PUBLISHED ON : பிப் 09, 2025

குருகுலத்திலிருந்து வந்த பிரகலாதனிடம், 'குழந்தாய், நீ கற்ற கல்வியின் சாரத்தைக் கூறு...' என்று கேட்டான், அவன் தந்தை ஹிரண்யகசிபு.
'அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்த பரம்பொருளாய் எல்லா உயிர்களிலும் அந்தர்யாமியாக இருந்து பாதுகாப்பையும், ஆனந்தத்தையும் அளிக்கிற ஸ்ரீமந்நாராயணனிடம் பக்தி கொள்வதே, நான் கற்ற கல்வியின் சாரம்...' என்றான், பிரகலாதன்.
இதை கேட்டு கோபமுற்ற ஹிரண்யகசிபு, 'அடேய் முட்டாள்! என்ன கொழுப்பு உனக்கு. உன் சித்தப்பாவை கொன்ற, நம் குடும்ப விரோதியான, நாராயணனிடம் பக்தி கொள்வதே கல்வியின் சாரம் என்கிறாயே!
'திரிலோக சக்ரவர்த்தியான என்னை, மூன்று உலகங்களும் கடவுளாக வழிபடும் போது, என் மகனான நீ, நம் விரோதியிடம் பக்தி கொண்டுள்ளாயே... உனக்கு வெட்கமாக இல்லை?' என்றான்.
எந்த தயக்கமுமின்றி, 'தந்தையே, நான் கூறுவது சத்தியமே. ஸ்ரீமந்நாராயணன் பிறப்பு, இறப்பற்றவர், தேவர்களெல்லாம் அவரை அடிபணிந்து வணங்குகின்றனர்.
'நீங்களோ பிறந்து, இறக்கிற ஒரு சாதாரண ஜீவன். பிரம்மதேவனிடமிருந்து தங்கள் தவத்துக்கு கிடைத்த பரிசே, உங்கள் சக்தி. இறைவனின் சக்திக்கு முன், உங்கள் சக்தி ஒரு துாசி. அப்படிப்பட்ட உங்களை எப்படி நான், கடவுளாக ஏற்க முடியும்?' என்றான், பிரகலாதன்.
இதை கேட்டு கோபமுற்று, தன் பிள்ளைக்கே மரண தண்டனை விதித்துவிட்டான், ஹிரண்கசிபு. ஆனால், எந்த முறையிலும், பிரகலாதனைக் கொல்ல முடியவில்லை.
பிரகலாதனிடம், 'அடேய் மூடனே, என்ன மந்திர தந்திரம் செய்தாய்? யார் உன் மூளையை கெடுத்தனர்? நாராயணனே கடவுள் என்று யார் உனக்குச் சொல்லிக் கொடுத்தனர்?' என்று கேட்டான்.
'தந்தையே, நீங்களோ நாராயண துவேஷி, உங்கள் ஆட்சியில், ஒரு ஜீவனும் நாராயண நாமத்தை உச்சரிக்கக் கூட முடியாது. உங்களால் வகுக்கப்பட்ட கல்வித்திட்டத்தில் இறைபக்தி என்றால் என்ன என்ற கேள்விக்கே இடமில்லை.
'இப்படிப்பட்ட நிலையில், இவ்வளவு ஆபத்துகளை சந்தித்தும், என் மனம் நாராயணனிடம் பக்தி கொண்டிருக்கிறது என்றால், ஏதோ ஒரு ஜென்மத்தில் சாதுக்களின் பாததுளி, என் தலை மீது பட்டிருக்க வேண்டும்.
'யாரோ ஒரு மகான், இந்த நாராயண பக்தியை நான் பிறப்பதற்கு முன்பே எனக்கு பரிசாகக் கொடுத்திருக்க வேண்டும். ஒரு சத்குருவின் அனுகிரகம் இல்லாமல், ஒரு ஜீவனுக்கு இறைபக்தி வரவே முடியாது...' என்றான்.
உண்மையில், நடந்தது அதுவே. பிரகலாதனின் அன்னை கயாது, கர்ப்பம் தரித்திருந்தபோது, தவம் செய்ய சென்று விட்டான், ஹிரண்யகசிபு. எனவே, அவள், நாரத ரிஷியின் ஆசிரமத்தில் வசித்து வந்தாள்.
இறை தத்துவத்தையும், இறைவனின் மகிமையையும் கயாதுவுக்கு தினமும் எடுத்துரைப்பார், நாரதர். அப்போது சோர்வுற்று துாங்கி விடுவாள், கயாது. அவள் கருவிலிருந்த சிசு, இறைவனின் மகிமைகளையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கும். அந்த சிசுவே, பக்தப் பிரகலாதன்.
ஒரு ஜீவன், அறியாமை எனும் ஹிரண்ய கசிபுவால், பல துன்பங்களையும், பிறவிகளையும் சந்தித்தாலும், சத்குருவின் அருளால் ஞானநிலை பெற்று, தெய்வீக நிலை பெற முடியும் என்பதை, பிரகலாதனின் கதை நமக்கு உணர்த்துகிறது.
எனவே, சாதுசங்கமும், சத்குருவின் அருளும் வாழ்வுக்கு இன்றியமையாதவை என தெளிவோம். சத்சங்கத்தை நாடி, சத்குருவிடம் அடைக்கலம் புகுந்து இறைபக்தியுடன் ஆனந்தமாக வாழ்வோம்.
அருண் ராமதாசன்