
அன்புள்ள அம்மாவுக்கு —
நான், 32 வயது பெண். கணவர் வயது: 37. எங்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். நிறுவனம் ஒன்றில் மேலதிகாரியாக உள்ளார், கணவர். நான், வங்கி ஒன்றில் பணிபுரிகிறேன். நாங்கள் இருவரும் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டோம்.
என் மீதும், குழந்தைகள் மீதும் மிகவும் அன்பாக இருப்பார். எங்கள் தேவைகளைப் பார்த்து பார்த்து செய்வார். எந்த குறையும் வைக்க மாட்டார், கணவர்.
ஆனால், அவரிடமிருக்கும் ஒரு குறை, நாங்கள் வெளியே கடைக்கோ, கோவிலுக்கோ எங்கு சென்றாலும், வழியில் தென்படும் இளம் பெண்களை முறைத்து முறைத்து பார்ப்பார். எனக்குத்தான் தர்ம சங்கடமாக இருக்கும். பல முறை கண்டித்தும், 'என்னையும் மீறி கண்கள் அவர்கள் மீது சென்று விடுகிறது. நான் என்ன செய்யட்டும்...' என்பார், பரிதாபமாக.
சமீபகாலமாக, யாரோ ஒரு பெண்ணுடன் சுற்றுவதாக, அரசல் புரசலாக தகவல் கேள்விப்பட்டேன். அவரிடமே நேரில் கேட்கலாம் என்றால், அந்த செய்தி பொய்யாக இருந்து, 'என் மீதே சந்தேகப்படுகிறாயா?' என, என் மீதே குற்றம் சுமத்துவாரோ என்ற அச்சம் எழுகிறது.
அவர், ஆபிசிலிருந்து காலதாமதமாக வீட்டுக்கு திரும்பினால், சந்தேகப்பட வேண்டியிருக்கிறது. அவர் என்னவோ இயல்பாகத்தான் இருக்கிறார். என்னால் தான் முடியவில்லை. உண்மையை அறிந்து கொள்ளாவிட்டால், நிம்மதி இருக்காது என, தோன்றுகிறது.
எனக்கு நல்ல ஆலோசனை தாருங்கள் அம்மா.
— இப்படிக்கு
உங்கள் மகள்.
அன்பு மகளுக்கு —
ஆண்களில் பல வகை உண்டு.
* தன் மனைவியைத் தவிர வேறு யாரையும் ஏறெடுத்தும் பார்க்காத சீதாராமர்கள்
* பணம், புகழ், அதிகாரத்தால் பெண்களை மயக்கும் ஆண்கள்
* நகைச்சுவையாய், பெண்ணுரிமை போராளியாய் பேசி, பெண்களை மடக்கும் ஆண்கள்
* பெண்களை மயக்கும் எந்த வித்தைகளும் தெரியாத, பெண்களை பார்த்து பார்த்து ஏங்கி வீங்கும் சைவ சிங்கங்கள்
* பாலியல் வன்முறையில் ஈடுபடும், மிருகவெறி ஆண்கள்.
உன் கணவர், ஒரு சைவ சிங்கம். வேட்டையாடவும் துணியாத, வேட்டையாடவும் தெரியாத கோடிக்கணக்கான சைவ சிங்கங்களில், உன் கணவரும் ஒருவர்.
வேட்டையாடுதல் என்ற வார்த்தை பிரயோகம், பெண்களை கண்ணியக்குறைவு படுத்துவது ஆகும். மேற்சொன்ன வாக்கியங்களை ஆணாதிக்க வார்த்தைகளில் வடிவமைத்தேன்.
திருமண பந்தம் மீறிய உறவுகளுக்கு, அதிகம் செலவு பண்ண வேண்டும். நிறைய பொய் சொல்ல வேண்டும். திருமண பந்தம் மீறிய உறவுகளில் ஈடுபடும், ஆண் - பெண் இருவர், குடும்பங்களும் சிதறி சின்னாபின்னமாகிப் போகும் என்ற ஆதார பயம் நிறைய ஆண்களுக்கு உண்டு.
தினம், 10 மணி நேரம் வேலை பார்க்கும் ஆண்களுக்கு, 'மேல் மெனோபாஸ்' வந்து விடுகிறது. அதனால், அவர்கள் பெண்களை கனவிலும் நினைப்பதில்லை. திருமணமாகி இரண்டு குழந்தைகள் பெற்று விட்டால், தங்களுக்கு வயதாகி விட்டதாகவும், மனைவியுடனான தாம்பத்தியத்துக்கும் பிற மகளிர் உறவுக்கும் தாங்கள் முற்றிலும் தகுதியற்றவர்கள் என நினைக்கும் சில, 'பூமர் அங்கிள்'களும் உண்டு.
உன் கணவருக்கு பிற மகளிர் தொடர்புண்டா என, கண்டுபிடிக்க, சில உபாயங்களை கூறுகிறேன்...
* கணவரின் மொபைல்போன் புக்கை ஆராய். எதாவது சங்கேத வார்த்தையுடன் எண்களை சேமித்துள்ளாரா என பார்
* தாம்பத்தியத்தில் ஈடுபாடு குறைந்திருக்கிறாரா?
* புதிதாக தன்னை அழகுபடுத்தி கொள்ள ஆரம்பித்திருக்கிறாரா, 'சென்ட்' அடிக்கிறாரா?
* 'ப்யூட்டி பார்லர்' போகிறாரா?
* இடது ஒற்றை நகத்தில் நெயில் பாலிஷ் போடுகிறாரா, காதில் கடுக்கண் அணிகிறாரா?
* சரளமாக பொய் பேசுகிறாரா; தொப்பையை குறைக்க, 'ஜிம்' போகிறாரா; 'டயட்டிங்' இருக்கிறாரா; 'மவுத்வாஷ்' உபயோகிக்கிறாரா?
தவிர, கணவர் பணிபுரியும் அலுவலகத்தில் ஒரு உளவாளி அமர்த்தி, அவர் பணிக்கு வரும் நேரம், வீடு திரும்பும் நேரம் தெரிந்து கொள்.
அவர் வீடு திரும்பும் நேரம், ஒப்பனை கவர்ச்சியுடன் இருந்து, அவரை வரவேற்று மகிழ். தாம்பத்யத்தை நிறைவேற்று. சமையலில் அசத்து.
ஒரு நீரழிவு நோயாளி, கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இனிப்புகளை வேடிக்கை பார்ப்பதில், நோயாளிக்கோ, ஸ்வீட்ஸ் ஸ்வீட்ஸ் உரிமையாளருக்கோ, நோயாளியின் உறவினர்களுக்கோ என்ன பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடும்?
மிகவும் யோசிக்காதே. நடப்பு நொடியை இனிமையாக செலவழி.
— என்றென்றும் தாய்மையுடன்,சகுந்தலா கோபிநாத்.