/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
கவிதைச்சோலை: உன்னில் தொலைந்த என்னை...
/
கவிதைச்சோலை: உன்னில் தொலைந்த என்னை...
PUBLISHED ON : பிப் 09, 2025

இரவெல்லாம் ஒட்டி உறவாடி
விடியற் நேரம் நாணத்தோடு
விட்டுப்பிரிய மனமின்றி
ஒட்டிப்பிரியும்
புல் நுனி பனித்துளி போல்
உன் நினைவுகள்...
கரை மோதி
காதலியை காணாமல்
ஏமாற்றத்துடன்
கரையிலேயே காத்துக் கிடக்கும்
கடற் நுரை போல்
என் உயிர் உனக்காக
காத்துக்கிடக்கிறது!
கொலுசொலியில் பாதை
மயங்கி
கல் தட்டி நகக்கண் பெயர,
'அம்மா' என்று நான் அலற
'அச்சச்சோ' என
எனக்கே எனக்காய்
நீ வீசிய பரிவுப் பார்வை...
அன்று
உன் பார்வை தந்த
போதையில் அடிமையான
என் பாதங்கள்
உன்னை காணும் போதெல்லாம்
பாதையில் கற்களை தேடுகின்றன!
மார்கழி மாத பனிக்காற்று
என் முகத்தை வருடும்
பொழுதெல்லாம்
பேருந்தில் எதேச்சையாய்
என் முகத்தை வருடிய
உன் கூந்தலின் நினைவுகள்
என்னுள் பசலையை
கிளறிவிட்டு போய்விடுகிறது!
நீ குப்பையில் வீசியவைகள்
எல்லாம் பொக்கிஷமாய்
என்னுடன்...
உன் நினைவுகளில் என்னை நான்
புதுப்பிக்கிறேன்
சில சமயம்
தொலைத்துவிட்டு தேடுகிறேன்!
ஊர் எல்லையில்
தனியே நிற்கும்
சுமை தாங்கியைப் போல்
சுகமான உன் நினைவுகளை தாங்கி
காத்துக் கிடக்கிறேன்
உன் வருகைக்காக!
உன்னில் தொலைந்த
என்னை
என்னிடம் திருப்பித்தர
என்னிடம் நீ வருவாயா?
— எஸ்.ஏ.சரவணக்குமார், சென்னை.