sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஏப்ரல் 07, 2026 ,பங்குனி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

ஆச்சி மனோரமா! (7)

/

ஆச்சி மனோரமா! (7)

ஆச்சி மனோரமா! (7)

ஆச்சி மனோரமா! (7)


PUBLISHED ON : ஏப் 22, 2018

Google News

PUBLISHED ON : ஏப் 22, 2018


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி விழாவில் கலந்து கொள்ள முடியாமல் போனது மனோரமாவிற்கு வருத்தமாக இருந்தது. அப்போது, அங்கு வந்திருந்த ஒருவர், 'உங்களுக்கு என்னை யார்ன்னு தெரிகிறதா?' என்று கேட்டார். இப்படி யாராவது கேட்டால், மனோரமாவிற்கு பதற்றமும், கோபமும் வந்து விடும்.

காரணம், நினைவாற்றல் திறன், சராசரி மனிதர்களை விட மனோரமாவிற்கு குறைவு.

சில ரசிகர்கள் எப்போதோ ஒருமுறை அவரை சந்தித்து பேசி இருப்பர்; கூடவே, புகைப்படம் எடுத்திருப்பர். அதன்பின், இதேபோல நுாற்றுக்கணக்கான ரசிகர்களை சந்தித்திருப்பார்; அவர்களோடு பேசியும் இருப்பார். அத்தனை பேரையும் நினைவில் வைத்துக் கொள்வது முடியாது. ஆனால், இதை ரசிகர்கள் புரிந்து கொள்வதில்லை. மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் போது, 'என்னை யாரென்று தெரிகிறதா?' என்ற ஆர்வமாக கேட்பார்.

எப்படி நினைவிருக்கும்!

யாரென்று கண்டுபிடிக்க முடியாமல் திணறுவார்.

ஆனால், அந்த ரசிகரோ இவரது இயலாமையை புரிந்து கொள்ளாமல், பிரபலமாகி விட்டதால் தெரியாதவரை போல் நடிப்பதாக நினைத்து, கோபம் கொள்வார்.

இப்படிப்பட்ட அனேக சம்பவங்களை அனுபவித்திருக்கிறார், மனோரமா. அப்படித்தான் இவரும் எப்போதோ சந்தித்திருக்கிறார் போலும்; இப்போது வந்து, 'என்னை தெரிகிறதா?' என்று கண்டுபிடியுங்கள் விளையாட்டை நடத்துகிறார் என்றே நினைத்தார், மனோரமா.

சிறிது நேரம் அவரை கூர்மையாக பார்த்தார். எங்காவது, எப்போதாவது சந்தித்தது உண்டா என்று மூளையை கசக்கிப் பார்த்தார். நினைவிற்கு வரவே இல்லை.

'தப்பா நெனச்சுக்காதீங்க, உங்கள யாருன்னே தெரியல; நீங்க யாருன்னு சொன்னா தெரிஞ்சுக்கறேன்...' என்றார். உடனடியாக பதில் சொல்லாமல் சிறிது நேரம் மவுனமாக இருந்த அவர், பின், 'நான் தான் பால்ராஜ்...' என்றார், மெல்ல!

அந்த பெயரை கேட்டதும், துாக்கி வாரிப்போட்டது, மனோரமாவிற்கு!

'என்ன சொல்றீங்க... எலக்ட்ரீஷியன் பால்ராஜா...' என்று நம்ப முடியாத ஆச்சரியத்தோடு கேட்டார்.

முப்பது ஆண்டுகளுக்கு பின், இப்போதுதான் அவரை மீண்டும் பார்க்கிறார், மனோரமா. உருவத்தில் நிறைய வித்தியாசம்; அப்போது பார்த்த சாயல் கொஞ்சம் கூட இல்லாத இயற்கையின் அற்புதமான மாற்றங்கள்.

தன் வாழ்வின் நம்பவே முடியாத இந்த முன்னேற்றத்திற்கு, துவக்கப் புள்ளி வைத்த மகராஜன். அவரை அடையாளம் தெரியாமல் போனது மனோரமாவை வெட்கப்படவும், வேதனைப்படவும் வைத்தது.

அவமானத்தில் கூனிக்குறுகிப் போனாலும், தன் வாழ்வில் விளக்கேற்றி வைத்தவர், தன்னை முதலிலேயே அறிமுகப்படுத்திக் கொள்ளாமல், இவ்வளவு நேரம் மவுனமாக இருந்து, கிளம்பும் சமயத்தில் தான் யாரென்று கூறியது கோபத்தை ஏற்படுத்தியது.

'நான் யாருன்னு உங்களுக்கு தெரிஞ்சிருந்தும், எதுக்காக இவ்வளவு நேரம் உண்மையை சொல்லாம இருந்தீங்க?' உரிமையினால் ஏற்பட்ட கோபத்தோடு கேட்டார், மனோரமா.

அதற்கு எந்த பதிலும் கூறாமல் பேசாமல் நின்றார், பால்ராஜ்.

'உங்கள யாருன்னு அடையாளம் தெரிஞ்சும், தெரியாதது போல நான் நடந்திருந்தா, அது, என்னோட குற்றம்; ஆனா, உண்மையிலேயே உங்கள அடையாளம் தெரியாமத் தான் இருந்தேன். அப்படி இருக்கிறப்ப, நீங்களே யாருன்னு சொல்லியிருந்தா எவ்வளவு சந்தோஷபட்டிருப்பேன். ஏன் அப்படி இருந்தீங்க?' என்றார்.

அதற்கு பதிலேதுவும் சொல்லாமல் அமைதியாக நின்றார், பால்ராஜ்.

'முப்பது வருஷத்துக்கு முன், நீங்க இப்படியா இருந்தீங்க... உங்க தோற்றம் ஒட்டுமொத்தமா மாறிப் போயிருக்கு. அப்புறம், நான் எப்படி உங்கள அடையாளம் தெரிஞ்சுக்க முடியும்... இந்த சாதாரண உண்மையை கூட புரிஞ்சுக்காம, என் மனசை நோகடிச்சிட்டிங்களே...' என்று வேதனையோடு குமுறினார்.

அப்புறம் சிறது நேரம் அவர் மற்றும் அவரது குடும்பத்தைப் பற்றி விரிவாக கேட்டு, பழைய கதைகளை கொஞ்ச நேரம் பேசினார். பின், விடைபெற்று சென்றார், பால்ராஜ்.

'வாழ்க்கையில் யாரை மறக்கக் கூடாது என்று நினைத்தேனோ, அவரை மறந்து விட்டவள் அல்லது தெரியாதவள் போல் நடிக்கிறாள் என்று மற்றவர்கள் நினைக்கும் விதத்தில் நடந்து கொண்டு விட்டேனோ...' என்று நினைத்தபோது, மனோரமாவின் உடம்பு ஆடிப்போய் விட்டது.

இதை நினைத்து, பல நாட்கள் அவர் சங்கடத்தில் ஆழ்ந்தார்.

நிறைய நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்ததால், 'நாடக உலக ராணி' என்று புகழ்ந்து பேசும் அளவிற்கு, ஒரு வலுவான இடத்திற்கு உயர்ந்திருந்தார், மனோரமா.

இத்தருணத்தில், மிகப் பிரபலமான நாடக குழு ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு அவரை தேடி வந்தது.

அன்றைய காலகட்டத்தில், பிரபலமான நாடக கம்பெனியாக இருந்தது, ராமபால கான சபா. நடிகர் முத்துராமன், குலதெய்வம் ராஜகோபால், வைரம் கிருஷ்ணமூர்த்தி, மணிநாதன் போன்றோர் அந்த சபாவில் இணைந்திருந்தனர். பின், சில கருத்து வேறுபாடு காரணமாக, ராம பால கான சபாவில் இருந்து பிரிந்து, 'கலைமணி நாடக சபா' எனும் புதிய நாடகக் குழுவை துவக்கினர்.

இப்புதிய நாடக கம்பெனியில், ஏற்கனவே, ஒரு கதாநாயகி இருந்தார்; இன்னொரு கதாநாயகி அவர்கள் நாடகத்திற்கு தேவையாக இருந்தது. அது, மிக முக்கியமான வேடம் என்பதால், நடிகையை தேடி, வலைவீசிக் கொண்டிருந்தனர்.

இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக, மனோரமாவை தேடி, நடிகர் முத்துராமனும், வைரம் கிருஷ்ணமூர்த்தியும் நேரில் வந்தனர்.

அந்த நாடத்தின் பெயர், புயலுக்கு  பின்! கொடுமுடியில் மறுநாள் நடக்க இருப்பதாகவும், உடனே கிளம்ப வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

சிறிது நேர யோசனைக்கு பின், மனோரமாவின் தாய், அதற்கு சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து அவர்களுடன் மனோரமாவும், அவரது தாயாரும் கிளம்பினர்.

நேராக, திருமயம் எனும் ஊரை அடைந்து, அங்கிருந்து ரயிலை பிடித்தனர். ரயிலில் அமர்ந்த பின், மனோரமா பேசி, நடிக்க வேண்டிய நாடகத்தின் வசனப் பகுதி என்று ஒரு நோட்டை கொடுத்தனர்.

அதை பிரித்து பார்த்த மனோரமா, தலைசுற்றி விழாத குறைதான்; அவர் பேச வேண்டிய வசனங்கள் மட்டும் மொத்தம் நுாறு பக்கங்கள் இருந்தன. நாளை மாலை நாடகம்; அதற்குள், அவை அனைத்தையும் மனப்பாடம் செய்துவிட வேண்டும். மனப்பாடம் மட்டும் செய்தால் போதுமா... ரிகர்சல் வேறு எடுக்க வேண்டும். எனவே, காலைக்குள் வசனத்தை மனப்பாடம் செய்தால் மட்டுமே இது முடியும்.

அதற்குள், நுாறு பக்க வசனத்தையும் மனப்பாடம் செய்வது சாத்தியமா... பயம் ஏற்பட்டது.

ஆனாலும், இதிலிருந்து இனிமேல் பின்வாங்க முடியாது; நடிப்பதற்கு ஒப்புக்கொண்டு, ரயிலில் ஏறியாகி விட்டது. எனவே, நடித்துதான் ஆகவேண்டும். அப்படியானால், வசனம் முழுவதையும் மனப்பாடம் செய்தே ஆகவேண்டும்.

மனதில் உறுதியை எடுத்து, நோட்டை புரட்டினார். காலையில் கொடுமுடியை அடைந்தபோது, நுாறு பக்க வசனத்தையும் மனப்பாடம் செய்திருந்தார். அப்படியே நாடகத்தில் பாட வேண்டிய பாடல்களையும் மனப்பாடம் செய்து முடித்திருந்தார்.

வசனத்தை அதற்கேற்ப, ஏற்ற இறக்கங்களுடன் பேசியும், நன்றாக பாடியும் முடித்தார். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது; சில நாட்கள் தொடர்ந்து வெற்றிகரமாக நாடகம் நடந்தது.

தொடரும்.

நன்றி: சங்கர் பதிப்பகம் சென்னை.

www.shankar_pathippagam@yahoo.com

- குன்றில் குமார்







      Dinamalar
      Follow us