sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஏப்ரல் 07, 2026 ,பங்குனி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பா.கே.ப.,

/

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : ஏப் 22, 2018

Google News

PUBLISHED ON : ஏப் 22, 2018


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒரு மரத்தில், பிரம்ம ராட்சசன் ஒருவன் இருந்தான். அந்த மரத்துக்கு கொஞ்ச துாரத்தில், கோவில் ஒன்று இருந்தது. அதில், ஒரு நாதசுரக்காரன் தினம் வாத்தியம் வாசிப்பான். அபஸ்வரக் களஞ்சியமான அவனுடைய வாசிப்பைக் கேட்டு, துடியாய்த் துடிப்பான், அந்தப் பிரம்ம ராட்சசன்.

ராட்சசனுக்கு ஒரு சாபம்... அந்த மரம் விழுகிற வரையில் அதிலேயே அவன் தலைகீழாய் தொங்க வேண்டும். மரம் விழுந்தால் எங்கேயாவது போய், யாரையாவது பிடித்துக் கொள்ளலாம்.

ஒருநாள், ஓர் ஏழைப் பிராமணன் அந்த மரத்தின் கீழ், நிழலுக்கு தங்கினான்.

'ஓ... பிராமணா... எனக்கு ஓர் உபகாரம் செய்தால், உன் தரித்திரம் நீங்க வழி சொல்கிறேன்...' என்றான் பிரம்ம ராட்சசன்.

அலறி அடித்தபடி எழுந்த பிராமணன், பின், சமாளித்து, 'என்ன உபகாரம் செய்ய வேண்டும்?' என்று கேட்டான்.

'உங்கள் ஊர் நாதசுரக்காரனுடைய வாசிப்பை என்னால் கேட்க முடியவில்லை; சித்ரவதையா யிருக்கிறது. இந்த மரத்தை வெட்டித் தள்ளி விடு; நான் ஓடிப் போகிறேன்...' என்றான்.

அப்படியே செய்தான் பிராமணன். பிரம்ம ராட்சசன் போகும் போது, 'நான், அங்கதேசத்து ராஜாவின் பெண்ணைப் போய் பிடித்துக் கொள்கிறேன்; நீ வந்தாயானால் உடனே ஓடிப் போய் விடுகிறேன். ராஜா, உனக்கு வேண்டிய சன்மானம் செய்வான். ஜாக்கிரதை! ஒரே ஒரு தடவைதான் உன்னைப் பார்த்ததும் ஓடுவேன்; இன்னொரு தடவை வந்தால், அறைந்து கொன்று விடுவேன்...' என்றான்.

அதன்படியே, அங்கதேசத்து ராஜாவின் பெண்ணைப் பிடித்திருந்த பிரம்ம ராட்சசனை ஓட்டி, பணக்காரன் ஆனான், பிராமணன். பின், பிரம்ம ராட்சசன் வங்கதேசத்து ராஜகுமாரியைப் பிடித்தான்.

வங்க நாட்டு ராஜா, அங்கதேசத்து ராஜாவுக்கு, அந்த பிராமணனை அனுப்பும்படி ஓலை விடுத்தான். பிராமணன் எவ்வளவோ தடுத்துச் சொல்லியும் கேளாமல், அவனை ராஜகுமாரியிடம் கொண்டு போயினர்.

'அடே பிராமணா... என் பேச்சை மீறி மறுபடியும் வந்தாயா?' என்று பிரம்ம ராட்சசன் பிடித்திருந்த ராஜகுமாரி இரைந்து, கையை ஓங்கி அறைய வந்தாள்.

'ஐயோ... இல்லை... நான் வந்தது வேறு விஷயம்... அந்த நாதசுரக்காரன் இந்த ஊருக்கு வந்திருக்கிறான்; அதைச் சொல்லத்தான் வந்தேன்...' என்றான் பிராமணன்.

'ஐயையோ!' என்று அலறி, ராஜகுமாரியை விட்டு ஓடிப் போனான், பிரம்ம ராட்சசன்.

- கதையைக் கேட்டு முடித்ததும், அந்த நாதசுரக்காரனை, உடனே தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் போலத் தோன்றியது. இங்கே சிலரை, அதே பிரம்ம ராட்சசன் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறான்.

'பத்திரிகை.காம்' என்ற, இணைய தள ஆசிரியர், எஸ்.வி.எஸ்.சோமுவுக்கு, அந்துமணி அளித்த முதல் சிறப்பு பேட்டி:

லட்சோப லட்சம் வாசகர்களின் ஆதர்ச நாயகன், அந்துமணி; தன் முகத்தை காட்டாமலேயே, வாசகர்களின் மனதில் குடியிருப்பவர்.

ஞாயிறு அன்று, 'தினமலர்' நாளிதழ், வழக்கத்தை விட அதிகமாக விற்பனை ஆவதற்கு காரணம், 'தினமலர்' இதழின் இணைப்பான, 'வாரமலர்' இதழில், அந்துமணி எழுதும், கேள்வி - பதில் பகுதி, பா.கே.ப., மற்றும் அவ்வப்போது எழுதும் பயணக் கட்டுரைகள் தாம்.

தான் பார்த்ததை, கேட்டதை, படித்ததை, பக்குவமாக, 'தினமலர் - வாரமலர்' இதழில் எழுதி, அதன் தனித்துவத்தை தொடர்ந்து பாதுகாத்து வருவது, அவரது சிறப்பு. சாதாரண மனிதர்களோடு, அவர்கள் அறியாமல் பயணித்து, அவர்களின் கருத்துகளையும் பதிவு செய்து, ஆனந்தமடைய வைப்பவர்.

நாளிதழ் பணிகளில், முழுமையாக தன்னை அர்ப்பணிப்புடன் ஈடுபடுத்திக் கொள்பவர்; நல்ல செய்தியை கொடுக்கும் நிருபரை, உடனே போனில் அழைத்து, பாராட்டுவார்.

தனக்கு பழக்கமானவராக இருந்தாலும், அவர்களின் தவறுகளை அம்பலப்படுத்த தயங்காதவர்.

தன் முகம் காட்டாத அந்துமணி, இங்கே தன் அகத்தை திறந்து நம்மிடையே உரையாடுகிறார். ஆம்... தமிழ் இதழியல் வரலாற்றிலேயே, முதன் முறையாக அவரது பேட்டி இதோ...

பொதுவாகவே, தன்னை வெளிப்படுத்திக் கொள்வதில், முனைப்பாக இருப்பது மனிதர்களின் குணம்; நீங்கள், உங்களின் முகத்தை மறைத்து செயல்படுகிறீர்கள். அப்படி ஒரு ஞான உணர்வு உங்களுக்கு எப்படி ஏற்பட்டது?

(சிரிக்கிறார்) இது, ஞான உணர்வா என்று தெரியவில்லை; நான் எப்போதும், சுதந்திர பறவையாக இருக்க விரும்புபவன். சாதாரண சாலையோர கடைகளில் சாப்பிடுவேன்; தேநீர் குடிப்பேன்.

உதாரணமாக, திருச்சி பேருந்து நிலையம் அருகே, ரெட்டியார் கடை என்று, ஒரு கைவண்டி கடை இருந்தது. சாலையோரத்தில் இருக்கும் அந்த கடை பெஞ்சில் உட்கார்ந்து சாப்பிடுவது, எனக்கு மிகவும் பிடிக்கும். இயல்பாய், சுதந்திரமாய் வாழ ஆசைப்படுகிறேன்; என் முகம் பிரபலமாகி விட்டால், இந்த சுதந்திரம் பறிபோய் விடும். ஆகவே, முகத்தை மறைக்க, அந்துமணியை துணைக்கு அழைத்துக் கொண்டேன்.

முதன் முதலில் எப்போது அந்துமணியாக வாசகர்களிடையே வலம் வர ஆரம்பித்தீர்கள்... அப்போது உங்கள் வயது?

அப்போது, எனக்கு, வயது: 27.

மீண்டும் அதே கேள்வி தான்... பொதுவாக, அந்த இளம் வயதில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பாதது வித்தியாசமாக, ஆச்சரியமாக இருக்கிறது. அதனால்தான் கேட்டேன், ஞானி போன்ற மனநிலையா?

(மீண்டும் சிரிப்பு) என்னை ஞானியாக்காமல் விட மாட்டீர் போலிருக்கிறது... நான் மனிதன்; இயல்பான மனிதன்; அவ்வளவே! ஏற்கனவே சொன்னது போல, சுதந்திரம் பறிபோய்விடக் கூடாது என்பதற்காகவே, இந்த முகமூடி!

அந்துமணி முகம் உருவானது எப்படி?

ஆரம்பத்தில், மனதிற்குள் அந்துமணியின் முகம், 'அவுட் லைனாக' உருவானது; அதை நான், ஓரளவுக்கு ஓவியமாக வரைந்து கொடுத்தேன். அப்போது, தினமலர் இதழில், பீட்டர் என்ற ஓவியர் - கார்ட்டூனிஸ்ட் இருந்தார். அவர், அந்துமணிக்கு முழுமையான வடிவம் கொடுத்தார்; லென்ஸ் மாமாவும் அவரது கைவண்ணம் தான்.

உங்களது பார்வையில் இதழியல் என்றால் என்ன?

மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது தான் இதழியல்; எல்லா துறைகளை பற்றியும், மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். இதையும் தாண்டிய முக்கியமான பணி, அரசியல்வாதிகளை அடக்கி வைப்பது. ஜனநாயக அமைப்பில், தலைமை இடத்தில் இருப்பவர்கள், அரசியல்வாதிகள். அவர்களில் நல்லவரும் உண்டு; நற்குணம் குறைவானோரும் உண்டு. அந்த நற்குணம் குறைவானோரின் செயல்கள், நாட்டையே பாதித்துவிடும்.

ஆகவே, அரசியல்வாதிகளின் செயல்பாடுகளை கண்காணித்து, அது குறித்து பாராட்ட வேண்டியிருந்தால் பாராட்டுவதும், விமர்சிக்க வேண்டியிருந்தால் விமர்சிப்பதும் ஒரு இதழாளனின் முக்கிய கடமை. இதில், கட்சி சார்போ, வேறு எந்த சார்போ இருக்கக் கூடாது.

தினமலர் இதழை பொறுத்தவரை, செய்தியை சொல்வதோடு இன்றி, தன் கோணத்தில் வாசகர்களை இழுக்கிறது என்ற விமர்சனமும் உண்டு; ஒரு செய்தித்தாள் என்பது செய்திகளை கொடுக்க வேண்டியது மட்டும் தானா?

அப்படி இல்லை; செய்தியை, வெறும் செய்தியாகக் கொடுப்பது மட்டும், நம் பணி அல்ல. உதாரணமாக, ஒரு விபத்து ஏற்படுகிறது என்று வைத்துக் கொள்வோம்... 'இந்த நேரத்தில் இந்த வாகனம் விபத்துக்குள்ளானது; அதில் பயணம் செய்த இத்தனை பேருக்கு காயம், இத்தனை பேர் மரணம்...' என்று சொல்வது மட்டும் ஊடகத்தின் பணி அல்ல; அந்த விபத்து ஏன் ஏற்பட்டது, சாலை மோசமா, வாகனம் சரியில்லையா, ஓட்டுனர் மீது தவறா என்பதையும் ஆராய்ந்து, அதையும் வெளிப்படுத்த வேண்டும். அப்போது தான் மீண்டும் அப்படியொரு விபத்து நடக்காமல் இருக்க வாய்ப்பு ஏற்படும்.

அதேபோல, அரசு ஒரு திட்டம் கொண்டு வருகிறது என்றால், அதை செய்தியாக மட்டும் வெளியிடாமல், அதனால் ஏற்படும் விளைவுகளை... அது நன்மையோ, தீமையோ... பாரபட்சமின்றி மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். அப்போது தான் நல்ல திட்டம், மேலும் நன்மை தரும் திட்டமாக மலரும்; நல்லதில்லை என்றால் தடுக்கவும் முடியும்.

ஆகவே, நியூஸ் மட்டுமல்ல; வியூசும் முக்கியம். அந்த வியூ எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரே நிபந்தனை தான்; அது, மக்கள் மீது கொண்ட அக்கறை...

— அடுத்த இதழில்.






      Dinamalar
      Follow us