PUBLISHED ON : பிப் 09, 2025

'பணம் படைத்தவன் படத்தின், பாடல் காட்சியின் போது, நான் அணிந்திருந்த உடையைப் பார்த்த எம்.ஜி.ஆர்., அந்தக் காட்சியை படமாக்குவதை நிறுத்த சொன்னார். 'காஸ்ட்யூமரை' வரவழைத்து, காதில் ஏதோ சொன்னார். அவர் உடனே உள்ளே சென்றார்.
'அப்போது என்னை அருகில் அழைத்து, 'ஜானகி, நீ குடும்பப்பாங்கான படங்கள்ல அதிகமா நடிக்கிறே. உனக்கு பெண்கள் மத்தியில நல்ல பேர் இருக்கு. குணச்சித்திர நடிகையா இருக்கே. அதனாலே, இந்த உடை உன்னை கொஞ்சம் ஆபாசமாக காட்டுது. வேற உடை போட்டுக்கோ...' என்றார்.
'அவருடைய தொழில்நுட்ப அறிவு மற்றும் அக்கறையை கண்டு நெகிழ்ந்தும், மகிழ்ந்தும் போனேன். பின், அவர் தேர்வு செய்த ஆடையை அணிந்து, அந்த பாடல் காட்சியில் நடனமாடினேன்...' என்று எம்.ஜி.ஆர்., பண்பை விவரித்தார், ஜானகி.
இன்னொரு சம்பவம் என்னவென்றால், ஒரு சமயம் நான் பண பிரச்னை காரணமாக, கஷ்டமான சூழ்நிலையில் இருந்ததை, எப்படியோ அறிந்திருக்கிறார், எம்.ஜி.ஆர்.,
எதிர்பாராதவிதமாக என்னை சந்தித்த போது, 'என்ன ஜானகி கஷ்டமாக இருப்பதாக கேள்விப்பட்டேன். ஏதாவது உதவி தேவையா?' என, என் அருகில் வந்து மெதுவான குரலில், அன்பாக கேட்டார்.
'எனக்கு என்னச் சொல்வது என்றே தெரியவில்லை. கூடப்பிறந்தவர்களே கஷ்டமான நிலையில் கண்டுகொள்ளாமல் இருக்கும் போது, இவர் இப்படிக் கேட்டதை பற்றி என்ன சொல்வது? உண்மையிலேயே அவர் வள்ளல் தான்.
ஆனால், அவர் சொன்னதே போதும் என, அவரிடம் எந்த உதவியும் பெறவில்லை. காரணம், நான் எவ்வளவு கஷ்டமான சூழ்நிலையில் இருந்தாலும், யாரிடமும் உதவி கேட்கும் பழக்கம் எனக்கு இல்லாதிருந்தது.
திரை உலகில் எனக்கு இரண்டு சகோதரர்கள். மூத்த சகோதரர் எம்.ஜி.ஆர்., இரண்டாம் சகோதரர் சிவாஜி என்கிறார், ஜானகி.
பிரபல ஹிந்தி நடிகை மீனாகுமாரியைப் போல, 'ட்ராஜிடி' வேடங்களில் தான், ஜானகி நன்கு சோபிப்பார் என, அந்த நாளில் கூறி வந்தனர், பலர்.
தன்னால் காமெடியிலும் நன்றாக நடிக்க முடியும் என்பதை, பாமா விஜயம் படத்தின் மூலம் நிரூபித்தார். இதன் தெலுங்கு மற்றும் ஹிந்தி பதிப்புகளிலும் அவரையே நடிக்க வைத்தார், இயக்குனர் கே.பாலசந்தர். ஹிந்தியில், ஜானகியே, 'டப்பிங்' பேசினார்.
'கிளாமர்' வேடத்திலும் சிறப்பாக, தன் நடிப்பை வெளிப்படுத்த முடியும் என்பதை, புதிய பறவை படம் மூலம் உணர்த்தினார், ஜானகி. அந்த கேரக்டர் பரவலாக பேசப்பட்டது.
சிவாஜி கணேசனுடன், ஜானகி நடித்த, பாவை விளக்கு, படிக்காத மேதை, பாலும் பழமும், மகாகவி காளிதாஸ், மோட்டார் சுந்தரம் பிள்ளை, பார் மகளே பார், புதிய பறவை, உயர்ந்த மனிதன், பாபு.
பார்த்தால் பசி தீரும், நீதி, வடிவுக்கு வளை காப்பு, திருமால் பெருமை, பச்சை விளக்கு, எங்க ஊரு ராஜா, எங்கள் தங்க ராஜா, மனிதனும் தெய்வமாகலாம், காவல் தெய்வம் மற்றும் லட்சுமி கல்யாணம் போன்ற குடும்பப் படங்கள், பெரும் வரவேற்பை பெற்றன.
அதில் அவர் ஏற்ற வேடங்கள் ஒவ்வொன்றும் சிறப்பானவை.
சிவாஜியுடன் நடிக்கும் போது, தன்னுடைய நடிப்புத்திறன் மேலும் சுடர்விட்டு பிரகாசித்தது. தன் நடிப்பை மேலும் மெருகேற்றிக் கொள்ள பயன்பட்டதாக கருதினார்.
'படிக்காத மேதை படத்தில், சிவாஜிக்கு ஜோடியாக நடிக்க, பல எதிர்ப்புகளுக்கு மத்தியில், பலத்த போட்டிகளுக்கு இடையில் தான், நான் ஒப்பந்தம் செய்யப்பட்டேன். சிவாஜிக்கு ஈடு கொடுத்து நடிக்கக் கூடிய கதாநாயகிகளே, அப்போது அவருக்கு தேவைப்பட்டனர்...' என்கிறார், ஜானகி.
சிவாஜி நடித்த முதல் படம், பராசக்தி வெளியான அதே நாளில், (அக்டோபர் 17, 1952 ) ஜானகி நடித்த முதல் தமிழ் படம், வளையாபதி வெளியானது.
இதே போல சிவாஜிக்கும், ஜானகிக்கும் ஒரு விஷயத்தில் ஒற்றுமை உண்டு. உணவை ருசித்து சாப்பிடுவதில் இருவரும் வல்லவர்கள்.
மோட்டார் சுந்தரம் பிள்ளை படத்தில், சிவாஜியும், அவர் மனைவியாக ஜானகியும் போட்டி போட்டு நடித்து, பெரும் பாராட்டைப் பெற்றனர். அதன் பின், 'குடும்பத் தலைவி வேடமானால், கூப்பிடு ஜானகியை...' என, சொல்ல வைத்த படம் அது.
ஜானகியிடம், 'இருபது படங்களில், சிவாஜியுடன் சேர்ந்து நடித்திருக்கிறீர்கள், சிவாஜி எப்படிப்பட்டவர்?' என, கேட்டனர்.
அதற்கு, ஜானகி கூறியதாவது:
சிவாஜி பழகுவதற்கு மிக இனிமையானவர், படப்பிடிப்பின் போது நடிப்பில் கவனமாக இருக்க வேண்டும் என்பார். வேலை நேரத்தில் வேலை. அதேபோல விளையாட்டு நேரத்தில் விளையாட்டு. இதுதான் அவரது பாலிசி.
உணவு இடைவேளையின் போது, அரட்டை அடித்து சிரித்து கொண்டிருப்போம். அது முடிந்து, சிவாஜி செட்டுக்கு போய்விட்டார் என்றதும், பரபரப்பு தொற்றிக் கொள்ளும். நான் பயப்படுவேன். காரணம், அவருடைய அசாதாரணமான திறமை, அபரிமிதமான தொழில் பக்தி.
யுத்தத்துக்குப் போவது போல என்னை, நான் தயார் நிலையில் வைத்துக் கொள்வேன். உணவு இடைவேளையில் அரட்டை அடித்த சிவாஜியாக அப்போது அவர் இருக்க மாட்டார்; அந்தப் பாத்திரமாகவே மாறியிருப்பார்.
காட்சி முடிந்த பின், அவர் கிண்டல் பண்ணி தமாஷாக பேசுவார். நான் சில சமயங்களில் தாமதமாக படப்பிடிப்புக்கு சென்றால் அவரிடம், 'சாரி' கேட்டுக் கொள்வேன். 'வீட்டில் பிரச்னை. அதனால் தான் தாமதம் ஆகிவிட்டது...' என்பேன்.
'சரி' என, மெதுவாக தலை அசைப்பார். வசனம் பேசுவதில் தனி பாணியை உருவாக்கியவர், அவர் தான்.
திருவிளையாடல் படத்தில், கடற்கரையில் நடந்து போவாரே... என்ன நடை? எத்தனை அற்புதமான காட்சி, அது. மாபெரும் நடிகராக தான், அவரை நான் பார்க்கிறேன்.
அவர் கதாபாத்திரங்களை, 'ஸ்டெடி' பண்ணுவதில்லை. கதை, வசனகர்த்தாக்களை, 'ஸ்டெடி' பண்ணுவார். அவர்கள், தங்கள் மனதில் என்ன நினைத்து எழுதியிருக்கின்றனர் என்பதை ஆராய்வார்.
இப்படி கூறினார், ஜானகி.
ஆனால், நிஜத்தில் சிவாஜி எப்படி?
— தொடரும்சபீதா ஜோசப்
இந்திய தேசிய திரைப்பட விருதுகள் குழுவில், இரண்டு முறை நடுவர்
உறுப்பினராகவும், மாநில தெலுங்கு திரைப்பட விருதுகள் குழுவின் தலைவராகவும்
பணியாற்றியுள்ளார், ஜானகி.