந்ததும், போகும் போது அவர்கள் பேசிக் கொண்டது கம்பர் காதில் விழுந்தது... 'ராவணன், சீதையை அப்படித் துாக்கிப் போனானே... பாவி, தொடும்போதே அவன் தலை வெடித்திருக்கக் கூடாதா... சீதையை அவனால் அணுகவே முடியாமல் இருந்தால் எப்படி இருக்கும்...' என்று அவர்கள் பேசியபடி போயினர்; அவர்கள் ஆசை அது!

வால்மீகி காலத்துக்குப் பின், மக்களின் மனோபாவம் மாறி விட்டது; அதனால், கம்பர் காலத்து மக்களுக்கு இப்படி ஒரு விருப்பம் தோன்றியது.

பல காலமாகவே, வால்மீகி ராமாயணத்தை கேட்டுக் கேட்டு சுவைத்தவர் கம்பர்; ஆராய்ச்சியும் செய்தவர். தமிழில் ராமாயணத்தைப் பாட வேண்டும் என்ற ஆசை அவருக்கு உண்டாயிற்று.

சங்க காலத்தில் இருந்த ராமாயணம் வழக்கொழிந்து போயிற்று; பின் தோன்றிய ஜைன ராமாயணமும் மக்களிடையே வழங்கவில்லை. அதனால், ராம கதையை, தமிழ் காப்பியமாக அமைக்கும் ஆர்வம் அவருக்குள் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்தது.

அவர் காலத்துக்கு முன், பலருக்கு உபாஸனா தெய்வமாகி விட்டான், ராமன். தனியே ராமனுக்கு கோவில்கள் எழுந்தன. ஆதலில், அவனை தெய்வமாக, லட்சிய நாயகனாக, குறைபாடில்லாதவனாக வைத்துப் பாடத் துவங்கினார்.

பல இடங்களில் காலத்துக்கு ஏற்ற வகையில், கதையில் சில மாற்றங்களைச் செய்தார்; தமிழ் மரபையும் ஏற்ற இடங்களில் பொருத்தினார். சீதையை, ராவணன் நிலத்தோடு பெயர்த்துச் சென்றதாக எழுதினார்.

வாலியின் மனைவி தாரகி, சுக்ரீவன் மாளிகையில் கைம்மை நோற்புடையவளாக வாழ்கிறாள். சீதையின் மனதை மாற்ற, மாயா சனகனைப் படைக்கிறான், ராவணன். இப்படி, சில மாற்றங்களை அமைத்து, சில புதிய நிகழ்ச்சிகளையும் கூட்டி, ஆறு காண்டங்களையும் பாடினார்.

- 'சரி, எதை எடுத்துக் கொள்வது... எதை விடுவது...' மனம் குழம்ப, 'உன் அறிவுக்கு எட்டாத விஷயங்களில், ஏன் மூக்கை நுழைக்கிறாய்?' என, இன்னொரு மனம் கேட்க... 'உண்மை தானே...' என்றபடி புத்தகத்தை மூடினேன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us