
ஒரு சமயம் முகலாய மன்னரிடமிருந்து தப்பித்து, மாறு வேடத்தில் திரிந்து கொண்டிருந்தார், வீர சிவாஜி. ஒருநாள் அவருக்கு பசி எடுக்க, ஒரு வீட்டுக்கு சென்று, தனக்கு உணவிடுமாறு கேட்டார். அவ்வீட்டில் இருந்த கிழவிக்கு வந்திருப்பது, சிவாஜி என்பது தெரியாது.
அப்போது தான் சமையலை முடித்திருந்தாள், அந்த கிழவி. சிவாஜியை உட்கார வைத்து உணவைப் பரிமாறினாள். சிவாஜிக்கோ அபார பசி. சுடு சோற்றில் கையை வைத்து சாப்பிட முயன்றார். சோறு சுட்டதால், சிவாஜியால் நிம்மதியாக சாப்பிட முடியவில்லை.
'நீயும், சிவாஜியைப் போல விபரம் புரியாதவனாய் இருக்கிறாயே...' என, கிழவி சொன்னதும் திடுக்கிட்டு, அவளிடம் விபரம் கேட்டார், சிவாஜி.
'முதலில், சுற்றிலும் உள்ள சின்னச்சின்ன கோட்டைகளை கைப்பற்ற வேண்டும். பின்னர், மெல்ல மெல்ல பெரிய கோட்டைகளை கைப்பற்ற வேண்டும். அதைவிடுத்து, எடுத்த எடுப்பிலேயே பெரிய கோட்டைகளைப் பிடிக்க முயற்சி செய்தால் தோல்வி அல்லவா ஏற்படும்.
'முதலில், சாதத்தின் ஓரப்பகுதியிலிருந்து எடுத்து உண்ண வேண்டும். அதற்குள் நடுவில் இருக்கும் சோறு ஆறியிருக்கும். நீ அதைவிடுத்து எடுத்த எடுப்பிலேயே நடுசோற்றில் கையை வைக்கிறாயே... உன்னால் எப்படி சாப்பிட முடியும்?' என்றாள்.
ஒரு சாதாரண கிழவியிடமிருந்து போர் நுணுக்கத்தைக் கற்றுக் கொண்டார், சிவாஜி.
வாழ்க்கையில் யாரிடமிருந்து எதைக் கற்போம் என்பது யாருக்கும் தெரியாது. எனவே, யாரையும் துச்சமாக நினைக்கக் கூடாது. அப்படி நினைத்தால் பல வெற்றிகளை நாம் இழக்க வேண்டியிருக்கும்.
*****
தெருவிளக்கில் படித்து கஷ்டப்பட்டு, பின்னர் வாழ்க்கையில் முன்னேறியவர், கோபால கிருஷ்ண கோகலே. காந்திஜியின் அரசியல் குருவாகத் திகழ்ந்தவர்.
இவர், பள்ளியில் படித்த சமயத்தில் கணித ஆசிரியர் சில கணக்குகளை வீட்டில் செய்து வருமாறு கூறியிருந்தார்.
மறுநாள், மாணவர்களின் வீட்டுக் கணக்குகளை வாங்கி சரிபார்த்தார், கணித ஆசிரியர். கோகலேவைத் தவிர மற்ற அனைவரும் கணக்குகளைத் தவறாகவே போட்டிருந்தனர்.கோகலேவை மனதார பாராட்டினார், ஆசிரியர்.
ஆசிரியரின் பாராட்டைக் கேட்டு, மகிழ்ச்சி அடைவதற்கு பதிலாக அழத் துவங்கினான், சிறுவனான கோகலே.
'தம்பி, நான் உன்னை பாராட்டத்தானே செய்தேன். பிறகு நீ ஏன் அழுகிறாய்?' என்றார், ஆசிரியர்.
'ஐயா, இந்தக் கணக்கை எனக்காக வேறொருவர் செய்து கொடுத்தார். நான் இந்தக் கணக்குகளை செய்யவில்லை...' என்றான்.
கோகலேவின் நேர்மை, ஆசிரியரை நெகிழ்ச்சி அடையச் செய்தது. அவரின் நேர்மையை மிகவும் பாராட்டி மகிழ்ந்தார், ஆசிரியர்.
*****
புகழ்பெற்ற தொழிலதிபர் ஹென்றி போர்டு, ஒரு சமயம் லண்டனுக்கு சென்றிருந்தார். அங்கிருந்த ஒரு பிரபலமான ஹோட்டலில் தங்க, சாதாரண அறையை பதிவு செய்து வைத்திருந்தார்.
'ஐயா தாங்கள் மிகவும் புகழ்பெற்ற ஒரு தொழிலதிபர். இந்த ஹோட்டலில் இருக்கும் ஆடம்பரமான அறையில் தங்குவதற்கு பதிலாக நடுத்தரமான ஒரு அறையை தேர்வு செய்துள்ளீர்களே...' என்று, ஹென்றி போர்டிடம் கேட்டார், ஹோட்டல் மேனேஜர்.
'எனக்கு தேவையான அனைத்து வசதிகளும் இந்த அறையிலேயே கிடைக்கும்போது, நான் எதற்கு அதிக செலவு செய்து ஆடம்பரமான அறையில் தங்க வேண்டும்...' என்றார், போர்டு.
'ஐயா, சென்ற மாதம், தங்கள் மகன் இந்த ஹோட்டலில் தங்கினார். அவர், இந்த ஹோட்டலிலேயே மிகவும் அதிக வசதியுள்ள ஆடம்பரமான அறையிலேயே தங்கினார்...' என்றார்.
அதற்கு, 'அவன் கோடீஸ்வரன் ஹென்றி போர்டின் மகன். நானோ நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த ஒருவருடைய மகன்...' என்று சிரித்தவாறு பதில் கூறினார், ஹென்றி போர்டு.
சாமர்த்தியமான இந்த பதிலைக் கேட்டு, திகைத்து போனார், மேனேஜர்.
- நடுத்தெரு நாராயணன்