
நம் உடலில் ஏற்படும் சிறு சிறு காயங்களுக்கு அவசர சிகிச்சையாக பெரும்பாலும், 'பேண்ட்--எய்டு' - ஒட்டும் தன்மையுடைய மருந்துப் பட்டை வாங்கி, அதில் ஒட்டுவோம்.
இதில் நடுவில் உள்ள மருந்து, காயத்தை ஓரிரு நாட்களில் குணப்படுத்தும். அதே நேரம் காயம்பட்ட பகுதியை துாசி மற்றும் ஈரத்திலிருந்து காப்பாற்றவும் செய்யும்.
கடந்த, 1921ல், 'பேண்ட்--எய்டு' கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்காவை சேர்ந்த, எர்லி டிக்சன் என்பவர் இதை கண்டுபிடித்தார். இவர் அப்போது, 'ஜான்சன் அண்டு ஜான்சன்' நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
அவர், 'பேண்ட்- - எய்டை' கண்டுபிடித்ததன் பின்னணியில் ஒரு சுவாரசியமான விஷயம் உள்ளது.
ஒவ்வொரு ஆண் மகனின் வெற்றிக்குப் பின்னால், ஒரு பெண் உண்டு என்பர். அந்தப் பொன்மொழி, டிக்சனின் வாழ்வில், 100 சதவீதம் பொருந்தும். ஏனெனில், இவர், 'பேண்ட்--எய்டு' கண்டுபிடித்ததற்கு அவர் மனைவி ஜோசப்பின் தான் காரணம்.
சமைக்க காய்கறி நறுக்கும்போது, அடிக்கடி விரலை கத்தியால் காயப்படுத்திக் கொள்வார், ஜோசப்பின். வெட்டுப்பட்ட கை விரலுக்கு ஏதாவது மருந்து தடவி விடுவார், டிக்சன். அடுத்த நாள் காய்கறி நறுக்கும் போது, மறுபடியும் அதே இடத்தில் கத்தி பட்டுவிடும். மீண்டும் ரத்தம், காயம்.
ஜோசப்பினை விட, டிக்சனுக்குத் தான் இது ரொம்பவும் எரிச்சலாக இருக்கும். தன் மனைவியின் காயத்துக்கு பாதுகாப்பான கவசம் மிகவும் அவசியம் என்பதை உணர்ந்தார்.
காயத்தையும் குணப்படுத்த வேண்டும்; அதேசமயம், மற்ற வேலையையும் செய்ய இயல வேண்டும். அதற்கு ஏற்றவாறு ஓர் ஒட்டும் மருந்து பட்டை உருவாக்க முடிவு எடுத்தார்.
அப்படி அவர் கண்டுபிடித்தது தான், 'பேண்ட்--எய்டு!' டிக்சனின் இந்த கண்டுபிடிப்பைப் பார்த்த அவரது நிறுவன முதலாளி, ஜேம்ஸ் ஜான்சன் அதையே பொதுமக்களுக்கு உதவும் பொருளாக தயாரிக்க திட்டமிட்டார்.
டிக்சன், 'பேண்ட் -- எய்டை' கண்டுபிடித்த போது, நியூஜெர்சி மாநிலத்தில், 'ஜான்சன் அண்டு ஜான்சன்' நிறுவனத்தில் பஞ்சு கொள்முதல் செய்பவராக பணிபுரிந்து கொண்டிருந்தார். 'பேண்ட்--எய்டு' பற்றி நிறுவனத்தாரிடம் எடுத்துச் சொன்னதும், அவரது திறமையை வெகுவாகப் பாராட்டி ஊக்குவித்தனர்.
'பேண்ட்--எய்டு' என்ற பெயரையே பதிவு செய்து, அந்தப் பெயரிலேயே உற்பத்தி செய்து வாடிக்கையாளர்களிடம் அறிமுகப்படுத்தினர்.
வாடிக்கையாளர்களிடையே பெருமளவில் வரவேற்பு கிடைத்து, அதன் உற்பத்தியும், விற்பனையும் பன்மடங்கு பெருகியது. இதற்கெல்லாம் காரணகர்த்தாவாக இருந்த டிக்சனுக்கு, நிறுவனத்தின் துணைத் தலைவர் பதவியை வழங்கியது, நிறுவனம்.
கடந்த, 1957ல், பணியிலிருந்து ஓய்வு பெறும் வரை, துணைத்தலைவர் பதவியிலேயே நீடித்தார், டிக்சன். 1961ல் இறந்தார், டிக்சன். அதுவரை, நிறுவனத்தின் இயக்குனர் வாரியத்தில் ஓர் உறுப்பினராக இருந்தார்.
ரா.அமிர்தவர்ஷினி